
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி இருக்கிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 7.65 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக முகேஷ் அம்பானி இருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது..
அம்பானியின் தலைமை ரிலையன்ஸ் நிறுவனத்தை குறிப்பிடத்தக்க உயரத்திற்கு கொண்டு சென்றது. எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களை தாண்டி தொலைத்தொடர்பு (ஜியோ பிளாட்ஃபார்ம்கள்), சில்லறை வணிகம் (ரிலையன்ஸ் ரீடெய்ல்) மற்றும் மீடியா என பல துறைகளில் அந்நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
முகேஷ் அம்பானியின் வழிகாட்டுதலின் கீழ், பிப்ரவரி 2024 இல் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது. அதாவது ரூ. 20 லட்சம் கோடி என்ர சந்தை மூலதனத்தை எட்டிய முதல் இந்திய நிறுவனமாக ஆனது.
1985 ஆம் ஆண்டு நீதாவை முகேஷ் அம்பானி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அம்பானி தனது பிள்ளைகளின் திருமணங்களை பிரம்மாண்டமாக நடத்தினார். அம்பானி குடும்பத்தின் திருமணங்கள் குறித்து அதற்கு அவர் எத்தனை கோடிகளை செலவு செய்தார் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
அம்பானி மகள் இஷா அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் ஆனந்த் பிராமலுக்கும் கடந்த 2018 டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இஷாவின் கொண்டாட்டங்கள் இத்தாலியில் நிச்சயதார்த்தத்துடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து உதய்பூரில் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள். மும்பையில் உள்ள அவர்களின் இல்லமான ஆன்டிலியாவில் திருமணம் நடைபெற்றது.
அங்கு பியோனஸ் போன்ற பிரபலங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ஆடம்பரமான அழைப்பிதழ்கள் மற்றும் நிகழ்ச்சிகள் உட்பட திருமணத்தின் மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ. 830 கோடிகள், இது இந்திய வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த திருமணங்களில் ஒன்றாகும்.
முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் 2019 மார்ச் மாதம் மிகவும் ஆடம்பரமான முறையில் திருமணம் நடந்தது. சுவிட்சர்லாந்தில் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதை தொடர்ந்து மும்பையில் 3 நாள் விழாவாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது..
இந்த நிகழ்வானது தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட உலகளாவிய பிரமுகர்களை ஈர்த்தது, ஒரு திருமண அழைப்பிதழின் மதிப்பு ரூ. 1.5 லட்சம் என்று கூறப்பட்டது. ஆகாஷ் அம்பானி - ஷ்லோகா மேத்தாவின் திருமண செலவு ரூ. 1200 கோடி என்று கூறப்படுகிறது.
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும் தங்களுடைய இளைய மகனின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினர்.. ஜாம்நகரில் நடந்த முதல் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் ரிஹானா, ஏகான் மற்றும் தில்ஜித் டோசாஞ்ச் போன்ற சர்வதேச நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
மார்ச் மாதம் தொடங்கிய ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் பில் கேட்ஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற கோடீஸ்வரர்கள் உட்பட பல சர்வதேச பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஜூன் மாதத்தில், இத்தாலியில் இருந்து பிரான்சுக்கு ஒரு ஆடம்பரமான பயணத்துடன் 2வது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நடந்தது. இந்த நிகழ்விலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள், மற்றும் சர்வதேச நட்சத்திரங்களுக்கு கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்ட சம்பளம் என இந்த திருமண விழாக்களுக்கு சுமார் ரூ. 5,000 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த எண்ணிக்கை, இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸின் திருமணத்திற்கு செலவான ரூ. 1,361 கோடியை விட அதிகம் என்பதால் இது உலகின் மிகவும் விலை உயர்ந்த திருமணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஜாம்நகர் நிகழ்வில் பங்கேற்ற ரிஹானாவுக்கு ரூ. 74 கோடியும், சங்கீத் இரவில் தோன்றியதற்காக ஜஸ்டின் பீபருக்கு ரூ. 83 கோடியும் குறிப்பிடத்தக்க செலவினங்களில் அடங்கும். ஆடம்பரமான பிரைவேட் ஜெட் விமானங்கள் மற்றும் விரிவான பாதுகாப்புக்கான செலவுகளை ஈடுகட்ட, திருமணத்திற்கு முந்தைய விழாக்களுக்காக மட்டும் ரூ.2,500 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.