
2021 தேர்தலில் தலைநகரிலும், தென் மாவட்டங்களிலும் திமுக கூட்டணி சுழற்றியதைப் போல கொங்கு மண்டலத்தின் பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி வளைத்தது. அதிலும், கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் வென்றெடுத்தது. ஆனால், இந்த முறை அப்படி விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
கோவைக்கென சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதல்வர், கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்தார். வழக்கு காரணமாக செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து விலகினாலும் தற்போதும் அவர் கோவை மாவட்ட பொறுப்பாளராகவே நீடிக்கிறார். கூடுதலாக மண்டல பொறுப்பையும் அவருக்கு வழங்கி இருக்கிறார் ஸ்டாலின். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக வந்ததுமே உள்ளாட்சித் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் கோவையில் திமுக-வை வெற்றி பெற வைத்து ஸ்டாலினின் குட் புக்கில் இடம்பிடித்தார் செந்தில் பாலாஜி.
இந்நிலையில், கோவையில் செந்தில் பாலாஜி தனக்கென ஓர் ஆதரவு வட்டத்தை உருவாக்கி புது கோஷ்டியை வளர்ப்பதாகவும் கட்சிப்பதவி, அரசுப் பதவிகளுக்கு அவர்களை முன்னிலைப்படுத்தவதாகவும் கோவை திமுகவினர் மத்தியில் இருந்து அதிருப்திக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.
கோவையில் காலம் காலமாக கட்சிக்காக உழைத்த உடன்பிறப்புக்கள், "திமுக எதிர்க் கட்சியாக இருந்தபோது எங்களைப் போன்றவர்கள் பதவியில் இருந்தோம். கட்சிக்காக பல்வேறு போராட்டங்களில் பெங்கெடுத்து சிறை சென்றிருக்கிறோம். ஆனால், திமுக ஆளும் கட்சியாக வந்த பிறகு படிப்படியாக எங்களை ஓரங்கட்டி எங்களது பதவிகளையும் பறித்துவிட்டார்கள். செந்தில் பாலாஜி திமுகவுக்கு வந்த பிறகு, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.
என்ன உத்தரவாதம் கொடுத்து அவர்களை எல்லாம் கட்சியில் சேர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. பிற கட்சிகளில் ஆக்டிவாக இருப்பவர்கள் மட்டுமல்லாது அங்கே ஓரங்கப்பட்டவர்களையும் திமுகவுக்கு கூட்டி வந்து பிரதானப்படுத்துகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வந்த வேகத்திலேயே கட்சிப் பதவிகளையும் கொடுக்கிறார்கள். இவர்களுக்காக, 'ஒரிஜினல்' திமுகவினரை டம்மி பொறுப்புகளுக்கு மாற்றுகிறார்கள். சிலரை பொறுப்புகளை விட்டும் தூக்குகிறார்கள்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யான ஏ.பி.நாகராஜன், முன்னாள் மேயரான கணபதி ப.ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,வான ஆறுகுட்டி, முன்னாள் கவுன்சிலர் செந்தில் என்ற கார்த்திகேயன், தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ.,வான தினகரன், முன்னாள் மக்கள் நீதி மய்ய நிர்வாகியான மருத்துவர் மகேந்திரன், நாதகவில் இருந்துவந்த ராஜீவ்காந்தி உள்ளிட்ட அனைவருமே கட்சியில் சேர்ந்த வேகத்தில் திமுகவில் உயர்ந்த இடத்துக்கு உயர்த்தப்பட்டார்கள். கணபதி ராஜ்குமாரை தனது சிபாரிசில் எம்.பி.,யாகவே ஆக்கினார் செந்தில்பாலாஜி. ஆறு குட்டியின் மகன் அசோக் கோவை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2021 தேர்தலில் திமுகவுக்கு எதிராக போட்டியிட்டு வாக்குகளை பிரித்த மகேந்திரன் இப்போது திமுக ஐடி விங்க் மாநில இணைச் செயலாளராக இருக்கிறார். நாதக ராஜீவ்காந்தி, திமுக மாநில மாணவரணி செயலாளராக இருக்கிறார். தேமுதிக வரவான தளபதி முருகேசன் இப்போது கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர். ஏன் இந்தப் பதவிக்கெல்லாம் காலங்காலமாக கட்சிக்காக உழைத்த அசல் திமுகவினர் யாருமே லாயக்கில்லையா? மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்குத் தான் முன்னுரிமை தர வேண்டுமா?
முதல்வரோ, துணை முதல்வரோ, மற்ற அமைச்சர்களோ கோவைக்கு வந்தால் அவர்களைப் பார்க்க எங்களுக்கு அனுமதி கிடைக்கிறதோ, இல்லையோ... மேற்கண்ட ஜம்பிங் மாஜிக்கள் எளிதாகச் சந்தித்துவிடுகிறார்கள். அதேசமயம், இவர்களில் பலரும் செந்தில்பாலாஜி கோவைக்கு வரும்போது மட் டும் வந்து சீன் போட்டுவிட்டு மற்ற நேரங்களில் தங்களது வேலைகளைப் பார்க்கப் போய்விடுகிறார்கள்.
இந்த நிலையில், 2026 தேர்தலில் கோவையில் சீட் பிடிக்கவும் இந்த மாஜிக்களில் சிலர் இப்போது ஆள்பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் சிலர், தங்களுக்கே சீட் கிடைத்துவிட்டது போல் கட்சியினர் மத்தியில் உருட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். இப்படி சீசனுக்கு வந்து போகிறவர்களை தேடிப்பிடித்து அரசு, கட்சிப் பதவிகளுக்கு சிபாரிசு செய்வதால் வழிவழியாக கட்சிக்காக உழைத்துத் தேய்ந்தவர்கள் எல்லாம் ஒதுங்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை எல்லாம் உற்சாகப்படுத்தி, உரிய அங்கீகாரத்தை அளிக்காமல் போனால் 2026 தேர்தலிலும் கோவையில் திமுக தலைமை நினைப்பது சாத்தியமாகாமல் போய்விடும்.
அதே போல் ஈரோடு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் காலம் காலமாக கட்சிக்காக உழைத்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியை விட்டே விலகிவிட்டார். இதற்கு யார் காரணம் என திமுக-விற்கே தெரியும். அந்த அமைச்சரும் 'உள்குத்து' வேலைகளில் தற்போது மீண்டும் இறங்கிவிட்டார். இதே நிலை நீடித்தால் கொங்கு மண்டலத்தில் திமுக தலைமை போடும் கணக்கு தப்பு கணக்காகிவிடும்’’ என்கிறார்கள்.
வந்தவர்களுக்கு பதவி... வளர்த்தவர்களுக்கு கல்தாவா? என உச்சகட்ட அதிருப்தியில் இருக்கும் கொங்குமண்டல உடன்பிறப்புகளுக்கு கொங்கு மண்டலப் பொறுப்பாளராக இருக்கு செந்தில் பாலாஜி என்ன செய்யப் போகிறார் என்பதே கேள்வியாக இருக்கிறது.