மத்திய அரசின் கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை புதுச்சேரி கோரிமேட்டில் இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான புற மற்றும் உள் நோயாளிகளும், நூற்றுக்கணக்கான அவசர சிகிச்சை நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.
ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு குழந்தைகள் நலப்பிரிவு, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி என பல்வேறு பிரிவுகள் இந்த வளாகத்தில் தனித்தனியாக உள்ளது. இங்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள், மருத்துவ அதிகாரிகள் என 700 பேரும், செவிலியர்கள் 2000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு விடுமுறை நாட்களில் ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. அதன்படி முதல் சீக்கிய குரு மற்றும் சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவ் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை புறநோயாளிகள் பிரிவு இயங்காது ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மத்திய அரசு விடுமுறை தினமான நாளை வெள்ளிக்கிழமை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.