
மதுபானங்களில் நிறைய வகைகள் உள்ளன. சிலருக்கு விஸ்கி, இன்னும் பிராந்தி என என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். அது மாதிரி சைடிஷும் வேறுபடும். சிலர் மதுவுடன் ஊறுகாய் மட்டும் சாப்பிட விரும்புவார்கள். சிலருக்கு கிரில் சிக்கன் விருப்பமாக இருக்கும். பெரும்பாலானோர் காரசாரமாக சைடிஷ் இருப்பதை விரும்புவார்கள்.
ஆகவே தான் சிப்ஸ், வறுத்த சிக்கன் கறி போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களால் தான் மது கடைகளுக்கு அருகில் சிக்கன் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. ஆனால் இதெல்லாம் மக்கள் விரும்பி உண்பவை. மதுபான கடையில் உள்ள ஊழியர்கள் பெரும்பாலும் உப்பு வேர்க்கடலையை தான் சைடிஷ் ஆக வழங்குவார்கள்.
இது பார்க்க சாதாரணமாக தோன்றலாம். ஆனால் பொரிகடலையோ, பட்டானியோ வழங்காமல் ஏன் உப்பு வேர்கடலையை மட்டும் பாரில் வழங்குகிறார்கள் என எப்போதாவது சிந்தித்திருப்பீர்களா? இதற்கு பின்னால் சில வியாபார தந்திரங்கள் உள்ளன.
சுவையை கூட்ட:
மதுபானத்தின் சுவையை வேறுபடுத்தி காட்ட உப்பு வேரக்கடலையை கொடுப்பார்கள். மதுவின் வீரியமான கசப்பு சுவையை கொஞ்சம் கலவையாக மாற்றி நாக்கின் சுவை மொட்டுக்களை திருப்திப்படுத்த உப்பு தடவிய வேர்க்கடலையை பார்களில் கொடுக்கிறார்கள். இதனால் வியாபாரமும் இரண்டு மடங்காகும் என உப்பு வேர்க்கடலையை கொடுக்கிறார்கள்.
தாகம்:
உப்பு தாகம் ஏற்படுத்தக் கூடியது. இதனால் வாய், தொண்டை ஆகிய பகுதிகளில் வறட்சி உண்டாகும். உப்பின் சுவையை தனிச்சையாக நாம் விரும்புவதில்லை. உடனே தண்ணீர் குடிக்க நினைப்போம். உப்பு கலந்த வேர்க்கடலையை சாப்பிடுவதால் தாக உணர்வு ஏற்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தாக உணர்வில் அடுத்தடுத்து குடித்து கூடுதலாக மது அருந்துவார்கள். அந்த வகையில் மதுபான கடைகள் லாப நோக்கத்தில் அந்தக் கடலைகளை கொடுக்கின்றனர்.
ஆசையை தூண்டும்:
மது அருந்துபவர்கள் சைடிஷாக இனிப்பை விட காரம் மற்றும் துவர்ப்பை விரும்புவார்கள். அதனால் தான் வேர்க்கடலை, சிப்ஸ் ஆகியவை அவர்களுக்கு பிடிக்கிறது. ஒருவர் மது அருந்தும்போது அதில் உள்ள ஆல்கஹால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். இதன் காரணமாகவும் உப்பு/ காரமான உணவுகளை உண்ணும் ஆசை அதிகமாகும். வாடிக்கையாளர்களின் ஆசையை தூண்ட உப்பு வேர்கடலையை பார்களில் கொடுக்கிறார்கள்.
நேர்மறை விளைவு:
வியாபார நோக்கத்திற்காக வேர்க்கடலை வழங்கப்பட்டதாக தோன்றினாலும், வேர்க்கடலையில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு, புரதச்சத்து போன்றவற்றை மறுக்க முடியாதது. இது மதுபானம் ரத்தத்தில் அதிகமாக உறிஞ்சப்படுவதை தடுக்கின்றது. ரத்த சர்க்கரை அளவையும் சற்று குறைக்கிறது. இப்படி சில நேர்மறையான விளைவுகளும் ஏற்படுகின்றன.
நீரிழப்பு:
உப்பு தூவப்பட்ட தின்பண்டங்கள் உடலில் திரவ சமநிலையை பாதிக்கிறது. பொட்டாசியம், சோடியம் போன்ற எலக்ட்ரோலைட் இழப்பினால் நீரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. உடனடியாக ஏதேனும் ஒரு பானம் குடித்து அதனை மாற்ற மூளை தூண்டப்படும். இதனை ஈடுகட்டவே, மது அருந்துபவர்கள் தொடர்ந்து குடிக்கவும், சாப்பிடவும் செய்வார்கள். இதுவும் உப்பு வேர்க்கடலை கொடுக்க காரணம் தான்.
விலை மலிவாக கிடைக்க கூடிய பொருள் வேர்க்கடலை. இதை ஆள்விட்டு சமைக்க தேவையில்லை. செலவு குறைவு. ஆனால் வருமானம் பெரிது. பார் உரிமையாளர்கள் உப்பு வேர்கடலை வழங்க இதுவும் ஒரு காரணமாகும்.