நயினார் நாகேந்திரனின் சொந்த ஊரான திருநெல்வேலி பகுதிகளில், அவரது பெயரைச் சொல்லி யாரும் கூப்பிட மாட்டார்கள். பண்ணையார் என்றுதான் அன்பாக அழைப்பார்கள். நயினார் நாகேந்திரன் குடும்பம் அவ்வளவு செல்வச் செழிப்பான குடும்பம். திருநெல்வேலியில் பெரியளவில் பால்பண்ணையை நடத்தி வந்ததாலும் நயினார் நாகேந்திரனை பண்ணையார் என அழைக்க ஆர்மபித்தனர். அப்போது முதல் அவரை பண்ணையார் என்றே அப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர். ஜெயலலிதா, திருநெல்வேலியில் மாநாடு நடத்த இடம் தேடிக் கொண்டு இருந்தபோது 100 ஏக்கர் நிலத்தை சொந்தமாகவே வாங்கி ஜெயலலிதாவையே திகைக்க வைத்தவர் நயினார் நாகேந்திரன். தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். தொழில்களில் வரும் வருமானத்தை பாதுகாக்கவே அரசியலில் வாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர்.
1990- 96 வரை அமைச்சராக இருந்த நயினார் அப்போது சேர்த்த சொத்துக்கள், பணத்தை வைத்து தற்போது 30 வருடத்தில் பல நூறு கோடிகளுக்கு அதிபதி ஆகிவிட்டார். இவர் திருநெல்வேலி பகுதியில் ஹோட்டல், லாட்ஜுகள், கேரளாவில் ரிசார்ட், விவசாய நிலங்கள், வாடகை வருமானம் என வருமானத்தை குவித்து வருகிறார். கடந்த 10 வருடத்திற்கு மேலாக ரியல் எஸ்டேட் தொழிலிலும் கொடிகட்டி பறக்கிறார். நயினாரின் திருநெல்வேலி வீடு மட்டுமல்ல, சென்னை, ஈசிஆர் பகுதியிலுள்ள வீடும் மிகப்பிரமாண்டமாக, திருமண மண்டபம் போல இருக்கும். எக்மோரில் இருக்கும் ப்ளூ டையமண்ட் ஹோட்டலும் அவருடையதே..