
"முதலில் விஜயை காப்பாற்ற வேண்டும். திமுகவை எதிர்க்கும் விஜய் ஏன் அதன் கூட்டணியான, காங்கிரஸை விமர்ச்சிப்பதில்லை. விஜயின் மாநாட்டிற்கு எந்த அர்த்தமும் இல்லை’’ என நடிகரும், விஜய்க்கு நெருக்கமானவருமான தாடி பாலாஜி விமர்சித்துள்ளார்.
தவெகவில் முக்கிய பதவிகள் அறிவிக்கப்பட்டபோது, ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் போன்றவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், எதிர்பார்ப்போடு காத்திருந்த தாடி பாலாஜிக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. இதனால், அவர் அதிருப்தி அடைந்ததாகவும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் "அவளோ புது பாய் பிரண்டோடு ஹேப்பியா இருக்கா.. தற்குறி நானோ அவளின் நினைவோடு" என்று மீம் பதிவிட்டு விஜய்யையும், ஆதவ் அர்ஜுனாவையும் விமர்சித்தார்.
பின்னர், தாடி பாலாஜி ஒரு வீடியோவில் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எதேச்சையாக பதிவிடப்பட்டது என்றும், விஜய்யை விமர்சிக்கும் நோக்கம் இல்லை என்றும், அவர் விஜய்யின் நண்பராகவே பணியாற்றுவதாகவும் தெளிவுபடுத்தினார். தாடி பாலாஜி, தவெகவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, திருவள்ளூரில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். விஜய்யின் நற்பணிகளுக்கு ஆதரவாக எப்போதும் இருப்பேன் என்று கூறி வருகிறார். இந்நிலையில் மதுரையில் நடந்த தவெக மாநாடு குறித்தும், விஜய் ஆற்றிய உரையை பற்றியும் விமர்சித்துள்ளார்.
‘‘தமிழகத்தை காக்க வந்த தலைவா..! முதலில் உங்களுடன் இருப்பவர்களிடம் இருந்து உங்களை காப்பாற்ற வேண்டும்’’ என பதிவிட்டு இருந்தார். இது குறித்து பேசிய தாடி பாலாஜி, ‘‘விஜய்க்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. மாநாட்டில் அத்தனை லட்சம் பேர் விஜய் என்ன பேசுவார் என்பதை பார்க்க வருகிறார்கள். ஆனால், விஜயின் பேச்சு விக்கிரவாண்டி மாநாட்டில் அமைந்தது போல் இல்லை. அவரது பேச்சு டல்லாகிவிட்டது. முதல் மாநாட்டில் பயங்கர பவராக பேசினார். ஆனால் இந்த மாநாட்டில் அவரது பேச்சு சுத்தமாக டல்லடித்து விட்டது. அதனால், நான் தனிப்பட்ட முறையில் அப்செட் ஆகி விட்டேன்.
விஜய் பற்றி எனக்கு 100% தெரியும். அவரது முடிவுகள் சில விஷயங்களில் சரியாக இருக்கும். ஆனால், சமீபத்தில் அவர் மிகவும் குழப்பமாக இருக்கிறார் என்று தெரிகிறது. ஒண்ணுமே இல்லாத பாலாஜிக்கு 1008 பிரச்சனைகள் இருக்கும் போது, விஜய் கட்சி ஆரம்பிக்க ஆரம்பித்து இருக்கிறார். அவருக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்? இப்போது விஜய் மீது அவர்கள் அப்பா, அம்மாவிற்கு இருக்கும் ஆதங்கம்தான் எனக்கும் இருக்கிறது. இதை நேரடியாக சொல்வதற்கு எனக்கு விஜயை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பலபேர் அவரை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பர்சனலாக பேசுவதற்கு முடியவில்லை.
ஒரு கட்டத்திற்கு பிறகு அவரை பார்ப்பதற்கே அனுமதி கிடைப்பதில்லை. நான் அவரை சந்திக்க இரண்டு மூன்று தடவை முயற்சி எடுத்து இருக்கிறேன். அவர் என்னை பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார். அவரை நேரடியாக பார்க்கும் போது ஒன் டு ஒன் உட்கார்ந்து இப்படித்தான் இருக்கிறது, இது இதுதான் நடக்கிறது என்று பேச வேண்டும். கவின் கொலை, அஜித்குமார் கொலை போன்ற இடங்களுக்கு எல்லாம் சென்று இருக்கிறார். இந்த வழக்குகளைப்பற்றி எல்லாம் மாநாட்டில் அவர் பேசி இருக்கலாமே.
மீண்டும் மீண்டும் கட்ச தீவை மீட்க வேண்டும். நீட்டை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் எப்படி? சுப்ரீம் கோர்ட்தான் தீர்ப்பு கொடுத்து விட்டதே. நீங்கள் தவெக சார்பில் வழக்குத் தொடர வேண்டியதுதானே. விஜய் திரும்ப திரும்ப திமுக, பாஜகவை திட்டிக் கொண்டிருக்கிறார். ஏன் ராகுல் காந்தி ஓட்டு திருட்டு என்றாரே அவரைப் பற்றி ஏன் பேசவில்லை. நமது தேர்தல் வியூகம் என்ன? எப்படி பிரச்சாரம் செய்ய போகிறோம்? நமது கொள்கையை எவ்வாறு கொண்டு சென்று சேர்க்க போகிறோம் என்பதையெல்லாம் விஜய் யோசிக்க வேண்டும்.
விஜய் ராம் வால்க் நடந்து செல்லும் போதே மாநாட்டில் எல்லாம் முடிந்து விட்டது. அவரைப் பார்த்தவுடன் எல்லோரும் கலைந்து சென்று விட்டார்கள். இன்னொரு விஷயம் ஒரு மாநாட்டை உடனடியாக முடித்துக் கொள்கிறார். அப்படியெல்லாம் இருக்கக்கூடாது’’ என விஜய்க்கு அறிவிறுத்தியுள்ளார் தாடி பாலாஜி.