ஐபிஎல்லில் 13 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், நடந்து முடிந்த 13வது சீசனில் தான் முதன்முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதற்கு முக்கியமான காரணம், அந்த அணியின் நட்சத்திர வீரராகவும் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்த சுரேஷ் ரெய்னா ஆடாதது தான்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தவர். ஐபிஎல் 13வது சீசனில் ஆடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற ரெய்னா, பால்கனி இல்லாத அறை ஒதுக்கியதற்காக அணி நிர்வாகத்தின் மீதான அதிருப்தியின் விளைவாக அணி நிர்வாகத்துடன் கருத்து முரண் ஏற்பட்டதால், ஐபிஎல்லில் ஆடாமல் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே துபாயிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிவிட்டார்.
இதையடுத்து இனிமேல் ரெய்னா சிஎஸ்கேவில் ஆடமாட்டார். ரெய்னாவை தக்கவைக்கும் அல்லது இனியும் அவரை அணியில் நீடிக்கவைக்கும் மனநிலையில் சிஎஸ்கே இல்லை என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவிருப்பதால், அடுத்த பத்தாண்டுக்கான புதிய சிஎஸ்கே அணியை கட்டமைக்கும் முனைப்பில் அந்த அணி நிர்வாகம் உள்ளது. எனவே ரெய்னாவுக்கு இனிமேல் சிஎஸ்கே அணியில் வாய்ப்பில்லை என்ற பேசப்பட்டது.
இந்நிலையில், ரெய்னா குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகி ஒருவர் மும்பை மிரரில் கருத்து தெரிவித்தபோது, ரெய்னா இன்னும் சிஎஸ்கே அணியில் தான் இருக்கிறார். அவரை பிரியும் எண்ணமில்லை என்று அவர் தெரிவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.