Published : Aug 01, 2025, 02:46 PM ISTUpdated : Aug 01, 2025, 02:54 PM IST
ஆசியாவில் உள்ள சில நாடுகள், ஹோட்டல்கள் மற்றும் விமான நிலையங்களில் ஒரு பழத்தை எடுத்துச் செல்வதற்கு தடை விதித்துள்ளன. மீறி எதிர்த்து சென்றால் தண்டனைகளும், அபராதமும் விதிக்கப்படுகின்றன. அந்த பழம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் “புகைபிடித்தல் கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்” என்கிற வாசகங்களை பார்த்திருப்போம். ஆனால் பாங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒட்டப்பட்ட பலகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஹோட்டலில் துரியன் பழத்தை சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், விதிகளை மீறினால் 5,000 தாய் பட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,800 அபராதம்) விதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. துரியன் பழத்தை பொது இடங்களில் எடுத்துச் செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் தடை என்பது ஆசியாவில் பொதுவாக பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும். துரியன் பழம் என்றால் என்ன? அதற்கு ஏன் இப்படி ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25
மோசமான வாசனையுடன் விளங்கும் துரியன் பழம்
துரியன் பழமானது பலாப்பழத்தைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு வகைப் பழமாகும். நீளமான வடிவம், கடினமான தோல், உள்ளே மஞ்சள் வடிவில் கூழ் போன்ற பழத்தைக் கொண்டிருக்கும். இது நீண்ட வலுவான வாசனையைக் கொண்டுள்ளது. இதன் வாசனை நீண்ட நேரம் நீடிக்கக் கூடியது. இந்த வாசனையை பலரும் அருவருப்பாக உணர்கின்றனர். உணவு எழுத்தாளரான ரிச்சர்ட் ஸ்டிர்ல்லிங் தனது அனுபவத்தில் இந்த பழத்தின் வாசனையை கடுமையாக விமர்சித்துள்ளார். இதன் வாசனை அழுக்கு சாக்ஸ், டர்பன்டைன் மற்றும் அழுகிய வெங்காயத்தின் கலவையைப் போன்றது என்று கூறியுள்ளார். சிலர் இதை அழுகிப்போன இறைச்சி வாசனை உடன் ஒப்பிடுகின்றனர். மேலும் சிலரோ இது பழைய சீஸ் அல்லது சாக்கடை நீர் என்று விமர்சிக்கின்றனர். சிலர் இதை விரும்பினாலும் பலருக்கு இந்த வாசனை குமட்டலை ஏற்படுத்துகிறது.
35
துரியன் பழத்தை பொதுவெளியில் எடுத்துச் செல்ல தடை
எனவே பாங்காக் நகரில் உள்ள பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், பொது போக்குவரத்து அமைப்புகளில் துரியன் பழத்தை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா போன்ற பிற ஆசிய நாடுகளிலும் இது ஒரு பொதுவான விதியாக பின் படுத்தப்படுகிறது. பெரும்பாலான ஹோட்டல்களில் அறைகளில் துரியன் பழத்தை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் வாசனை முழுமையாக நீக்க பல நாட்கள் ஆகும் என்பதால் ஹோட்டல் நிர்வாகிகளுக்கு சிரமமாக உள்ளது. எனவே சில ஹோட்டல்கள் இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கிறது. அலுவலகங்கள், பொது கட்டிடங்கள் போன்ற இடங்களிலும் இந்த பழத்தை எடுத்துச் செல்வதற்கு அனுமதி இல்லை. துரியன் பழத்தில் அதிக அளவு கந்தகச் சத்து உள்ளது. இதை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம், சில நொதிகளை தடுக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
ஹோட்டல்களைத் தவிர சில நாடுகளின் விமான நிலையங்களிலும் துரியன் பழத்தின் கடுமையான வாசனை காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் விமான நிலையங்கள், ஆசியாவின் பல சர்வதேச விமான நிலையங்களுக்குள் துரியன் பழம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாடுகளில் விமானங்களிலும் பழத்தை எடுத்துச் செல்வதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாசனை பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கலாம் என்பதால் பல நாடுகள் விமானங்களில் துரிய பழத்தை எடுத்துச் செல்வதை அனுமதிக்கவில்லை. சில இடங்களில் இந்த விதிகளை மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
55
சாப்பிட தடை இல்லை.!
துரியன் பழம் வாசனைக்காக மட்டுமே தடை செய்யப்படுகிறது. இது தீங்கு விளைவிப்பதாக தோன்றலாம். ஆனால் இதன் சுவை பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. இதன் மஞ்சள் நிற பழம் பலரையும் கவர்கிறது. சில உணவுகள், ஐஸ்கிரீம்கள், கேக்குகள் ஆகியவற்றிலும் துரியன் பழம் பயன்படுத்தப்படுகிறது. மெடிசன் நெட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த பழம் பொட்டாசியம் நிறைந்ததாகும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் ஆகியவையும் இந்த பழத்தில் நிறைந்துள்ளன. இதன் வாசனை பலருக்கு பிடிக்கவில்லை என்றாலும், சிலர் இந்த பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். பழம் சாப்பிடுவதற்கு தடை செய்யப்படவில்லை. அதன் கடுமையான வாசனை காரணமாகவே அதை எடுத்துச் செல்வதற்கும் சாப்பிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.