நம் நாட்டில் இருக்கும் ஆயிரத்து 314 வகை பறவையினங்களில், 34 பறவையினங்கள் தான் உலகம் முழுக்க இருக்கின்றன. அதில் சிட்டுக்குருவியும் குறிப்பிடத்தக்க பறவை. அழிந்து கொண்டே வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வூட்டும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 20-ஆம் தேதி அன்று உலகச் சிட்டுக் குருவிகள் தினம் கூட பின்பற்றப்படுகிறது.
வீட்டிற்குள் காற்று கூட வர முடியாதபடி குடியிருப்புகளை கட்டுகிறோம். முந்தைய காலங்களில் வீட்டு பரண், ஓடு, குடிசை வீடுகளின் விட்டங்களில், தாழ்வாரங்களில் கூடு கட்டி சிட்டுக்குருவிகள் வசிக்கும். ஆனால் இப்போது நகரங்களை பொறுத்தவரை எல்லாமே அடுக்குமாடிக் குடியிருப்புகள் தான். கிராமங்களிலும் ஒரு சில வீடுகளை தவிர மற்ற வீடுகளுக்குள் சிட்டுக்குருவிகள் உள்ளே போகவே முடியாது. நகரமயமானதால் விளைவு.. எரிவாயுவில் வெளியேறும் மீதைல் நைட்ரேட் என்ற வேதியியல் கழிவுப் புகை காற்றை மாசுபட செய்தது. இதனால் குருவிகளின் இரைகளான பூச்சி இனங்கள் அழிந்துபோயின. நகரத்தில் வாழ்ந்த பல சிட்டுக்குருவிகள் உணவுப் பற்றாக்குறையால் அழிந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
முன்பை போல தோட்டங்கள், புதர்ச்செடிகள் இப்போது இல்லை. அதனால் சின்னஞ்சிறிய பறவைகள் கூடு கட்ட ஏற்ற இடங்களே இல்லாமல் போய்விட்டது. அதிலும் முட்டை பொரிக்கும் காலத்தில் இரையின்றி (புழு, பூச்சி) தன் குஞ்சுகளுக்கு சரியாக உணவு கொடுக்க முடியாமல் சிட்டுக்குருவிகள் அழிந்து போனதாக சொல்லப்படுகிறது. இப்போது ஆங்காங்கே திரியும் ஒரு சில சிட்டுக்குருவிகளை நாம் பேணி பாதுகாத்தால் கூட வருங்காலத்தில் கொஞ்சம் சிட்டுக்குருவிகளையாவது அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல முடியும்.
இதையும் படிங்க: காலி சிலிண்டரை மாத்துறப்ப இது மட்டும் நடந்தா அவ்வளவுதான்.. எப்படி கவனமா இருக்கணும் தெரியுமா?
சிட்டுக்குருவிகளை கவனிப்பது எப்படி?
முதலில் உங்களுடைய வீட்டுக்கு பக்கமாக சிட்டுக்குருவிகள் இருக்கிறதா? வீட்டுக்கு வருகின்றதா? என்பதை கவனிக்க வேண்டும். அப்படி வந்தால் அவற்றிற்கு உணவாக தானியங்கள் வையுங்கள். அவை வந்து செல்லும் இடத்திற்கு அருகே சின்ன பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம். இந்த தண்ணீர் கொசுக்களுக்கு பரவல் இடமாக மாறக் கூடாது. அதனால் சுத்தமான நீரை அவ்வப்போது மாற்றி வைப்பதை மறக்காதீர்கள். தண்ணீர், உணவு மடுமில்லாமல் ஒரு அட்டைப்பெட்டியில் குருவி உள்ளே நுழையும் அளவில் ஓட்டை போட்டு உயரத்தில் தொங்க விடுங்கள். நிச்சயம் குருவிகள் வந்து அங்கே தங்கும்.