என்னதான் அண்ணாமலை பேசினார்? அதிமுகவுடன் கூட்டணிக்கு உடைந்ததுக்கு இதுதான் காரணமா.? வெளியான தகவல்

First Published | Sep 19, 2023, 10:34 AM IST

தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி முறிந்துள்ள நிலையில், அண்ணாமலை பேசியது என்ன.? அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்.? 

அதிமுக- பாஜக மோதல்

தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக மற்றும் பாஜக இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வருகிறது. தாங்கள் தான் தமிழகத்தின் எதிர்கட்சி என அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவது அதிமுக தலைவர்கள் ரசிக்கவில்லை. மேலும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி என கூறி வருவதையும் விரும்பவில்லை.

இந்தநிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அண்ணாமலை, மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி என தெரிவித்திருந்தார். அப்போதே அவருக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அண்ணாமலைக்கு எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. 
 

சமாதனம் செய்த பாஜக மேலிடம்

இதனையடுத்து பாஜக மேலிடம் இரண்டு தரப்பு தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து சமாதன பேச்சுவார்தை நடத்தியது. இதனையடுத்து சிறிது காலம் அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் இரண்டு தரப்புக்குள்ளும் மோதல் அதிகரித்தது. இந்தநிலையில் தான் சனாதன சர்ச்சை தமிழகத்தில் அதிகரித்த நிலையில், சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

Tap to resize

கோயிலில் பகுத்தறிவு பேசிய அண்ணா

அப்போது கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,  1956 ஆம் ஆண்டு மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் மணிமேகலை என்ற குழந்தை தமிழ் சங்க இலக்கியம் பாடியது. இதனை தொடர்ந்து பேசிய அண்ணாதுரை இந்த பொண்ணு நல்லா பாடியது. இதுவே கற்காலமாக இருந்தால் உமையாளின் பாலை குடித்ததால் தான் இந்த பெண் அழகாக பாடியது என குறிப்பிட்டிருப்பார்கள் என தெரிவித்தார். நல்ல வேளை மக்களிடம் பகுத்தறிவு வந்து விட்டது என அண்ணாதுரை கூறியுள்ளார்.

எதிர்ப்பு தெரிவித்த தேவர்

இதனை தொடர்ந்து 6வது நாள் கூட்டத்தில் பேசிய வேண்டிய முத்துராமலிங்க தேவர் 5 ஆம் கூட்டத்தில் பேச முற்பட்டார். அதற்கு பிடிஆர் மறுத்துள்ளார். இருந்த போதும் மேடையில் பேசிய முத்துராமலிங்க தேவர், மேடை நாகரிகத்தை இன்று முறியடிக்க போகிறேன் என கூறி ஆவேசமாக பேசினார். அப்போது சிவ புராணம் இயற்றப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உமையாளை  தப்பாக பேசியது யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் எல்லாரும் பயந்து பதில் சொல்லவில்லை, பிடிஆர் வாயை மூடி இருந்துள்ளார்.  தொடர்ந்து பேசிய முத்துராமலிங்க தேவர்,  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்,  கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை பற்றி பேசினால் மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தில்  அபிசேகம் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.  

அண்ணா மன்னிப்பு கேட்டாரா.?

இந்த சம்பவத்தை அடுத்து மன்னிப்பு கேட்டு மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து  பயந்து ஓடி வந்த கும்பல்  பி.டி.ராஜனும், அண்ணாதுரையும் என அண்ணாமலை பேசினார். முத்துராமலிங்க தேவரின் ஆவேச பேச்சால் அண்ணாதுரையை மதுரைக்குள் ஒளித்து வைத்ததாகவும், அண்ணாதுரையால் வெளியே செல்ல முடியவில்லை எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த பேச்சு அடுத்தடுத்து வளர்ந்து அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கான ஆதாரம் எங்கே.? அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லையெனவும் வாதிடப்பட்டது. இந்தநிலையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விசண்முகம், ஜெயக்குமார்,செல்லூர் ராஜூ ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக சீறினார்கள். அண்ணா குறித்து பேசினால் நாக்கு வெட்டப்படும் என தெரிவித்தார்கள். 

அண்ணாமலைக்கு எதிராக சீறிய அதிமுக

இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை,  நான் யாருடைய அடிமையும் கிடையாது. கும்பிடு போட்டுக் கொண்டு அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனிக்கட்சி, தனிக் கொள்கை, சனாதனம் எங்கள் உயிர் மூச்சு. அதற்காக பேச முடியவில்லை என்றால் நான் எதற்காக இந்த இருக்கையில் அமர வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் அமைச்சர் பொறுப்பில் இருந்த போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பணம் வசூலித்ததாகவும், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு பிறகு வேறு மாதிரி இருப்பார் எனவும் அண்ணாமலை விமர்சித்து பேசினார்.
 

உடைந்தது அதிமுக- பாஜக கூட்டணி

இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அண்ணாமலை தலைமை பதவிக்கே லாயக்கற்றவர் எனவும், மாநிலத் தலைவர் பதவி அண்ணாமலை தகுதிக்கு மீறிய பதவி என காட்டமாக கூறினார். பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி இனி இல்லை என கூறிய அவர், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

அண்ணாமலையின் பேச்சு அதிமுக- பாஜக கூட்டணியில் முடிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் மேலிடத்தில் இருந்து சமாதனம் பேச்சு நடைபெறுமா.? அல்லது நாடாளுமன்ற தேர்தலை தனித்து எதிர்கொள்ள தயாராகுமா .? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்

அண்ணாமலை பற்றி இழிவாக பேசினால் பதிலடி கொடுப்போம்.! அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு பாஜக பகிரங்க எச்சரிக்கை
 

Latest Videos

click me!