
ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என நாம் கேள்விப்பட்டிருப்போம். சரியான முறையில் தண்ணீர் குடிக்காவிட்டால் உடலுக்கும் பல பிரச்சனைகளும் வரும். தினமும் தேவையான அளவில் தண்ணீர் அருந்துவது உடலுறுப்புகளை நன்கு இயங்க வைக்கும்.
ஒருவர் சுறுசுறுப்பாக இருக்க அவர் தாகம் தணிப்பது அவசியம். அதுவும் கொடூரமான வெயில் காலங்களில் ஒருவர் தண்ணீர் அருந்தாமல் இருந்தால் அவர் உடல் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும். இப்படி தண்ணீர் ஒருவருக்கு இன்றியமையாததாக உள்ளது. ஆனாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் குடிப்பது நமது உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
ஒரு நாளுக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும், அதிகமான தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
நம் உடல் நீரேற்றமாக இருப்பது நல்லது தான். ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. உங்கள் உடலுக்கு தேவையானதை விடவும் இரண்டு தம்ளர் தண்ணீரை அதிகமாக குடித்தாலும் அடிக்கடி சிறுநீர் வரலாம். அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஒருவர் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் 'ஹைபோநெட்ரீமியா' என்ற நிலை ஏற்படும். இந்த நோய் இரத்த சோடியம் அளவுகளில் ஏற்படும் குறைவான நிலையாகும்.
சோடியம் என்பது முக்கியமான எலக்ட்ரோலைட். நம்முடைய உடலின் தண்ணீர் பரிமாறும் அளவுகளை கட்டுப்படுத்துவதாக சோடியம் உள்ளது. உடல் முழுவதும் தண்ணீர் எங்கு அனுப்பப்பட வேண்டும், சிறுநீர்ப்பைக்கு எவ்வளவு அனுப்பப்படுகிறது என கட்டுப்படுத்துவது தான் சோடியத்தின் வேலையாகும்.
இதையும் படிங்க: திருமண மண்டபத்துல சாப்பிடலாம்... ஆனா வாய் மட்டும் கொப்பளிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
தண்ணீர் குடிப்பது நல்லதாக இருந்தாலும், அதிகமான வியர்வை வெளியேறும் நேரங்களில் சோடியம், பொட்டாசியம் ஆகிய எலக்ட்ரோலைட்டுகள் கலந்த பானங்களை அருந்துவது தான் நல்லது. அதனால் தான் உடற்பயிற்சியின் போதும், விளையாட்டு வீரர்களுக்கும் எலக்ட்ரோலைட் பானங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. எலக்ட்ரோலைட் பானங்கள் சமநிலையை பராமரிக்க உதவும். சிலர் எலக்ட்ரோலைட்டுகளை எடுப்பதில்லை. அதற்கு பதிலாக தண்ணீரை அருந்துகிறார்கள்.
நம் உடலுக்கு தேவையான தண்ணீர் தேவையை இயற்கையான வழியில் கூழ், ஏதேனும் பழச்சாறு, பழைய சோற்றில் நீச்ச தண்ணீர் போன்றவ மூலம் எடுத்து கொள்ளலாம். எலக்ட்ரோலைட்கள் மூலம் பெறலாம். ஆனால் வெறும் நீரை மட்டும் அளவுக்கு அதிகமாக குடிப்பது குழப்பம், சோம்பல், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளை கொடுக்கும்.
ஒரளவுக்கு மேல் தண்ணீரை குடிக்கக் கூடாது. ஏனென்றால் சிறுநீரகங்கள் கூடுதல் தண்ணீரை அகற்ற முடியாவிட்டால் நீர் தேக்கத்தால் வீக்கம் ஏற்படலாம். நீங்கள் அதிகமாக தண்ணீர் குடித்தால் அதனை 4 அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.
சிறுநீர் கழித்தல்:
உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறினால் நீங்கள் அதிகப்படியான தண்ணீர் குடித்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம். அந்த சிறுநீர் மிகவும் தெளிவாக இருக்கும். மஞ்சள் கலந்த நிறங்கள் ஏதும் காணப்படாது. சிறுநீரின் நிறமானது அடர் மஞ்சள் முதல் வெளிர் மஞ்சள் வரை இருக்கும். உங்கள் சிறுநீர் அடிக்கடி தெளிவாக எந்த நிறமும் இன்றி தண்ணீர் போலவே இருந்தால் அதிக தண்ணீர் குடிக்கிறீர்கள் என பொருள். அளவாக அருந்துங்கள். சில உணவுப் பொருட்களும் சிறுநீர் நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம்.
காபி& மது பழக்கம்;
காஃபின் கலந்த காபியை அடிக்கடி குடிப்பது, மது அருந்துவது கூட அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும். சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 10 முறை வரை சிறுநீர் கழிப்பது ஓரளவு பரவாயில்லை. ஆனால் அதற்கு மேல் சிறுநீர் வெளியேறினால் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். தண்ணீர் அருந்துவதில் கவனம் செலுத்துங்கள்.
வீக்கம் அல்லது குமட்டல்:
சிறுநீரகங்கள் ஒரு நேரத்தில் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தான் வெளியேற்ற முடியும். இதற்கென வரம்புகள் உள்ளன. ஒரு மணி நேரத்தில் அதிகபட்சம் 800 முதல் 1,000 மில்லிலிட்டர் என்பதே சிறுநீரகத்தின் லிமிட். அதற்கு மேல் என்றால் உடலில் நீர் தேங்குகிவிடும். அதிகப்படியான நீரை உடலால் வெளியேற்ற முடியாத நேரம் உடலில் உள்ள செல்கள் வீங்க தொடங்குகின்றன.
இப்படி ஆகும்போது நீர் அருந்துவதை மெதுவாக்கும் வரை வீக்கத்தை உணரலாம். வயிற்றில் அதிகப்படியான தண்ணீர் நிரம்பினால் கொஞ்சம் குமட்டல் ஏற்படும். அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் வலி வந்தால் தண்ணீர் குடிக்கும் அளவை சீராக்க வேண்டும்.
தலைவலி:
உடலில் வெளியேறாமல் நீர் தேங்கும்போது சோடியம் அளவு குறைந்து செல்கள் வீங்க தொடங்கும். மூளையானது மண்டை ஓட்டினால் மூடப்பட்டிருப்பதால், செல்கள் விரிவடைவதற்கு என இடம் இருக்காது. இது அழுத்தத்தை உருவாக்கும். தலைவலி, மனநிலை மாற்றம் கூட ஏற்படுகிறது. இப்படி ஏற்படும்போது தண்ணீர் குடிக்கும் அளவுகளை மாற்றினால் போதும்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
எல்லோருடைய உடலுக்கும் தண்ணீர் தேவை ஒரே அளவாக இருக்காது. அவரவர் எடையை பொறுத்து அவர்கள் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு மாறுபடும். ஒரு நாளைக்கு ஆண்கள் சுமார் 3.7 லிட்டர் தண்ணீரையும், பெண்கள் சுமார் 2.7 லிட்டர் தண்ணீரையும் அருந்தினால் போதும். வானிலை, உணவில் உள்ள நீர், அன்றாட செயல்பாடுகள், மற்ற பானங்கள் அடிப்படையில் தண்ணீர் குடிக்கும் அளவு நாளுக்கு நாள் மாறுபடும்.
உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடும்போது, இரவு உணவுகளாக துரித உணவு, சிப்ஸ் போன்றவை எடுத்துக் கொள்ளும்போது அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 200 மில்லிலிட்டர் தண்ணீர் அருந்துவது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இது உங்களுடைய அன்றாட செயல்பாடுகளுக்கு ஏற்றபடி இருந்தால் நல்லது.
இதையும் படிங்க: பல் தேய்க்கும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் குடித்தால் நினைத்து பார்க்க முடியாத பலன்கள்!!