Why 3 Pin Plug has Bigger Pin: 3 பின் பிளக்குகளில் ஒரு பின் மட்டும் மற்ற இரண்டை விட நீளமாகவும் தடினமாகவும் இருக்கும். இதற்கு பின்னால் உயிரைக் காக்கும் அறிவியல் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
நம் வீட்டில் உள்ள ஏசி, ஃபிரிட்ஜ் போன்ற பெரிய எலக்ட்ரானிக் சாதனங்களில் 3 பின் பிளக் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த பிளக்கில் ஒரு பின் மட்டும் நீளமாகவும், தடிமனாகவும் இருக்கும். இதற்கு பின்னால் மிகப்பெரிய தொழில்நுட்ப காரணம் ஒன்று உள்ளது. இது வெறும் வடிவமைப்பு சார்ந்த தேர்வோ, அழகு சார்ந்ததோ கிடையாது. இது இதற்குப் பின்னால் உயிரையே காக்கும் அளவிற்கு ஒரு பெரிய இன்ஜினியரிங் ட்ரிக் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
நாம் பிளக்கை சாக்கெட்டுக்குள் (Socket) நுழைக்கும் பொழுது அந்த பெரிய பின் தான் முதலில் உள்ளே செல்லும். பிளக்கை வெளியில் எடுக்கும் பொழுது எர்த் பின் தான் கடைசியாக வெளியே வரும். 3 பின் ப்ளக்கை சாக்கெட்டில் சொருகும் பொழுது அந்த பெரிய பின் தான் முதலில் தொடர்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக சாதனத்தில் ஏதேனும் மின் கசிவு ஏற்பட்டால் மின்சாரம் உங்கள் உடலை அடைவதற்கு முன்னர் அந்த பெரிய பின் வழியாக பாதுகாப்பாக பூமிக்குள் கடத்தப்பட்டு விடும். எனவே நமக்கு ஷாக் அடிப்பது தவிர்க்கப்படுகிறது.
பெரிய மற்றும் தடிமனான பின் வடிவமைப்புக்கான காரணங்களை தெரிந்து கொள்வதற்கு முன்னர் அதிக மின்சுமை கொண்ட சாதனங்களுக்கு 3 பின் பிளக்குகள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏசிகள், ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன், கீசர்கள் போன்ற சாதனங்கள் உலோக உறைகளைக் (Metal Casing) கொண்டவை. இத்தகைய சாதனங்களில் மின் கசிவு ஏற்படும் அபாயம் மற்ற சாதனங்களைக் காட்டிலும் அதிகம். மொபைல் சார்ஜர்கள், ட்ரிம்மர்கள் போன்ற குறைந்த மின்சாரம் தேவைப்படும் சாதனங்களுக்கு மின் கசிவு அபாயம் குறைவு. எனவே அவற்றுக்கு 2 பின் பிளக்கே போதுமானது.
அதிக மின்சாரம் தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் முறையான எர்த் இணைப்பு இல்லை என்றால் அதைத் தொடும்பொழுது ஷாக் அடிக்கக்கூடும். இதனால் அதிக மின்சுமை கொண்ட அனைத்து சாதனங்களுக்கும் 3 பின் பிளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த 3 பின் பிளக்குகள் சாக்கெட்டுக்குள் நுழைந்த உடனேயே நியூட்ரல் மற்றும் ஃபேஸ் பின்களுக்கான இணைப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே, எர்த் பின்னுக்கான இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. சாதனம் மின்சாரத்தை பெறுவதற்கு முன்பே எர்த் அமைப்பு செயல்படத் தொடங்குகிறது. எனவே சாதனத்திற்குள் ஷாட் சர்க்யூட் அல்லது மின் கசிவு ஏற்பட்டாலும் மின்சாரம் உங்கள் உடலை அடையாது.
மேலும் எர்த் பின் தடிமனாக இருப்பதால் அதை தவறுதலாக ஃபேஸ் அல்லது நியூட்ரல் துளைகளுக்குள் நுழைக்க முடியாது. வடிவமைப்பு மாறினால் ஆபத்து என்பதால் இதன் இடம் இதுதான் என்பதை உறுதிப்படுத்த அது தடிமனாக செய்யப்பட்டுள்ளது. இயற்பியல் விதிகளின்படி ஒரு கடத்தியின் தடிமன் அதிகமாகும் பொழுது அதன் மின் எதிர்ப்பு குறைகிறது. மின் கசிவு ஏற்படும்பொழுது மின்சாரம் நம் உடலை தாக்குவதை விட மிகக் குறைந்த எதிர்ப்பு திறன் கொண்ட தடினமான எர்த் பின் வழியாக வேகமாக பூமிக்கு சென்று விடும்.
சுருக்கமாக சொன்னால் எர்த் பின் நீளமாகவும், தடிமனாகவும் இருப்பது சாக்கெட்டுடன் முதலில் இணைப்பை ஏற்படுத்தவும், மின்சாரத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் பூமிக்கு கடத்தவும் உதவுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.