
பெண்களுக்கு அந்தந்த வயதில் கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போனால் அது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதிலும் 30 வயதை தாண்டும் பெண்கள் அவர்களுடைய உடலை கூடுதலாக கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அதிலும் சில வைட்டமின் குறைபாடு உடல்நல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடுகிறது. ஒரு பெண்ணுக்கு வைட்டமின் பி 12 குறைபாடு வந்தால் அவளுடைய நரம்பியல் ஆரோக்கியம், மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கும்.
யாருக்கு ஆபத்து?
வைட்டமின் பி 12 குறைபாடு பொதுவாகவே பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், குழந்தை பேறு அடையும் வயதுள்ள பெண்கள்,
கர்ப்பிணிகள், சைவ உணவு மட்டும் சாப்பிடும் பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு இக்குறைபாடு மோசமான தாக்கத்தை உண்டாக்கும்.
அறிகுறிகள்:
வைட்டமின் பி12 குறைபாடு உள்ள பெண்களுக்கு உரிய காலத்தில் சிகிச்சை கொடுக்காவிட்டால் நாளடைவில் பிரச்சனை பூதாகரமாகிவிடும். வைட்டமின் பி12 குறைப்பாட்டின் பொதுவான அறிகுறிகளை இங்கு காணலாம்.
பலவீனமான உடல்:
ஒரு பெண்ணுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருப்பதன் முதல் அறிகுறியே சோர்வும் பலவீனமும் தான். அடிக்கடி சோர்வாக காணப்படுவார்கள்.
நரம்பு மண்டல பாதிப்பு:
இந்த குறைபாடு வந்த பெண்களுடைய கை, கால்களில் கூச்ச உணர்வு காணப்படும். கால்கள், கைகளில் குத்துதல் உணர்வு அல்லது அரிப்பு இருக்கும். உடலின் சமநிலை பாதிப்புக்கு உள்ளாகும். சிந்திப்பதில் சிரமம், குழப்பம், ஞாபக சக்தி குறைதல் ஆகிய பிரச்சனைகள் கூட வரலாம்.
மனநலம்:
வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்களுக்கு அடிக்கடி மனச்சோர்வு, எரிச்சல் உணர்வு, மனநிலை ஊசலாட்டம் (mood swing) ஆகிய உளவியல் பிரச்சனைகள் அறிகுறிகளாக தென்படும்.
வெளிப்படையான அறிகுறிகள்:
1). நாக்கில் வீக்கம்
2). தோல் வெளிறிய தோற்றம்
3). வயிற்றுப்போக்கு இருக்கலாம்.
4). மலச்சிக்கல்
5). செரிமான கோளாறு உண்டாக்கும் குளோசிடிஸ் போன்றவை பி12-குறைபாடு நபர்களிடமும் அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க: இந்த தவறுகளை செய்யும் தாய்மார்களுக்கு 'தாய்ப்பால்' சுரப்பு குறையும்!! எதை செய்யக் கூடாது?
விளைவுகள்:
மேற்சொன்ன அறிகுறிகளை முறையாக கவனித்து சிகிச்சை பெறாவிட்டால் கூடுதலாக உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அசைவு உணவை முற்றிலும் தவிர்த்து விட்டு சைவ உணவுகளை மட்டும் உண்ணும் பெண்களுக்கு இந்த குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது. சைவ உணவுகளில் போதுமான அளவில் இந்த வைட்டமின் காணப்படாததால் பிரச்சனை தலைதூக்குகிறது.
இரத்த சோகை பாதிப்பு:
வைட்டமின் பி12 குறைபாட்டின் பெண்களுக்கு இரத்த சோகையை ஏற்படுத்தலாம். இந்த குறைபாட்டின் காரணமாக மெகாலோபிளாஸ்டிக் அனீமியா வரக் கூடும். இது உங்களுடைய இரத்த சிவப்பணுக்களை வழக்கத்தை விட பெரியதாக மாற்றும் மோசமான நோயாகும்.
மாதவிடாய் பிரச்சனை:
இந்த வைட்டமின் குறைப்பாட்டால் மாதவிடாய் காலங்களில் அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி அதிகமான இரத்த இழப்பது இரத்த சோகைக்கான வாய்ப்பை அதிகமாக்கும்.
நரம்பியல் பிரச்சனை:
நீங்கள் வைட்டமின் பி12 குறைப்பாட்டில் கவனம் செலுத்தாவிட்டால் நிரந்தர நரம்பு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பகால அபாயங்கள்:
இந்த வைட்டமின் குறைபாடுள்ள கர்ப்பிணிகளுக்கு நரம்புக் குழாய் குறைபாடுகள் வர வாய்ப்புள்ளது. இதனால் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமில்லா சூழலில் பிரச்சனைகளுடன் குழந்தை பிறக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. வைட்டமின் பி12 குறைபாடு இதய நோயை கூட மோசமாக்கும்.
கர்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்கள்:
ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது தொடங்கி அவள் பாலூட்டும் காலம் வரையில் அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக அந்த பெண்ணுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து கொடுக்கப்பட வேண்டும். அதனால் தான் அக்காலக்கட்டங்களில் உணவு பழக்கம் மாறுபடுகிறது. இது குழந்தையின் வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்று. தாய்க்கும் குழந்தைக்கும் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்ய வைட்டமின் பி 12 அவசியமாகிறது.
வைட்டமின் பி 12 குறைபாடு நீங்க!
உணவு பழக்கம் மூலமாக வைட்டமின் பி12 குறைபாட்டை ஓரளவு சரி செய்ய முடியும். இறைச்சி, பால் உணவுகள், முட்டை, தானியங்களை உணவில் அடிக்கடி சேர்க்கவேண்டும். கானாங்கெளுத்தி, மத்தி, சால்மன் மீன்களை உணவில் சேர்க்கலாம். உணவுகளில் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியாதவர்கள், கர்ப்பிணிகள், வைட்டமின் பி12 சத்துக்களை உறிஞ்சுதலில் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மாத்திரைகள் அல்லது மருந்துகள் எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: பெண்கள் அதிகளவில் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா?