அதன்பின்னர் ஆண்களுக்கான திருமண வயது 21 என்றும், பெண்களின் திருமண வயது 18 என்றும் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இந்த வயதுக்கு கீழ் திருமணம் என்பது தொடர்கதையாகவே இருந்தது.
2006-ம் ஆண்டு புதிதாக கொண்டுவரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டம், குழந்தை திருமணம் செய்தால் அது குற்றம் என்ற நிலையை உருவாக்கியது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நிதியம், உலகளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் நடைபெறுவதாக கூறுகிறது. இந்தியாவில் மேற்குவங்கம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகம நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரி, ஆண், பெண் திருமண வயதில் ஏன் வித்தியாசம்?
மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னரே ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண வயதில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்ற நிலை தோன்றியது. பெண்களை விட ஆண்களுக்கு அதிக வயது இருக்க வேண்டும் என்றும் குறிக்கப்பட்டது. குழந்தை திருமண தடுப்பு சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், இந்து திருமண சட்டம், முஸ்லீம் திருமண சட்டம் என எல்லா சட்டத்திலுமே திருமணம் செய்து கொள்ள குறைந்தபட்ச வயது ஆணுக்கு 21 என்றும், பெண்ணுக்கு 18 என்றும் குறிப்பிடுகிறது.