அதிமுகவில் இருந்து ஒதுங்குகிறாரா ஐடி பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன்.? இபிஎஸ்சை சந்திக்காதது ஏன்.?

First Published | Oct 4, 2023, 5:05 PM IST

அதிமுகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிங்கை ராமசந்திரன், கட்சியின் மீது அதிருப்தி காரணமாக ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

அதிமுகவும் அதிகார மோதலும்

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவின் பலவித மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக அதிகார மோதல்கள் காரணமாக பல பிளவுகளாகவும் அதிமுக பிளவு பட்டது. அப்போது சசிகலாவிற்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்கிய ஓ பன்னீர்செல்வம் அணியில் மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்தனர்.

அப்போது அதிமுக ஐடி பிரிவில் முக்கிய நபராக இருந்த சிங்கை ராமச்சந்திரனும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.  இதனையடுத்து ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல் முடிவடைந்து மீண்டும் ஒன்றிணைந்தனர். அப்போது ஐடி பிரிவானது மண்டல வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அப்போது கோவை மண்டல் செயலாளராக சிங்கை ராமசந்திரன் நியமிக்கப்பட்டார். 

அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகள் மாற்றம்

ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்து சுமார் 3 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மீண்டும் ஒற்றை தலைமை மோதல் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல்  இபிஎஸ்- ஓபிஎஸ் அணி என தனி அணியாக செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்து வந்த மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டும், புதிய மாவட்ட செயலாளர் பதவியிடங்களையும் உருவாக்கினார்.  

மேலும்  அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்பட்டு,அந்த பிரிவின் செயலாளராக ராஜ் சத்யனும்,  தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது சிங்கை ராமச்சந்திரன் மட்டும் வரவில்லை. 

Latest Videos


இபிஎஸ்யை சந்திக்காத சிங்கை ராமசந்திரன்

இந்நிலையில், இன்று சென்னையில் நடைப்பெற்று வரும் தகவல் தொழில்நுட்பப்பிரிவு ஆலோசனை கூட்டத்திலும் சிங்கை ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை. ஜெயலலிதா காலத்தில் தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளராக சிங்கை ராமச்சந்திரன் இருந்துள்ளார். இந்நிலையில் தனக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதால் அதிமுக சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

அதிகாரம் குறைப்பே காரணமா.?

இதன் காரணமாகவே இன்று நடைபெற்ற தகவல் தொழில் நுட்ப பிரிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்க சிங்கை ராமசந்தினை தொடர்பு கொண்டபோது அவரது மொபைல் ஆப் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 

click me!