இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பேட்டிங் தான் படுமோசமாக இருந்தது. 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது.
குறிப்பாக தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவருமே நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க தவறிவிட்டனர். மயன்க் அகர்வாலாவது பரவாயில்லை; பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலும் சொல்லிவைத்தாற்போல ஒரே மாதிரி ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான விதம் அவரது பேட்டிங் டெக்னிக்கில் இருக்கும் பிரச்னையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியது.
பிரித்வி ஷாவின் தற்போதைய மோசமான ஃபார்ம் மற்றும் மோசமான பேட்டிங் டெக்னிக் ஆகியவற்றின் விளைவாக அவர் அடுத்த போட்டியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பில்லை. ஆனால் கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறக்கப்படுவார் என்பதுதான் கேள்வி.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, பிரித்வி ஷா கண்டிப்பாக 2வது டெஸ்ட்டில் ஆடமாட்டார். பிரித்வி ஷா நன்றாக ஆடவில்லை; ஸ்கோர் செய்யவில்லை; அவரது தன்னம்பிக்கையே குறைந்து போயிருக்கிறது. எனவே கண்டிப்பாக அவருக்கு பதிலாக வேறு தொடக்க வீரர் இறக்கப்படுவார். ராகுலை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. ஆனால் இந்திய அணி நிர்வாகம், ஷுப்மன் கில்லைத்தான் இறக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.