
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக வருகின்ற டிசம்பர் 15ம் தேதிக்குள் எங்களை கட்சிக்குள் இணைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றப்பட்டு 15ம் தேதி அதிரடி அறிவிப்பு வெளியிடப்படும். எங்கள் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.
இப்போது பாஜக மேலிட அழைப்பின் பேரில் டெல்லி சென்று, ஜே.பி.நட்டா, அமித் ஷாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது எடப்பாடி பழனிசாமியின் அதிமுக தரப்பை கதிகலங்கச் செய்துள்ளது. இதுகுறித்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘ வேறு வழியில்லாமல்தான் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவை கட்சியாக மாற்ற முடிவுசெய்தார் ஓபிஎஸ். அதன்மூலம், திமுக, தவெக என யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டணி வைக்கலாம் என்பதுதான் ஓ.பி.எஸின் திட்டமாக இருந்தது. ஆனால், அவர் இதற்கு முழு மனதாகத் தயாராகவில்லை. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக டெல்லி பாஜக தலைவர்கள் அவருக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படியே, டெல்லிக்கு தனது மகன் ரவீந்தர்நாத், ஆடிட்டர் குருமூர்த்தியுடன் டெல்லி சென்றுள்ளார் ஓ.பி.எஸ்.
அங்கு பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். அடுத்தப்படியாக பிரதமர் மோடியைச் சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது ஒருங்கிணைந்த அதிமுக பற்றி பேசப்பட்டு இருக்கிறது. ‘‘எடப்பாடி பழனிசாமியால் வலுவான கூட்டணியையும் அமைக்க முடியவில்லை. கட்சியையும் கட்டுக்கோப்பாக நிர்வகிக்க முடியவில்லை. பலர் திமுகவை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். தவெகவுக்கு செல்ல 35 மாவட்ட செயலாளர்கள் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியே போனால் நிச்சயமாக 3ம் இடத்திற்கு அதிமுக கூட்டணி தள்ளப்படும்.
அதிமுகவை ஒருங்கிணைத்துக் களம் கண்டால் மட்டுமே இழந்த செல்வாக்கை மீட்க முடியும். மாற்றுகட்சிகளுக்கு செல்வோரை தடுத்து, இருப்பவர்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும்’’ எனக் கூறி இருக்கிறார் ஓ.பி.எஸ். பாஜகவும் இனி அதிமுக விவராகரத்தில் முழு மூச்சாக கவனம் செலுத்த ஆயத்தமாகிவருகிறது. ஆகையால், ஓ.பி.எஸின் இந்தப்பயணத்தில் பல மாற்றங்கள் அதிமுகவில் ஏற்படலாம்’’ எனக்கூறுகிறார் அவர்.
ஓபிஎஸ் டெல்லி பயணம் குறித்த நோக்கம் குறித்து பேசிய அவரது ஆதரவாளர் சுப்புரத்தினம், ‘ ‘‘‘எங்களது கோரிக்கை என்பது தாய்க்கழகமான அதிமுகவுடன் உரிய மரியாதையுடன் இணைய வேண்டும், இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக எனவே அந்த நியாயமான கோரிக்கையை ஏற்கப்படுமேயானால் அதை நிச்சயமாக ஓபிஎஸ் பரிசீலிப்பதற்கு தயாராக இருப்பார். அதை விடுத்து இல்லையில்லை, அவரை உங்கள் என்.டி.ஏ கூட்டணியில் வைத்துக் கொள்ளுங்கள். கட்சியில் இணைத்துக் கொள்ள முடியாது என இபிஎஸ் வழக்கம்போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் பேசுவாரேயானால் நிச்சயமாக அந்த நிலைப்பாட்டை ஓபிஎஸும், அவரது ஆதரவாளர்களான நாங்களும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லை.
இந்த நிலையிலும் அவர் எதார்த்தத்தை உணராமல் நான் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்றால் நாங்கள் அதை அப்படியே புறக்கணிப்போம். கட்சியின் எதிர்காலத்திற்காகவே நாங்கள் இறங்கி வருகிறோம். இந்த உண்மையை உணராமல் எடப்பாடி பழனிச்சாமி கர்வத்தோடு நடந்து கொண்டார் என்றால் அதற்கு நாங்கள் தேர்தல் களத்தில் வேறு சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்கிற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’ என்கிறார் .
இதுகுறித்து பாஜக சீனியர்கள் கூறுகையில், ‘‘அதிமுக மீது அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். ஏற்கெனவே டி.டி.வி.தினகரன் தனிக்கட்சியில்தான் இருக்கிறார். செங்கோட்டையனும் வெளியெறி விட்டார். பலரும் கட்சியை விட்டு வெளியேறத் தயாராகி விட்டார்கள். ஓ.பி.எஸ் தனிக்கட்சி ஆரம்பிப்பதை தனக்கிருந்த தொல்லை போய்விட்டது எனக் கருதி எடப்பாடி பழனிசாமி வேண்டுமானால் உள்ளூர விரும்பலாம். ஆனால், அதிமுக தொண்டர்கள் சோர்ந்துள்ள நிலையில், தனிக்கட்சி ஆரம்பித்து என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வருவதால் எந்த பலனும் இல்லை. அந்த முயற்சிகள் கைகொடுக்காது. பாஜக மேலிடம் இப்போது ஒருங்கிணைந்த அதிமுகவையே விரும்புகிறது. அதிமுகவில் சோர்ந்து போய்க் கிடக்கும் தொண்டர்களுக்கு அதுவே நம்பிக்கையளிக்கும்.
எடப்பாடி பழனிசாமிக்கு பல வாய்ப்புகளை பாஜக கொடுத்து பார்த்து விட்டது. இனியும் அவரது போக்குக்கு விட்டால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததில் பாஜகவுக்கு எந்த அர்த்தமும் இல்லை. திமுகவை வீழ்த்த எந்த முயற்சியையும் எடப்பாடி பழனிசாமி எடுக்கவில்லை. ஆகையால் அதிமுகவின் லகானை பாஜக கையில் எடுத்து விட்டது. அதிமுக பொதுக்குழு வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. அதற்குள் கட்சியை ஒற்றுமைப்படுத்த வேண்டும். ஓ.பி.எஸ், சசிகலா உள்ளிட்ட பிரிந்து கிடப்பவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என நினைக்கிறது பாஜக மேலிடம்.
எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒத்துழைத்தால் அவரது தலைமையில் அதிமுக செயல்படும். இல்லையேல் அதிமுக விவகாரத்தில் பாஜக தலைமை பல திடுக்கிடும் முடிவுகளை எடுக்கவும் முடிவெடுத்துள்ளது’’ என அடித்துச் சொல்கிறார் மேலிட பாஜக முக்கிய நிர்வாகி. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றாலும், இவர்கள் சொல்வது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.