செங்கோட்டையன், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தம் என்று அழைக்கப்படுபவர். அவர்கள் மறைந்தபோதும் அவர்கள் மீது கொண்ட செங்கோட்டையனின் விசுவாசம் மறையவில்லை. அதிமுகவில் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட ஒரு விவசாயிகள் பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை. எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் மட்டுமே பிரதானமாக இருந்தது. இதனால் மனவருத்தம் அடைந்த செங்கோட்டையன் அந்த விழாவில் பங்கேற்கவில்லை.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது, "இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்தினேன்" என்று உருகினார். தவெகவில் இணைந்தபோதும் தனது சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். மெரினா கடற்கரையில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் போர்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளது. அதில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் படத்துடன், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலலிதா படங்களுடன் தமிழக வெற்றிக்கழக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.