
இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் மருத்துவ செலவுகள் மாத வருமானத்தை விட அதிகம். சரியான உணவு பழக்கம், போதிய உறக்கம் போன்றவை இல்லாமல் இளைய தலைமுறையினர் கூட உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். சிறியவர் முதல் பெரியவர் வரை உடலை ஆரோக்கியமாக பராமரிக்க எந்த செலவும் இல்லாத ஒரே பயிற்சி நடைபயிற்சி தான். நாள்தோறும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி ஆகியவை மேற்கொள்ள வேண்டும்.
நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக வாழ காலை நடைபயிற்சி உதவுகிறது. ஆனால் காலையில் நடைபயிற்சியை முடித்ததும் நாம் செய்யும் சில தவறுகள் அதற்கான பலனை பெற முடியாமல் போவதற்கு காரணமாகி விடுகிறது. காலையில் வாக்கிங் செய்த பின்னர் எந்தெந்த விஷயங்களை செய்வதன் மூலம் முழு பலன்களை அனுபவிக்க முடியும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் காலையில் சுறுசுறுப்பாக நடைபயிற்சி மேற்கொண்டால் உங்களுடைய உடல் வெப்பமாக இருக்கும். நடைபயிற்சிக்கு பின் வீட்டிற்கு போய் குளிப்பது உடலை குளிரச் செய்ய உதவும். உடலை புத்துணர்வாக உணர செய்ய, உடல் வெப்பத்தை தணிக்க குளிப்பது நல்ல தீர்வாக இருக்கும். வாக்கிங் சென்று வந்த பின்னர் ஏசியில் அமரக்கூடாது. மின்விசிறியை மிதமாக வைத்து கொஞ்சம் காற்று வாங்கலாம். இப்படி சற்று இளைப்பாறினால் உங்களுடைய இதயத்துடிப்பை சீராக கொண்டுவர உதவும்.
இதையும் படிங்க: எடை குறைய '8' வடிவ வாக்கிங்.. எத்தனை நிமிஷம் நடந்தால் பலன் கிடைக்கும்?
நீரேற்றமாக இருங்கள்!
நீங்கள் நடை பயிற்சி முடித்து வீட்டிற்கு திரும்பிய பின்னர் எவ்வளவு கடினமாக உடற்பயிற்சி செய்தீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதாவது நீங்கள் நடந்த வேகம், தூரம் ஆகியவற்றை பொறுத்து அது மாறுபடும். உங்களுடைய பிட்னஸ் ட்ராக்கரில் எவ்வளவு கலோரிகளை எரித்துள்ளீர்கள் என பார்க்கவேண்டும். கடினமாக நீங்கள் பயிற்சி எடுத்திருந்தால் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். மிதமான உடற்பயிற்சியை செய்திருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். ஏனென்றால் நடக்கும்போது வியர்வை வெளியேறி நீரிழப்பு ஏற்படும். இதைத் தடுக்க நடைபயிற்சிக்கு பின் தண்ணீர் தான் குடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இளநீர் அருந்தலாம். உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் வகையில் ஏதேனும் பழச்சாறு குடிக்கலாம். இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் உங்களை நீரற்றமாக வைத்திருப்பதோடு மட்டுமின்றி சருமத்தையும் பராமரிக்க உதவும். இதில் காணப்படும் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகின்றன.
சாதாரண நீரா, வெந்நீரா?
நடைபயிற்சி முடித்து வீட்டிற்கு வந்ததும் வெந்நீர் அருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் உடற்பயிற்சிக்கு பின் குளிர்ந்த நீரை குடித்தால் தசைகளில் விறைப்புத்தன்மை வர வாய்ப்புள்ளது. வெந்நீர் உங்களுடைய தசைகளை தளர்வடைய செய்கிறது. வெந்நீர் அருந்திய 25 நிமிடங்களுக்குள்ளாக ஏதேனும் பழங்களை சாப்பிடலாம். நடைபயிற்சியால் உங்களுடைய உடலில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படும். இதனால் உடலுக்கு மீண்டும் ஆற்றல் தேவைப்படும். இதற்கான ஊட்டச்சத்துக்களை பெற பழங்கள் சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது. இது தவிர புரோட்டீன் ஷேக் அருந்தலாம். அவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
இதையும் படிங்க: ஓவர் வாக்கிங் உடம்புக்கு நல்லதல்ல.. பொதுவா நடைபயிற்சியில் பண்ற '3' தவறுகள்!!
கண்டிப்பாக செய்ய வேண்டியது:
காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதை பழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் அதனை தொடர்ந்து செய்யும்போது மட்டுமே முழு பலன்களை காண முடியும். எந்த உடற்பயிற்சியுமே குறுகிய காலத்தில் அதனுடைய நேர்மறையான விளைவுகளை வெளிப்படுத்தாது. நீண்ட காலம் செய்யும்போதுதான் அதனுடைய பலன்களை அனுபவிக்க முடியும். உடற்பயிற்சி செய்யும் போது அதிகப்படியான நீர் உடலில் இருந்து வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளது. ஆகவே நாள் முழுக்க தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். உடலை நீரேற்றுமாக வைத்திருக்க வெள்ளரிக்காய், வெங்காயம், சுரைக்காய், வாழைப்பழம் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.