
தரையில் நடைபயிற்சி செய்யும் போது பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் நீங்கள் தண்ணீரில் நடைபயிற்சி செய்யும்போது உங்கள் உடலுக்கு இன்றியமையாத நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? நீரில் நடைபயிற்சி செய்வது நல்ல பலன்களை தரும். வாட்டர் வாக்கிங் செய்தால் உடல் புத்துணர்வாக இருக்கும். நீரில் நடப்பது என்பது நீரூற்றி நடப்பதல்ல. நீச்சல் குளம், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் நடப்பதாகும். இதனால் எடை கணிசமாக குறையும். ஏனென்றால் தரையில் நடப்பதை விட நீருக்குள் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த பதிவில் தண்ணீரில் நடைபயிற்சி செய்வதன் நன்மைகளை காணலாம்.
வாட்டர் வாக்கிங் என்றால் என்ன?
வெறும் நடைபயிற்சி மூலமாக விரைவில் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த பயிற்சி வரப்பிரசாதம் என்று கூறலாம். இதை சரியாக செய்தால் தான் பலன். இல்லென்றால் சோர்வு மட்டும் தான் மிஞ்சும். தண்ணீருக்குள் சுறுசுறுப்பாக நடப்பது நல்ல பலன்களை தரும். நீங்கள் வாட்டர் வாக்கிங் செய்தால் நீர் இடுப்பு வரை அல்லது மார்பு பகுதி வரைக்கு இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். தினமும் தண்ணீரில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம். முடிந்தரை ஆபத்தில்லாத ஆறு அல்லது குளத்தில் நடங்கள். ஏனென்றால் தண்ணீரில் ஆபத்துண்டு. நீச்சல் குளத்தில் நடப்பது பாதுகாப்பானது.
இதையும் படிங்க: வாக்கிங் நல்லதா? ஆரோக்கிய நன்மைகளுக்கு எவ்வளவு நேரம் நடக்கனும் தெரியுமா?
எடை குறைப்பு:
நீரில் நடைபயிற்சி செய்வது உடலை முன்னோக்கி நகர்த்த இயற்கையாகவே ஒரு எதிர்ப்பை செய்கிறது. இதனால் உடற்தசைகளுக்கு அதிக இயக்கம் தேவைப்படுகிறது. இது தரையில் நடப்பதைவிட அதிக ஆற்றலை எடுத்து கொள்வதால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். அதிக கலோரிகளை எரிக்கும் போது எடையும் கட்டுக்குள் இருக்கும். கொலஸ்ட்ராலை குறைக்க தண்ணீருக்குள் நடக்கலாம்.
மொத்த உடலுக்கும் பயிற்சி:
நாம் தரையில் நடக்கும் போது முழு உடலையும் ஈடுபடுத்தமாட்டோம். ஆனால் தண்ணீருக்குள் நீங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் ஒட்டுமொத்த உடலுக்கும் அது பயிற்சியாக அமையும். நாம் தண்ணீருக்குள் நடக்கும் போது நமது கைகள், முதுகு, தசைகள், கால்கள் ஆகியவற்றில் இயக்கம் இருக்கும். நீரை எதிர்த்து நடக்க முயற்சி செய்யும்போது அதில் ஆற்றலை செலவழிக்கிறோம். இதனால் நம்முடைய தசைகள் வலுவாகின்றன. நீங்கள் தண்ணீருக்கும் நடைபயிற்சி செய்யும் போது நடுவில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டால் கூடுதல் பயன்கள் பெறலாம்.
மசாஜ்!
வாட்டர் வாக்கிங் கால்களை நன்கு இயங்க வைக்கும். நீருக்குள் கால்களுக்கு ஏற்படும் அழுத்தமானது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஏதேனும் காயங்கள், தசைப்பிடிப்பு போன்றவை இருந்தால் அவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ரன்னிங் போன்றவற்றால் ஏற்படும் உடல் வலிக்கு வாட்டர் வாக்கிங் ரிலாக்ஸிங்காக இருக்கும்.
உடலின் சமநிலை:
தரையில் நடப்பது நம்முடைய தோரணையை மாற்றும். அதைப் போலவே தண்ணீரில் நடப்பதால் உடலுக்கு சமநிலை கிடைக்கிறது. ஏற்கனவே உடலில் உறுதியற்ற தன்மை இருப்பவர்களை சரி செய்து அவர்களுக்கு நிலைப்புத் தன்மையும், சமநிலையும் தருகிறது. மன அழுத்தத்தை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தண்ணீருக்குள் நடப்பது பயனளிக்கிறது.
இதையும் படிங்க: 10,000 காலடிகள் நடக்குறீங்களா? உடனே நிறுத்துங்க.. 'வாக்கிங்' பத்தின தவறான புரிதல்
மூட்டு வலி!
தரையில் நடக்கும்போது சிலருக்கு மூட்டுவலி அதிகமாகலாம். ஆனால் தண்ணீரில் நடந்தால் அது குறைந்த தாக்கம் கொண்டதாக இருக்கும். மூட்டுகளில் அதிகமான அழுத்தம் உண்டாகாது. இதனால் மூட்டுகளை பாதிக்காமல் அதிக நேரம் நடக்கலாம். தண்ணிரீன் மிதப்புத்தன்மை உடலை ஆதரிப்பதால் முழங்கால்கள், இடுப்புத் தசைகள், முதுகுத்தண்டில் ஏற்படக் கூடிய தாக்கம் மிதமாக உள்ளது.
யார் செய்யலாம்?
எல்லா வயதினருக்கும் வாட்டர் வாக்கிங் சிறந்த பயிற்சி தான். எந்தக் காயமும் இன்றி பலன்கள் பெறலாம். குறைந்த தாக்கம் கொண்ட கார்டியோ பயிற்சி என்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். உடலுக்கு மசாஜ் போல செயல்பட்டு அசதியை நீக்குகிறது.