
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தி முடித்து விட்டார். அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் எதிர்த்து விஜய் தனது அரசியலை தொடங்கியுள்ளார்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவையும், பாஜகவையும் கடுமையாக சாடி வரும் நிலையில், விஜய் கட்சி ஆரம்பித்தால் சீமானும் அவரும் கைகோர்ப்பார்கள் என்று தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. ஆனால் விஜய் கட்சி ஆரம்பித்ததும் இந்த எதிர்பார்ப்புகள் தலைகீழாக மாறியது.
இதற்கு காரணம் விஜய் தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் இரண்டுக்கும் ஆதரவு கொடுப்பதுதான். தொடர்ந்து தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து, திராவிட எதிர்ப்பு அரசியலை வெளிப்படுத்தி வரும் சீமானுக்கு விஜய்யின் தமிழ்தேசியம் மற்றும் திராவிடம் என்ற இரட்டை நிலைப்பாடு திருப்பதி அளிக்கவில்லை. இதனை வெளிப்படையாக பொது மேடைகளிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் வெளிப்படுத்தி வரும் சீமான், விஜய் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதன் காரணமாக தவெகvsதிமுக என்ற நிலைக்கு பதிலாக, நாம் தமிழர் கட்சிvsதவெக என்ற நிலையே பிரதானமாக உள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும், தவெக நிர்வாகிகளும் ஒருவரையொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நாம் தமிழர் மற்றும் தவெகவினர் வார்த்தை போர் தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு மாற்றாக புதிய ஆட்சி வர வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா.? ஜனவரியில் தேர்வா.? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு
இந்நிலையில், தவெக மாநாடு நடந்து முடிந்தது முதல் விஜய்யை விமர்சிப்பதையே வழக்கமாக வைத்துள்ள சீமான், முதன் முறையாக அவரை பாராட்டியுள்ளது அனைவரின் கவனத்தையும் திசைதிருப்ப வைத்துள்ளது. வடமாவட்டங்களில் கோரத்தாண்டவமாடிய பெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களை கடுமையாக புரட்டிப்போட்டுள்ளது.
புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளும் கட்சியான திமுக உள்பட அனைத்து கட்சிகளும் உதவி செய்து வரும் நிலையில், விஜய்யும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சென்னையில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த உதவியே அவருக்கு வினையாகிப் போனது. பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்தில் இருக்கையில், அவர்களின் இடத்துக்கு சென்று நிவாரண உதவி வழங்காமல், ஆறுதல் தெரிவிக்காமல் அவர்களை தனது இடத்தில் வரவழைத்து உதவி செய்தது மற்ற அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நடுநிலையாளர்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
துயர் நேரத்தில் மக்களுடன் களத்தில் நிற்காமல் விஜய் எப்படி அரசியல் செய்வார்? என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கனைகள் வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களிடம் சகஜமாக பேசவே அவர்களை சென்னைக்கு வரவழைத்ததாக இதற்கு விஜய் விளக்கம் கொடுத்த நிலையில், இந்த விஷயத்தில் சீமான் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
விஜய் புயல் பாதிக்கப்பட்ட இடத்துக்கு நேரடியாக செல்லாதது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ''விஜய் நேரடியாக களத்துக்கு சென்றால் பாதிக்கப்பட்ட மக்களை விட அவரை பார்க்க வேண்டும் என்ற கூட்டம் அதிகமாக வந்து விடும். ஆகையால் விஜய் நேரடியாக களத்துக்கு செல்வதில் பிரச்சனை இருக்கிறது. ஆனாலும் நேரில் அழைத்தாவது மக்களுக்கு உதவ வேண்டும் என்ற விஜய்யின் எண்ணத்தை பாராட்டியாக வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இருந்து நீண்ட நேரம் போகாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த பெஞ்சல் புயலை போல், விஜய்க்கு எதிராக மையம் கொண்டிருந்த சீமான், திடீரென விஜய்யை பாராட்டித் தள்ளியிருப்பது நாம் தமிழர் கட்சியினருக்கே இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. விஜய்க்கு எதிரான மனநிலையில் இருந்து சீமான் கரை கடக்க தொடங்கி விட்டாரா? மீண்டும் அண்ணன் தம்பி பாசம் மலருகிறா? என அரசியல் விமர்சர்கள் முணுமுணுக்கத் தொடங்கி விட்டனர்.
வெள்ள பாதிப்பு; நம்பிய மக்களை கைவிட்ட அரசு - பொரிந்து தள்ளிய தளபதி விஜய்!