
மழை மற்றும் குளிர்காலங்களில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அதிகமாக செயல்படும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் பெரியவர்களை போல வலிமையாக இருக்காது. இதன் காரணமாக குளிர்காலங்களில் அவர்களுக்கு சளி தொந்தரவு, கடும் இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும்.
பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளுக்கும் குளிர்காலம் ஏற்ற காலமாக இருக்கும். அதனால் அவை வீரியமாக செயல்படும். இதிலிருந்து விடுபட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பிட்ட உணவுகள் தான் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.
வைட்டமின் C, E, பீட்டா கரோட்டீன் போன்ற சத்துகள் உள்ள உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். தின்பண்டங்களுக்கு பதிலாக மேலே சொன்ன சத்துக்களை கொண்ட பழங்கள் சாப்பிட கொடுக்கலாம். மாலை நேர ஸ்நாக் போன்று பயறு வகைகளை கொடுக்கலாம்.
குழந்தைகள் சத்துணவு உணவுகளை சாப்பிடுவது அவர்களுடைய வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். குழந்தைகள் எப்போதும் சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள். அதனால் சில பெற்றோர் குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளையே அடிக்கடி சமைப்பார்கள். இதனால் எல்லா சத்துக்களும் கிடைக்கும் என சொல்ல முடியாது.
அதிலும் குளிர்காலம் மாதிரியான நேரங்களில் குழந்தைகள் சத்துள்ள உணவுகளை உண்பது அவசியம். குழந்தைகளும்கு எந்த உணவுகளை குளிர்காலத்தில் அடிக்கடி கொடுப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.
சைவம் & அசைவம்:
குழந்தைகள் காய்கறிகளை கண்டால் தெறித்து ஓடுவார்கள். சாப்பாட்டில் இருக்கும் காய்களையும், கீரையும் ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடும் குழந்தைகள் தான் இங்கு ஏராளம். இந்த மாதிரியான சூழலில் காய்கறிகளை சமைக்கும் போது அவற்றை குழந்தைகள் விரும்பும் வகையில் பரிமாற வேண்டும். அதில் இருக்கும் சத்துக்களை குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
உதாரணமாக படிப்பில் ஆர்வம் உள்ள குழந்தையாக இருந்தால் இந்த காயை நீ சாப்பிட்டால் உனக்கு கணிதம் எளிமையாக வரும், நிறைய நியாபக சக்தி கிடைக்கும் என சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
நன்றாக விளையாடும் குழந்தையாக இருந்தால், காய்கறிகளை உண்பதால் கால்கள் வலிமையாக இருக்கும். இன்னும் வேகமாக ஓட முடியும் என அவர்களை உத்வேகப்படுத்தலாம். நாள்தோறும் காய்கறிகள் கூட்டு போன்றவற்றை செய்து கொடுத்தால் குழந்தைகள் அவற்றை சாப்பிட சலித்துக் கொள்வார்கள்.
இடைப்பட்ட நாட்களில் கொஞ்சம் வித்தியாசமாக அசைவ உணவில் காய்கறிகளை போட்டு சாப்பிட கொடுத்துப் பாருங்கள். உதாரணமாக ஆட்டுக்கறியில் காரம் குறைவாக சமைத்து அதில் சில காய்கறிகளை வேகவைத்து சேர்த்து கொடுக்கலாம். கடல் மீன் உணவுகளை வாரத்தில் 1 அல்லது இருநாள்கள் கொடுக்கலாம். மீன் உணவுகள் புரதம், ஓமேகா கொழுப்பு அமிலங்களை உடையது. குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
சிக்கன்:
சிக்கன் புரதச்சத்து உள்ள உணவு. குழந்தைகளுக்கு மொறு மொறுவென இருக்கும் நொறுக்கு தீனிகள் தான் ரொம்ப பிடிக்கும். அதனால் சிக்கனை மொறுமொறுவென சிக்கன் ஃபிங்கராக செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள். எந்த உணவை சாப்பிடுவதற்கும் அடம்பிடிக்கும் குழந்தையாக உங்களுடைய குழந்தை இருந்தால், இந்த உணவை முயன்று பாருங்கள். நிச்சயம் அவர்களுக்கு சிக்கன் ஃபிங்கர் பிடிக்கும். அசைவ உணவை விரும்பாத குழந்தை என்றால் அவர்களுக்கு சைவ உணவுகளையே மொறுமொறுவென கொடுக்க முயற்சி செய்யுங்கள். ஆனால் எண்ணெய்யில் பொரித்து எடுப்பதால் அடிக்கடி கொடுத்து பழக்க வேண்டாம். குழம்பில் இருக்கும் சிக்கனை கொடுப்பது நல்லது.
கேக்:
கேக் விரும்பாத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். எல்லா குழந்தைகளுக்கும் கேக் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே கேக் செய்வது இப்போது வாடிக்கையாகி வருகிறது. பழங்கள், சிறுதானியங்களில் கூட கேக் செய்யலாம். அது அவர்களுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். குளிர்காலத்தில் கொடுக்கக் கூடிய நல்ல உணவாகும்.
