
இன்னும் ஒருநாளில் புத்தாண்டு வரப் போகிறது. புத்தாண்டு என்றாலே புதிய விஷயங்கள் தான் நினைவுக்கு வரும். புதிய தீர்மானங்கள், புதிய பழக்கங்கள் என வாழ்க்கையை மாற்ற புதிய முடிவுகளை எடுக்க புத்தாண்டு நல்ல வாய்ப்பாக இருக்கும். நேர்மறையான விஷயங்களை செய்வதால் வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகள் கிடைக்கும். புதிய விஷயங்களை தொடங்குவதற்கு ஏற்ற புத்தாண்டில் ஆரோக்கியமான சில பழக்கங்களை நீங்கள் பின்பற்றினால் அதனால் இரட்டிப்பான பலன்கள் கிடைக்கும்.
புத்தாண்டில் நேரத்தை கவனமாக செலவிடுவது, நல்ல உணவு பழக்கம், உடற்பயிற்சி, யோகா போன்ற ஆரோக்கியத்திற்கு உகந்த பழக்கங்களை செய்ய தொடங்கலாம். எந்தெந்த பழக்கங்களை எப்படி பின்பற்றினால் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்பதை இங்கு காணலாம்.
திரை நேர மேலாண்மை:
நீங்கள் செல்போன், கணினி போன்றவற்றை அதிக நேரம் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்திக் கொண்டிருந்தால் அதை குறைக்க முயற்சி செய்யுங்கள். திரை நேரத்தை பொழுதுபோக்கிற்காக அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பயனுள்ள செயல்களை செய்வதற்கு நேரம் இல்லாமல் போய்விடும். இரவில் தூங்குவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பு டிஜிட்டல் தளங்களில் நேரம் செலவிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் உங்களுடைய மன அழுத்தம் குறையும். கவனச் சிதறல் ஏற்படாது. ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
உணவு பழக்கம்:
நீங்கள் ஹோட்டலில் அதிகம் சாப்பிடுபவராக இருந்தால் வீட்டு உணவுகளை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். துரித உணவுகள் சாப்பிடுவதைக் குறைத்து உடலுக்கு தீங்கு செய்யாத உணவுகளை எடுத்துக் கொள்ள பழகலாம். உங்களுடைய நல்ல உணவு பழக்கம் உடலை மட்டுமின்றி மனதையும் பராமரிக்க உதவுகிறது. ஆரோக்கியமாக இருக்கும் நபர்கள் மகிழ்ச்சியாக மாறத் தொடங்குகிறார்கள். அதனால் பதப்படுத்தப்பட்ட ஜங்க் புட், பாஸ்ட் புட் போன்றவை தவிருங்கள்.
மன அழுத்தம் குறைய!
மன அழுத்தமின்றி வாழ்வது மனிதர்களுக்கு இன்றியமையாததாக உள்ளது. உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க புதிய பழக்கங்களை புத்தாண்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய நினைவாற்றலை மேம்படுத்த, மனதை அமைதிப்படுத்த தினமும் யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். நாள்தோறும் உங்களுடைய வாழ்வின் மீதான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதமாக எழுதுவதை பழக்கப்படுத்தலாம். அதாவது நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை புத்தாண்டில் இருந்து தொடங்குங்கள்.
நண்பர்கள் சந்திப்பு:
உங்களுடைய நலனை விரும்பும் நண்பர்களே உங்களை சுற்றி வைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களை வருடத்தில் ஒருமுறை சந்தித்து பேசுவதை தவிர்த்து அவ்வப்போது அவர்களை சந்திப்பது அவர்களோடு உரையாடுவதையும் பழக்கப்படுத்தலாம்.
ஆழ்ந்த தூக்கம்:
நல்ல தூக்கம் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. நன்றாக தூங்குபவர்களின் மன அழுத்தம் குறைவாக இருக்கும். அவர்கள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். புத்துணர்வுடன் இருப்பதற்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் அவசியமாக கருதப்படுகிறது. அதனால் திரை நேரத்தைக் குறைத்து இரவில் சீக்கிரம் தூங்க செல்வது நல்லது. இந்த பழக்கத்தை புத்தாண்டில் இருந்து வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.