
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியனானது. 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சாம்பியனானது. 2010 இங்கிலாந்து, 2012 வெஸ்ட் இண்டீஸ், 2014 இலங்கை, 2016 வெஸ்ட் இண்டீஸ், 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆகிய அணிகள் சாம்பியனாகியுள்ளன.
இதுவரையில் நியூசிலாந்து ஒரு முறை கூட சாம்பியன் டிராபியை கைப்பற்றவில்லை. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து வரும் ஜூன் 1 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் 9 ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது.
இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், கனடா, ஓமன், நமீபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாள், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நியூசிலாந்து, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
இதில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5 ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து ஜூன் 9 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து 12 ஆம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. 15 ஆம் தேதி கனடாவை எதிர்கொள்கிறது. இதில், தகுதி பெறும் அணிகள், குரூப் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இடம் பெறுவதற்கான போட்டி தற்போது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மூலமாக தொடங்கியுள்ளது. இதில், யாரெல்லாம் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் முதல் நியூசிலாந்து முதல் அணியாக டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதில், அனுபவம் வாய்ந்த கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான நியூசிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட், டெவோன் கான்வே, மேட் ஹென்ரி, டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பையில் வில்லியம்சனுக்கு இது 6ஆவது போட்டியாகவும், ஒரு கேப்டனாக 4ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையில் களமிறங்குகிறார். இதே போன்று டிரெண்ட் போல்ட் தனது 5ஆவது டி20 உலகக் கோப்பையில் விளையாடுகிறார். இதுவரையில் டிராபியை கைப்பற்றாத நியூசிலாந்து, இந்த முறை டி20 டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி கயானாவில் நடைபெறுகிறது.
நியூசிலாந்து விளையாடும் போட்டிகள்:
ஜூன் 7: நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் – கயானா
ஜூன் 12: நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் – டிரினிடாட்
ஜூன் 14: நியூசிலாந்து – உகாண்டா – டிரினிடாட்
ஜூன் 17: நியூசிலாந்து – பப்புவா நியூ கினியா – டிரினிடாட்
டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி வீரர்கள்:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க்ச் சேப்மேன், டெவோன் கான்வே, லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்ரி, டேரில் மிட்செல், ஜிம்மி நீசம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி