
ஒருவரின் உடலுக்கு விளக்காக இருப்பது கண்கள் தான். அவை மனிதர்களின் வாழ்வில் ஒளியை கொண்டு வருகிறது. கண்கள் இல்லாத வாழ்வை கற்பனை செய்து பாருங்கள். இருள்மயமாக இருக்கும். அங்கு ஒளி அல்ல, ஒலி தான் வழிகாட்டி. தொடுதல் தான் அவர்களுக்கு மொழியாக இருக்கும்.
அந்த இருள் சூழ்ந்த வாழ்வை ஒருவர் அனுபவிக்க வேண்டாம் என்ற நல்ல நோக்கில் தான் கண் தானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ஒரு நபர் இறக்கும்போது அவரின் கண்களால் இன்னொருவர் ஒளிமயமான வாழ்வை பெறுகிறார். வீணாகும் கண்களை பயன்படுத்த கண் தான் மிகச்சிறந்த வழி.
கண் தான் எல்லா தானத்தை விடவும் சிறந்த தானம். கண் தானம் செய்வதற்கு முன்கூட்டியே பதிவு செய்யலாம். இறந்த பின்பும் உடனடியாக பதிவு செய்து தானம் செய்யலாம். இதனால் ஒருவர் இறப்புக்கு பின் மருத்துவமனையில் இருந்து தகுந்த ஏற்பாடுகளுடன் வந்து கண்களை எடுத்து செல்வார்கள். ஆனால் இதற்கென குறிப்பிட்ட கால அவகாசம் உண்டு. உயிரிழந்த பின் எவ்வளவு மணி நேரத்திற்குள் கண்களை தானம் செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. யார் யார் தானம் செய்ய வேண்டும் என்பது பலர் அறிந்து கொள்ளாத விஷயம். இதற்கான தகவல்களை இங்கு காணலாம்.
யாருக்கு அந்த கண்களை பொருத்துவார்கள்?
தானம் செய்யப்படும் கண்களை அதற்கான தேவை அதிகமுள்ள நபர்களுக்கு பொருத்துவார்கள். ஏற்கனேவே கருவிழியில் நோய் பாதிப்புள்ளவர்கள், கண்களில் காயம், ஊட்டச்சத்து குறைபாடு, நோய்க்கிருமி தாக்குதல், மரபணு நோய்கள், விபத்துகள், அறுவை சிகிச்சையினால் வரும் பிரச்சனைகள், கருவிழி நோய்களால் பார்வையிழப்பு ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு தானம் செய்யப்பட்ட கண்கள் பொருத்தப்படும்.
யார் தானம் செய்யக்கூடாது?
குணப்படுத்தவியலாத கொடும் நோயான எய்ட்ஸ் உள்ளவர்கள், சிபிலிஸ், ரத்தத் கொற்று உள்ளவர்கள், மஞ்சள் காமாலை பாதிப்புள்ளவர்கள், ரண ஜன்னி, காலரா, விஷக் காய்ச்சல் பாதிப்பு, மூளைக் காய்ச்சல், ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரழந்தவர்களின் கண்களைத் தானமாக பெறமாட்டார்கள். அதனை தானம் செய்வதும் கூடாது.
இறந்த பிறகு கண்களை தானம் செய்யலாமா?
ஒருவர் உயிரிழந்த 4 முதல் 6 மணி நேரத்திற்குள் கண்களை தானம் செய்ய வேண்டும். உயிரிழந்தவரின் கண்களை அருகே அமைந்துள்ள கண் வங்கிக்கு தானமாக கொடுக்கலாம். அருகேயுள்ள வங்கியில் சொல்வதால் சரியான நேரத்தில் கார்னியா மாற்று அறுவை சிகிச்சையை விரைவில் செய்ய வாய்ப்பு ஏற்படும். ஒருவர் இறந்த 6 மணி நேரத்திற்குப் பின் கண்கள் மோசமான நிலையை அடையத் தொடங்கும்.
இறந்தவர் கண்தானம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை:
ஒருவர் இறந்த பிறகு 6 மணி நேரத்திற்குள்ளாக கண்களை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். கண் தானம் செய்த நன்கொடையாளர் உயிரிழந்த பின் அவருடைய கண்களில் ஈரமான துணியால் கட்டு போடுவது அவசியம். அவருடைய கண்கள் மூடிவைக்கப்பட வேண்டும். இப்படி கண்களை ஈரப்பதமாக வைப்பது அவசியம். அப்போது கண்கள் மோசமாகாது. ஒருவர் இறந்த 1 முதல் 2 மணி நேரத்திற்குள்ளாக தானம் செய்பவரைப் பற்றி கண் வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்படும். இறந்த நபரின் மருத்துவ வரலாறு, கண் தானம் செய்வதற்கான அவருடைய தகுதி ஆகியவை 2 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படும்.
இதையும் படிங்க: கண்களின் கீழ் தோன்றும் வீக்கம்.. உடனே சரியாக என்ன செய்யணும் தெரியுமா?
தானம் செய்யப்பட்ட கருவிழிகள் பாதுகாப்பு காரணமாக ஒரு சிறப்பு கரைசலில் வைக்கப்படுகிறது. அதனை 7 முதல் 14 நாள்களில் மாற்று அறுவை சிகிச்சையில் இன்னொருவருக்கு இடமாற்றம் செய்கிறார்கள்.
சரியான நேரத்தில் கண்களை தானம் செய்வதால், கண்களின் கார்னியாவின் தரம் நன்றாக இருக்கும். கார்னியா தான் ஒளியை கண்ணுக்குள் அனுமதிக்கும். தூசிகளால் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.
குறித்த நேரத்தில் கண்களை இறந்தவர் உடலில் இருந்து பாதுகாப்பான முறையால் எடுத்தால் மட்டுமே வெற்றிகரமான மாற்று அறுவை சிகிச்சையை செய்ய முடியும். இதன் மூலம் பார்வையில்லாத ஒருவருக்கு பார்வையை திரும்ப தரமுடியும்.
இதையும் படிங்க: இனி ஆபரேஷன் வேண்டாம்.. மருந்து வேண்டாம்.. கண் ஆரோக்கியமாக இருக்க 3 அற்புத வழிகள் இதோ..!!