மது அருந்துதல் நாளடைவில் உங்கள் உடலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதயத்திலிருந்து வயிறு வரை அதன் பாதிப்புகள் இருக்கலாம். இந்த பிரச்சனைகளுக்கு நீண்ட காலத்திற்கு சிகிச்சையளிப்பது கடினம். ஆகவே நீங்கள் மது மீதான வெறியை கட்டுப்படுத்துவது அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவது எவ்வளவு முக்கியமானது என்பதை இங்கு காணலாம்.
அதிகமாக குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் உணவை செரிக்க முடியாமல் உங்கள் குடல் திணறும். ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்களை திறம்பட உறிஞ்சுவதை கூட குடலால் செய்ய முடியாது. வாயு, வீக்கம், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் ஆகியவை வரும். வயிற்றில் எரிச்சல், வயிற்றில் அதிகமான அமில சுரப்பு வரும். வயிற்றுக்குள் இரத்தப்போக்கு கூட ஏற்படலாம்.
மது அருந்துவது இதயம் தொடர்பான பிரச்சனைகளுடன் தொடர்புடையது. இதில் உயர் இரத்த அழுத்தமும் அடங்கும். அதிகப்படியான குடிப்பழக்கம் இரத்த நாளங்களில் உள்ள தசைகளை பாதிக்கும். இதனால் அது குறுகலாக மாறும். ஒரே நேரத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பானங்களை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மீண்டும் மீண்டும் மது அருந்துவது, நீண்ட கால உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
நம் மூளையில் உள்ள இரசாயனங்களை ஆல்கஹால் மந்தமாக்குகிறது. நிபுணர்கள் கருத்துப்படி குடிவெறி உடையவர்களுக்கு கவனம், மனநிலை, அனிச்சையான செயல்பாடுகள் பாதிப்பு ஏற்படும். மது மூளையின் தகவல் தொடர்பு பாதைகளில் குறுக்கிடுகிறது. தொடர்சியாக மது அருந்துதல் மூளையின் தோற்றம், வேலை செய்யும் விதத்தை பாதிக்கலாம்.