சூப் வகைகள்:
குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு இணை உணவாக திட உணவை வழங்குவார்கள். அப்போது திணை கஞ்சி, கூழ், பழச்சாறு ஆகியவை சேர்ப்பார்கள். அது போல சூப் வகைகளையும் கொடுக்கலாம். குழந்தைகள் உணவுகள் மீது ஆர்வம் காட்டாமல் இருந்தால் சூப் கொடுக்கலாம். இது பசியை தூண்டும். இது சமைக்கவும் சுலபம். குழந்தைக்கும் பிடிக்கும். சில காய்கறிகளை கொண்டே பிரமாதமான சூப் தயாரிக்கலாம்.
குளிர்காலத்தில் மிதமான சூட்டில் சூப் கொடுப்பது அவர்களுக்கும் நல்லது. சூப் செய்யும்போது வெங்காயம் சேர்ப்பீர்கள். இதற்கு சாம்பார் வெங்காயம் தான் நல்லது. நாட்டு தக்காளியை சேர்ப்பது நல்லது. ஹைப்ரேட் வேண்டாம். குழந்தைக்கு காரம் ஆகாது. மிளகு சேர்ப்பதை தவிருங்கள். மிளகு அரை சிட்டிகை சேர்த்தாலே அதிகம் தான். ஒரு பல் பூண்டு, சீரகம் 1/4 டீஸ்பூன் அளவில் கலந்து கொள்ளுங்கள். அதிகமாக சத்துக்களை கொண்ட சுத்தமான நெய் 1/4 அல்லது 1/2 டீஸ்பூன் வரை விடலாம்.
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கக் கூடிய உணவுகளும் சில உண்டு. அதை இப்போது காணலாம்.
பொரித்த உணவுகள்:
எண்ணெய்யில் பொரித்த உணவுகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அவற்றை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லதல்ல .எப்போதாவது அவர்கள் ஆசைக்காக கொடுக்கலாமே தவிர, தினமும் என்னை பொரித்த நொறுக்குத்தீனிகளை கொடுப்பது நல்லதல்ல. துரித உணவுகளான ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், சிக்கன் நக்கெட்ஸ், மொஸெரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ், ஸ்மைலிஸ், பிரெஞ்சு பிரைஸ் கட்டாயம் கொடுக்கக் கூடாது. இந்த மாதிரியாக பொரித்த உணவுகளில் காணப்படும் கொழுப்பு குழந்தைகளுடைய இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.
இதையும் படிங்க: இதை செய்தால் போதும்... இனி உங்கள் குழந்தை இருட்டு கண்டு பயப்படாது..!!
பிரட் அண்ட் ரோல்ஸ் :
இப்போது மக்களிடையே பிரபலமாகி வரும் உணவில் பிரட் அண்ட் ரோல்ஸ் (Bread & Rolls) முக்கியமானது. பிரட் வைத்து செய்யும் இந்த பண்டம் குழந்தைகளுக்கும் விருப்பமானது. ஆனால் ஒரு வெள்ளை பிரட் துண்டில் 80 முதல் 230 மில்லிகிராம் வரை உப்பு உள்ளது. அதன் மீது வெண்ணெய் தடவினால், அதனுடைய சோடியம் அளவு மேலும் உயரும். நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் ஒரு நாளில் 2 டீஸ்பூன் உப்பு (சோடியம் குளோரைடு) சாப்பிட்டாலே போதுமாம். ஆனால் பிரட் ரோல்ஸ் மாதிரியான உணவில் ஒரு நாளில் குழந்தைகள் சாப்பிடும் சோடியம் அளவு அதிகமாக உள்ளது. இப்படி அடிக்கடி சாப்பிட்டால் குழந்தைகளுடைய மூளை, சிறுநீரகங்கள், இதயம் போன்றவை பாதிக்கலாம்.
இதையும் படிங்க: துரித உணவில் கலக்கும் அந்த 'ஒரு' பொருள்.. இரவில் கொடுத்தால் குழந்தைகளுக்கு பேராபத்து!!
பீட்சா/பர்கர் :
குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர் போன்ற மேலை நாட்டு உணவுகள் மீது ஒரு மோகம் உண்டு. ஆனால் அவை அவர்களின் உடலுக்கு நல்லது கிடையாது. பெரியோர்களே அன்றாட உணவில் ஒருநாளுக்கு 2 கிராம் அளவில் மட்டும் உப்பு சேர்த்தால் போதும். குழந்தைகள் அதை விட குறைவாக சாப்பிட வேண்டும்.
ஆனால் குழந்தைகள் ஒரு நாளுக்கு உண்ண வேண்டிய மொத்த உப்பு அளவில் 25 சதவீதம் பீட்சா அல்லது பர்கரில் உள்ளது. எந்த டாப்பிங்ஸும் சேர்க்காத ஒரு சாதாரண சீஸ் பீட்சாவை எடுத்து கொண்டால் அதில் 370 முதல் 730 மில்லிகிராம் வரையிலும் சோடியம் காணப்படுகிறது. கடைகளில் வாங்கும் சீஸ் பிட்ஸாவில் 510முதல் 760 மில்லிகிராம் சோடியம் உள்ளது.
சோடியம் என்பது உப்பு. குழந்தைகள் உண்ணவே கூடாத உணவில் பீட்சா, குறிப்பாக சீஸ் பர்கர் உள்ளது. அதனால் துரித உணவுகள், பொரித்த உணவுகள், சீஸ் பர்க்ர் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.