
விஜய் தலைமையிலான தவெக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. கூட்டணி அமைப்பதை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு, முழு மூச்சாக திமுகவின் பலம், பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை அமைப்பதில் விஜய் கவனம் செலுத்த சத்தமில்லாமல் ஒரு குழுவை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, திமுகவில் உள்ள முக்கியஸ்தர்களின் தொகுதி, அவர்களின் செல்வாக்கு, செயல்பாடுகளை ஆராய்ந்து ரிப்போர்ட் கொடுக்க சோல்லி இருக்கிறார் விஜய். அத்தோடு அந்த திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக தவெகவில் யாரைக் களமிறக்கலாம் என்பதையும் கேட்டு வருகிறாராம் விஜய். அந்த வகையில் விஜய் குறி வைத்துள்ள முதல் தொகுதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர்.
மு.க.ஸ்டாலின் 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் தொடந்து கொளத்தூரி வெற்றி பெற்றுள்ளார். 2021-ல் 60.86% வாக்குகளுடன் (1,02,052 வாக்குகள்) பெரும் வெற்றி பெற்று முதல்வரானார். இந்த முறையும் கொளத்தூர் தொகுதியே ஸ்டாலினின் சாய்ஸாக இருக்கிறது. இந்தத் தொகுதி, சென்னை வடக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதி. 2011-ல் ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டு கொளத்தூருக்கு மாறியதும், திமுகவின் பலமான தொகுதியாக மாற்றியுள்ளார். 2011-ல் 68,677 வாக்குகள் பெற்று 48 சதவிகிதம் பெற்று தன்னை எதிர்த்து போட்டியுட்டவரை 2,734 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் ஸ்டாலின். 2016 சட்டமன்ற தேர்தலில் 91,303 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து நின்ற ஜே.சி.டி.பிரபாகரை 37,730 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஸ்டாலின் 54.3% சதவிகித வாக்குகளாக உயர்த்தினார்.
2021ல் 1,05,992 வாக்குகளை பெற்ற மு.க.ஸ்டாலின், ஆதிராஜாராமை 69,622 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பெற்ற வாக்கு 61.5 சதவிகிதம். இப்படி கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவிகிதத்தை உயர்த்தி வருகிறார். ஆகவே இந்த முறையும் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளார்.
ஸ்டாலினின் பலம் அங்கு வலுவாக இருந்தாலும் சில சவால்களும் உள்ளன. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொளத்தூரில் 2023-24 வாக்காளர் பட்டியலில் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். தவெக இப்போது இதை இலக்காகக் கொண்டு, திமுக அரசின் போலி வாக்காளர் குற்றச்சாட்டுகளை வைத்து வியூகத்தை உருவாக்குகிறது. விஜய், தனது சுற்றுப்பயணத்திற்கு முன், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள உள்ளூர் பிரச்சினைகளான உள்கட்டமைப்பு, போக்குவரத்து, குடிநீர் பிரச்சினைகளை சேகரிக்க தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொளத்தூரில், ரெட்டேரி ஜங்ஷன் ஃப்ளைஓவரும், உள்நகர சாலைகளும் உள்ளன என்றாலும், மக்கள் சொல்லும் அபத்தமான பிரச்சினைககள், போக்குவரத்து நெரிசல், பூங்கா பராமரிப்பு, அடிப்படை வசதிகளில் புகார்கள் குவிந்து வருகின்றன.
இது குறித்து கொளத்தூர் தொகுதிவாசிகள் கூறுகையில், ‘‘முன்மாதிரியாக இருக்கவேண்டிய முதல்வரின் தொகுதியான கொளத்தூரே மோசமான சாலைகள், எங்கும் குப்பைகள், நிறைவடையாத பணிகள் என்று கந்தரகோலத்தில் இருப்பதாக தொகுதிவாசிகள் கதறுகின்றனர். குறிப்பாக சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் அவ்வப்போது நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் திமுகவிற்கு எதிரான மனநிலையவே காட்டுவதாகக் கூறப்படுகிறது. திமுக கடந்த தேர்தலின் போது இந்த தொகுதிக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக குமரன் நகர், இளங்கோ நகர், ஜி.கே.எம் காலனி போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் பிரச்சனை மிகப் பெரிய அளவில் புகார் உள்ளன.
மழைக்காலங்களில் கொளத்தூர் மிகப்பெரிய பாதிப்பு எதிர்கொண்டு வருகிறது. குடிநீரில் கழிவுநீர் கலப்பு, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுதல், தண்ணீர் தேங்குதல், கொசுத்தொல்லை என வட சென்னைக்கே உரித்தான பிரச்சினைகள் இங்கும் உண்டு. இதனையெல்லாம் சரி செய்து சிங்கார சிட்டியாக மாற்றுவேன் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அதுவும் நடைமுறைப்படுத்த இல்லை’’ என புகார்பட்டியல் வாசிக்கின்றனர்..
மற்றொருபுறம், அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என அரசு ஊழியர்கள் விரக்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.கொளத்தூர் தொகுதியில் அதிகப்படியான அரசு ஊழியர்கள் உள்ளதால் மிகப்பெரிய தலைவலியை திமுகவிற்கு ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல பெரும்பாலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அதிகமாக கொளத்தூர் பகுதியில் வசிக்கின்றனர் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக அடிக்கடி முதலமைச்சர் விழாக்கள் நடத்தி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டாலும், மாநகராட்சி துணை பணியாளர்கள் 13 நாட்கள் போராடியும் முதலமைச்சர் கண்டு கொள்ளாதது அவர்கள் மத்தியில் ரண வேதனையை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள். அவர்களும் இந்த முறை திமுகவிற்கு எதிராக நிற்பார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆகையால், அத்தனை அம்சங்களையும், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்தமுறை தவெக முனைப்பு காட்டி வருகிறது.
கொளத்தூரில் இளைஞர்கள், பெண்களின் ஆதரவும் விஜய்க்கு அதிகமாக உள்ளது. அத்துடன் தவெகவை சேர்ந்த ஸ்டாலினுக்கு எதிராக களமாடக்கூடிய தகுதியுள்ள வேட்பாளரை களமிறக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய். ஸ்டாலினுக்கு எதிராக தவெகவைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜியை களமிறக்க விஜய் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
YBM டிராவல்ஸ் நிறுவனர்தான் பாலாஜி. முதலியார் சமூகத்தை சேர்ந்தவர், கொளத்தூர் தொகுதியில் நன்கு அறியப்பட்டவர். பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறார் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். தவெக முதல் மாநாடு தொடங்கி, அண்மையில் நடந்த கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தனது பேருந்துகளில் அழைத்து வந்து, விஜயை சந்திக்க வைத்து மீண்டும் கரூரில் போய் பத்திரமாக இறக்கி விட்டது இவரது டிராவல்ஸ் நிறுவனம்தான்.
சேகர்பாபுவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ள திமுகவினரும், தவெக வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் மனநிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே, பாலாஜி கொளத்தூர் தொகுதியில் களமிறங்க இப்போதே தயாராகி விட்டதாக கூறுகிறார்கள் தவெக நிர்வாகிகள். திமுகவின் பாகுபலி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் மீது அதிதீக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள விஜய், அந்த தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை முன்பே அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த லிஸ்டில் கொளத்தூர் தொகுதியை முதலிடத்தில் வைத்துள்ளார் விஜய் என்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர்.