தினமும் வெறும் 30 நிமிடங்கள் தூங்கினால் ஆயுளை இரட்டிப்பாக்க முடியுமா? உண்மை என்ன?

First Published Sep 4, 2024, 5:11 PM IST

டெய்சுகே ஹோரி என்ற ஜப்பானிய நபர், தனது வாழ்நாளை‘இரட்டிப்பாக்க’ ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடம் என்ற கடினமான தூக்கத்தை கடைபிடித்துள்ளார். இந்த நடைமுறை அவரது பணித்திறனை பெரிதும் அதிகரித்துள்ளது என்று அவர் கூறுகிறார். இருப்பினும், மிகக் குறுகிய தூக்கம் ஆரோக்கியமானதா?

Sleeping

தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மணிநேர தூக்கம் அவசியம் என்று பரவலாக நம்பப்படுகிறது. அதே நேரம் மோசமான தூக்க முறைகள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஆனால் , ஜப்பானில் ஒரு நபர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான். டெய்சுகே ஹோரி (Daisuke Hori) என்ற ஜப்பானிய நபர், தனது வாழ்க்கையை ‘இரட்டிப்பாக்க’ ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடம் என்ற கடினமான தூக்கத்தை கடைபிடித்துள்ளார். இந்த நடைமுறை அவரது பணித்திறனை பெரிதும் அதிகரித்துள்ளது என்று அவர் கூறுகிறார். இருப்பினும், மிகக் குறுகிய தூக்கம் ஆரோக்கியமானதா?

Japanese man Daisuke Hori

குறைந்தபட்ச தூக்கம்

டெய்சுகே ஹோரி என்ற ஜப்பானியர் தனது வாழ்க்கையை இரட்டிப்பாக்க ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே உறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

40 வயதான தொழிலதிபர், மேற்கு ஜப்பானின் ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்தவர். இது தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துடன் சாதாரணமாகச் செயல்பட பயிற்சியளித்ததாகக் அவர் கூறுகிறது. ஒவ்வொரு நாளும் அதிக சுறுசுறுப்பான நேரத்தைப் பெற அவர் 12 ஆண்டுகளுக்கு தூக்க நேரத்தை குறைக்க தொடங்கினார்.

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் உடற்பயிற்சி அல்லது காபி குடித்தால், நீங்கள் தூக்கத்தைத் தடுக்கலாம்" என்று டெய்சுகே கூறியுள்ளதாக South China Morning Post செய்தி வெளியிட்டுள்ளது.

Latest Videos


Japanese man Daisuke Hori

ஜப்பானில் உள்ள யோமியூரி டிவி Will You Go With Me என்ற ஒரு ரியாலிட்டி ஷோவில், டெய்சுய்க்-ன் கூற்றுகளை இன்னும் விரிவாக ஆராய மூன்று நாட்கள் அவரை நெருக்கமாகப் பின்தொடர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் டெய்சுய்க் வெறும் 26 நிமிடங்கள் தூங்கினார், புத்துணர்ச்சியுடன் எழுந்தார், காலை உணவை சாப்பிட்டார், வேலைக்குச் சென்றார், மேலும் ஜிம்மிற்குச் சென்றார்.

இந்த நடைமுறை அவரது வேலை திறனை பெரிதும் அதிகரித்துள்ளது என்றும், கவனம் செலுத்தும் போது நீண்ட தூக்கத்தை விட உயர்தர தூக்கம் முக்கியமானது என்று டெய்சுகே ஹோரி தெரிவித்துள்ளார். மேலும் “ தங்கள் வேலையில் நிலையான கவனம் தேவைப்படும் நபர்கள் நீண்ட தூக்கத்தை விட உயர்தர தூக்கத்தால் அதிகம் பயனடைகிறார்கள். உதாரணமாக, மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குறுகிய ஓய்வு காலங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் அதிக செயல்திறனைப் பேணுகிறார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

டெய்சுகே 2016 இல் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர்ஸ் பயிற்சி சங்கத்தை நிறுவினார். இந்த நிறுவனம் உடல்நலம் மற்றும் தூக்க வகுப்புகளை வழங்குகிறது. 2,100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்றுவரை அல்ட்ரா ஷார்ட் ஸ்லீப்பர்களாக மாறுவதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளனர்.

Sleeping

பயிற்சிக்குப் பிறகு, அவரது மாணவர் ஒருவர் Yoimuri TVயிடம் தனது தூக்கத்தை எட்டு மணி நேரத்திலிருந்து 90 நிமிடங்களாகக் குறைத்துக் கொண்டதாகக் கூறினார், கடந்த நான்கு வருடங்களாக நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பதாகவும் கூறினார்..

ஆனால் இந்த குறைவான தூக்க முறை சமூக ஊடகங்களில், நிகழ்வுகள் ஆன்லைன் விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த அல்ட்ரா-குறுகிய தூக்க முறையில் பல எதிர்மறை அம்சங்கள் இருப்பதாகவும் இது அனைவருக்கும் பரிந்துரைக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையின்படி, ஒரு சிலருக்கு மட்டுமே மரபணு மாற்றம் உள்ளது, இது ஒரு இரவில் 6.5 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கத்தில் எந்த தெளிவான உடல்நல விளைவுகளும் இல்லாமல் செயல்பட அனுமதிக்கிறது. எனினும் இந்த மரபணு மாற்றம் மிகவும் அசாதாரணமானது; 25,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த மரபணு பாதிப்பு உள்ளது.. மற்ற அனைவரும் இரவில் ஏழு மணிநேரம் தொடர்ந்து தூங்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்து 3 மாதம் வரையிலான குழந்தைகள் 14-17 மணி நேரம் தூங்க வேண்டும். 4-12 மாதங்கள் வரையிலான குழந்தைகள் 12-16 மணி நேரம் தூங்க வேண்டும். 1 - வயது வரை உள்ள குழந்தைகள் 11-14 மணி நேரம் தூங்க வேண்டும். 3-5 வயது வரை உள்ள குழந்தைகள் 10-13 மணி நேரம் தூங்க வேண்டும். 

Sleeping

6-12 வயது வரை உள்ள குழந்தைகள் 9-12 மணி நேரம் தூங்க வேண்டும். 13-17 வயது வரை உள்ள பிள்ளைகள் 8-10 மணி நேரம் தூங்க வேண்டும். 18-60 வயது வரை உள்ள பெரியவர்கள் 7 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் தூங்க வேண்டும். 61 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் தூக்கம் உடலையும் மூளையையும் மீட்டெடுக்கவும் சரிசெய்யவும் உதவும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். நாள்பட்ட தூக்கமின்மை நினைவாற்றல் குறைவு, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை கோளாறுகள் மற்றும் இருதய நோய்களின் அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

வியட்நாமில் தாய் என்கோக் என்ற 80 வயதான நபர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தூங்காமல் இருந்து வருகிறார்.. 1962 இல் காய்ச்சலைத் தொடர்ந்து தன்னால் தூங்க முடியவில்லை என்று அவர் கூறுகிறார். பல சிகிச்சைகள் மற்றும் தூக்க மருந்துகளுக்குப் பிறகும் அவரது தூக்கமின்மை மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!