
வேர்க்கடலை பல்வேறு ஊட்டச்சத்துக்களின் தொகுப்பாகும். இதனால் பலரும் வேர்க்கடலையை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்கிறார்கள். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் வேர்கடலை சாப்பிட விரும்பாதவர்களே இல்லை. வேர்க்கடலை சாப்பிடுவதற்கு எவ்வளவு சுவையாக இருக்கிறதோ, அதே அளவுக்கு நம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். வேர்க்கடலையை பச்சையாகவோ, வறுத்தோ அல்லது அவித்தோ சாப்பிடலாம். அதுவும் குறிப்பாக, ஊறவைத்த வேர்க்கடலையை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அந்நாளுக்கு தேவையான ஆற்றல் முழுமையாக கிடைக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் பலவிதமான நன்மைகளை வழங்கும். சர்க்கரை நோயாளிகள், உயரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய பிரச்சினை உள்ளவர்கள் வேர்க்கடலையை சாப்பிடுவது தவிர்ப்பார்கள். ஆனால் இதில் நல்ல கொழுப்பு அதிகளவு இருப்பதால் இதை முற்றிலும் தவிர்ப்பதற்கு பதிலாக அளவாக எடுத்துக் கொள்ளலாம்.
வேர்க்கடலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
கால்சியம், இரும்பு, புரதம், நார்ச்சத்து, தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், கார்போஹைட்ரேட், சோடியம், பாஸ்பரஸ் மற்றும் பல வைட்டமின்களும் உள்ளன.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் '1' கைப்பிடி வேர்க்கடலை!! ஆரோக்கியம் தரும் '6' உண்மைகள்!!
வேர்க்கடலை சாப்பிடுவதன் நன்மை:
- வேர்க்கடலை கொழுப்பை குறைத்து இதய நோய் போன்ற அபாயத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதயத்தை பலப்படுத்தும்.
- உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வேர்க்கடலையை ஊற வைத்து பச்சையாக சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதன் மூலம் நீண்ட நேரம் பசி கட்டுப்படுத்தப்படும் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு எரிக்கப்படும்.
- ஊறவைத்த வேர்க்கடலையை முளைகட்டி அல்லது வேகவைத்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும் மற்றும் உடலையும் சுறுசுறுப்பாக வைக்கும்.
- பச்சை வேர்கடலையில் அதிக அளவு மெக்னீசியம் பாஸ்பரஸ் நிறைந்திருப்பதால், அவை எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
- வேர்க்கடலையில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி இதில் இருக்கும் புரதம் மற்றும் சில வைட்டமின்கள் புற்றுநோய் வராமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.
- வேர்க்கடலையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் வேர்கடலையை தாராளமாக சாப்பிடலாம்.
இப்படி பல்வேறு நன்மைகளை வேர்க்கடலை வழங்கினாலும், வேர்க்கடலையை சாப்பிட்ட பிறகு சிலவற்றை சாப்பிடக்கூடாது. இல்லையெனில் ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும் அது என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாதவை
சாக்லேட் :
வேர்கடலை சாப்பிட்ட பிறகு ஒருபோதும் சாக்லேட் சாப்பிட வேண்டாம். அதுவும் குறிப்பாக உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாக்லேட்டை சாப்பிட வேண்டாம். நீங்கள் வேர்க்கடலை சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் சாக்லேட் சாப்பிட வேண்டும்.
ஐஸ்கிரீம் :
வேர்க்கடலையில் நிறைய எண்ணெய் உள்ளதால் அதை சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டாம். ஏனெனில் வேர்க்கடலை இயற்கையாகவே சூடான தன்மை கொண்டது. ஐஸ்கிரீம் குளிர்ச்சியானது என்பதால் வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தொண்டை புண், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதையும் படிங்க: எக்கச்சக்க சத்துகள் உள்ள வேர்க்கடலையை இந்த 7 பிரச்சனை இருக்கவங்களுக்கு ஆபத்து!!
சிட்ரஸ் பழங்கள்:
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு ஆரஞ்சு, திராட்சை எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சாப்பிட கூடாது. மீறினால் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு ஏற்படும். குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே அலர்ஜி பிரச்சனை இருந்தால் வேர்க்கடலை சாப்பிட்டு பிறகு சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் வலி, இருமல் போன்ற பல பிரச்சனை வரை ஏற்படும்.
பால்:
வேர்க்கடலை சாப்பிட்ட உடனே பால் குடிக்க வேண்டாம். ஏனெனில் வேர்க்கடலையில் எண்ணெய் உள்ளதால் அதை சாப்பிட்ட உடனே பால் குடித்தால் ஜீரணமாவது கடினமாகும். மேலும் தொண்டை மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
தண்ணீர்:
வேர்க்கடலை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் வேர்க்கடலை எண்ணெய் உள்ளதால் உடனே தண்ணீர் குடித்தால் தொண்டை புண், எரிச்சல், சளி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வேர்கடலை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம்.