
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. தற்போது குழந்தை வளர்ப்பு சவாலான காரியமாக மாறிவிட்டது. குழந்தைகளை சுதந்திரமாக சிந்திக்கவும், வளரவும் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். ஆனால் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே நம்முடைய ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணித்து விடுகிறோம். இது குழந்தைகளின் வளர்ச்சியையும் மனநலனையும் பாதிக்கின்றன. பிள்ளைகள் மீது திணிக்கவே கூடாத சில முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
முதலில் பெற்றோர்கள் தங்கள் வாழ்வில் சாதிக்க முடியாத விஷயங்களை பிள்ளைகள் மீது திணிக்க கூடாது. உதாரணத்திற்கு, “நான் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என்னால் முடியவில்லை. நீ மருத்துவராக வேண்டும்” போன்ற எதிர்பார்ப்புகளை வைக்கக்கூடாது. இது குழந்தைகளுக்கு பெரும் சுமையாக மாறும். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனிப்பட்ட திறமைகள், விருப்பங்கள், ஆர்வங்கள் இருக்கும். அதற்கேற்ற வகையில் அவர்களை மெருகேற்றி வழி நடத்த வேண்டும். அதேபோல் குழந்தைகளை பிறருடன் ஒப்பிடுதல் கூடவே கூடாது. “அவன் உன்னை விட நன்றாக படிக்கிறான்” போன்ற வார்த்தைகள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை கடுமையாக பாதிக்கும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் வழிகாட்ட வேண்டும்.
குழந்தைகள் மீது தங்களின் மத ரீதியிலான பார்வைகள் மற்றும் அரசியல் நம்பிக்கைகளை திணைக்க கூடாது. குழந்தைகள் பருவத்தை அடையும் பொழுது தங்கள் மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகளை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே குறிப்பிட்ட கருத்துக்களை அவர்கள் மீது திணிப்பது அவர்கள் சுதந்திரமாக சிந்திப்பதற்கு தடையாக இருக்கும். அவர்களுக்குத் தேவையான தகவல்களை அளித்து அவர்களின் சொந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். குழந்தைகளின் நட்பு வட்டாரத்தை முடிவு செய்யும் இடத்தில் பெற்றோர்கள் இருக்கக்கூடாது. அதே சமயம் ஆபத்தான உறவுகளில் இருந்தும் அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த நண்பர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
ஆண் குழந்தையாக இருந்தால், “பெண் பிள்ளை போல் அழுகிறாயே” என்று கூறுதல் கூடாது. அதை போல் பெண் பிள்ளைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற பாலின பாகுபாடுகளை திணித்தல் கூடாது. குழந்தைகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் உடைகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும். அதே சமயம் அது பிறருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாத வகையிலும் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உலகம் ஆபத்தானது, எல்லோரும் நம்ப முடியாதவர்கள் போன்ற சொந்த பயங்களை குழந்தைகள் மீது திணிக்க கூடாது. இது குழந்தைகளுக்கு சமூகத்தை பற்றிய பயத்தை ஏற்படுத்தக்கூடும். புதிய விஷயங்களை முயற்சி செய்யவும் குழந்தைகளுக்கு தயக்கம் ஏற்படலாம். எனவே சமூகம் பற்றிய பாதுகாப்பான வழிகாட்டுதல்களை கொடுக்க வேண்டுமே தவிர அவர்களை பயமுறுத்துதல் கூடாது.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட கற்றல் முறை இருக்கும். ஒரு குழந்தை மனப்பாடம் செய்து படிப்பதில் சிறந்து விளங்கலாம். இன்னொரு குழந்தை அனுபவப்பூர்வமான கற்றல் முறையில் சிறந்து விளங்கலாம். எனவே ஒரு குறிப்பிட்ட கல்விமுறையை திணிக்காமல் குழந்தைக்கு எந்த முறை ஏற்றதோ அதற்கு உரிய ஆதரவளிக்க வேண்டும். அதேபோல் குழந்தைகளின் உடல் அமைப்பை பற்றிய கேலி கிண்டல்கள் கூடாது. ரொம்ப குண்டா இருக்க, ரொம்ப ஒல்லியா இருக்க போன்ற கருத்துக்கள் அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கலாம். அவர்கள் உடல் தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கலாம். இதன் காரணமாக அவர்கள் பொது வெளியில் தோன்றுவதை கூட தவிர்க்கலாம். எனவே இது போன்ற வார்த்தைகள் சமூகத்தில் இருந்து அவர்களை விலக்கும் என்பதை பெற்றோர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பருவமடைந்த குழந்தைகளாக இருப்பின் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். வழிகாட்டுதல்களை வழங்கலாமே தவிர அவர்கள் இந்த துறையை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. இது பிற்காலத்தில் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் குறைக்கலாம். அதே போல் குழந்தைகளை உணர்ச்சிகளை அடக்குவதற்கு கற்றுக் கொடுக்கக் கூடாது. சத்தமாக சிரிக்காதே, அழாதே போன்ற கட்டளைகளை இட வேண்டாம். குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.
குறிப்பு: இது குழந்தைகள் வளர்ப்பில் பொதுவான அறிவுரைகள் மட்டுமே. ஒவ்வொரு குழந்தையும் நன்றாக வளர்வதும் தீய வழியில் செல்வதும் அவர்களை வளர்க்கும் முறையில் இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையோடும் வளர வேண்டும் என்றால் அவர்களுக்கு போதுமான சுதந்திரத்தையும், அதே நேரம் அன்பையும் அளிக்க வேண்டும். குழந்தைகளின் தனித்துவத்தை புரிந்து அவர்கள் விருப்பப்படி வளர அனுமதிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.