
இன்றைய காலத்தில் குழந்தைகள் அதிகமாக குப்பை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் அவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையில் இந்த மாதிரியான உணவுகள் குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவதால் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகுதல், அடிக்கடி நோய்வாய்ப்படுதல், வைட்டமின் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். இதன் காரணமாக பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
ஆகவே, பெற்றோர்களே இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்காமல் ஆரோக்கியமான உணவுகளை சிறுவயதிலிருந்தே கொடுத்து பழகுங்கள். இத்தகைய சூழ்நிலையில் உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களிலிருந்து அவர்களை பாதுகாக்கவும் முருங்கை இலை கொடுங்கள். முருங்கை இலையில் கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின் சி வைட்டமின் ஏ, உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே உங்கள் குழந்தையின் அன்றாட உணவில் முருங்கை இலையை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். சரி இப்போது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முருங்கை இலை எவ்வாறு நன்மை பயக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : முருங்கை இலை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாக சொல்லப்படுகின்றது. முருங்கை இலையில் போதுமான அளவு வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால் அவை குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் சளி, இருமல் போன்ற பருவ கால நோய்கள் வருவது தடுக்கப்படும்.
செரிமானத்தை மேம்படுத்தும் : முருங்கை இலையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் குழந்தைகளின் செரிமான அமைப்பை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உங்கள் குழந்தையின் அன்றாட உணவில் முருங்கை இலை சேர்த்து வந்தால் அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வரவே வராது. அதுமட்டுமின்றி வயிற்று வலி, வாயு தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.
எலும்புகள் வலுவாகும் : முருங்கை இலையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்கும். மேலும் பற்களின் வளர்ச்சிக்கு அவை மிகவும் நன்மை பயக்கும். எனவே வளரும் உங்கள் குழந்தைகளின் அன்றாட உணவில் முருங்கை இலை சேர்ப்பதன் மூலம் அவர்களது எலும்புகளை வலுப்படுத்தலாம்.
இரத்த சோகை வராது : இந்த காலத்துல குழந்தைகள் பலர் இரத்த சோகை பிரச்சனையை சந்திக்கின்றனர். ஆகவே, இவற்றிற்கு சிறந்த நிவாரணம் முருங்கை கீரை தான். முருங்கை இலையை உங்கள் குழந்தையின் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் அவர்களது உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இதனால் ரத்த சோகப் பிரச்சனை விரைவில் குணமாகும்.
மூளை வளர்ச்சியை மேம்படுத்தும் : முருங்கை இலையில் இருக்கும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் ஏ போன்றவை குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த உதவுவதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி மேம்படுத்த முருங்கை இலையில் அவர்களுக்கு பிடித்தவாறு உணவு சமைத்துக் கொடுங்கள்.
குழந்தைகளுக்கு முருங்கை இலையை எப்படி கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு முருங்கை இலையை பருப்பு, காய்கறிகள் அல்லது சூப்பு வடிவில் கொடுக்கலாம். இது தவிர தோசை, இட்லி போன்றவற்றிலும் முருங்கை இலையை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.
ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முருங்கை இலை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை கிடைக்கும் என்றாலும், பெற்றோர்களே ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு குழந்தைக்கு முருங்கை இலை கொடுங்கள்.