Wrong Electricity Bill Complaint: தமிழகத்தில் சில நாட்களாக பலருக்கும் தவறான மின் கட்டணம் வந்துள்ளது. இதை யாரிடம் முறையிடுவது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு மின்துறையில் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. மின்வெட்டு ஒரு புறம் இருந்தால், மறுபுறம் பல வீடுகளுக்கும் அதிக மின்கட்டணம் வந்துள்ளது. இது நடுத்தர ஏழைக் குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. உங்கள் வீடுகள் அல்லது கடைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக தொகையுடன் மின்கட்டணம் வந்துவிட்டால் அதை எப்படி சரி செய்வது? எங்கு புகார் அளிப்பது? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
புகார் அளிப்பதற்கு முன்பாக நாம் வீட்டிலேயே சில சோதனைகளை செய்ய வேண்டும். வீட்டு மீட்டரில் தற்போது காட்டு அளவையும், பில்லில் உள்ள அளவையும் ஒப்பிட்டு பாருங்கள். முந்தைய மாதங்களின் கட்டண ரசீதுகளை கையிருப்பில் வைக்க வேண்டும். புகார் அளிப்பதற்கு முதல் படி நேரடியாக மின்சார வாரிய அலுவலகம் செல்ல வேண்டும். உங்கள் பகுதிக்கு உட்பட்ட மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். தவறான பில் நகல் மற்றும் மீட்டரின் தற்போதைய புகைப்படத்துடன் ஒரு எழுத்துப்பூர்வமான மனுவை கொடுக்க வேண்டும். அதிக கட்டணத்திற்கான காரணம் தவறான ரீடிங் என்றால், அவர்கள் உடனடியாக மீட்டரை சரிபார்த்து பில்லை திருத்தி தருவார்கள்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்னகம் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்காக பிரத்தியேகமாக கொடுக்கப்பட்டுள்ள 1912 என்கிற நம்பர் அல்லது 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மின்னகத்தின் இலவச அழைப்பு எண்ணான 94987 94987 ஆகிய நம்பரையும் தொடர்பு கொள்ளலாம். இங்கு உங்கள் நுகர்வோர் எண் (Consumer Number) மற்றும் அதிக கட்டணம் வந்த விவரத்தை கூறி புகாரை பதிவு செய்யலாம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ Whatsapp எண்கள் மூலம் உங்கள் புகார் மற்றும் புகைப்படங்களை அனுப்பலாம். வாட்ஸ்அப் எண்கள்: 94458 50829 / 94458 50410 உங்கள் மின் நுகர்வோரின் எண், முகவரி மற்றும் பிரச்சனையை சரியாக குறிப்பிட்டு செய்தி வழியாக அனுப்ப வேண்டும் அல்லது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் Grievance / Consumer Complaints என்ற பகுதியில் உங்கள் மின் நுகர்வோர் எண்ணை பயன்படுத்தி புகார் பதிவு செய்யலாம்.
தவறான ரீடிங் எடுக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து மீட்டரை சரிபார்த்து புதிய திருத்தப்பட்ட பில்லை வழங்குவார்கள். நீங்கள் திருத்தப்பட்ட தொகை மட்டும் செலுத்தினால் போதும். மீட்டர் பழுதாகி இருந்தால் மீட்டரை பரிசோதிக்கக் கோரி விண்ணப்பிக்கலாம். மீட்டர் வேகமாக ஓடுவது உறுதி செய்யப்பட்டால் முந்தைய மாதங்களின் சராசரி கணக்கத்தின் படி கட்டணம் குறைக்கப்படும். தவறான பில் தொகையை நீங்கள் ஏற்கனவே செலுத்தி இருந்தால், உபரியாக வசூலிக்கப்பட்ட தொகை உங்கள் அடுத்த மாதம் மின் கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும்.
புகாரை பரிசீலிக்கும் வரை அல்லது திருத்தப்பட்ட பில் வரும் வரை உங்கள் மின்சாரத் தொடர்பை துண்டிக்க மாட்டார்கள். ஆனால் கால தாமதத்தை தவிர்க்க, பில் வந்த சில நாட்களிலேயே உங்கள் பகுதியின் மின் உதவி பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்வது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.