
நம் உடல் எடைக்கு ஏற்றபடி தினசரி புரதச்சத்துக்கான உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். உதாரணமாக பெரியவராக இருந்தால் 2000 கலோரி உணவில் 50கி புரதம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கட்டாயம் புரதம் தேவை. இதன் காரணமாக தான் அவர்களுடைய உணவு பழக்கத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அன்றாட புரத தேவைகளை உணவு மூலம் மட்டுமே எடுப்பது என்பது கொஞ்சம் கடினமான காரியமும் கூட. பால், முட்டை, டோஃபு, பட்டாணி, சிக்கன் ஆகியவற்றிலிருந்து புரதத்தைப் பெறலாம். சைவ உணவுகளை விட அசைவத்தில் அதிக சத்துகள் உள்ளன. தினமும் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதும் கடினம். இதற்கு தீர்வாக புரோட்டீன் பவுடர் உள்ளது.
தினமும் அசைவம் சமைக்கவோ அல்லது பருப்புகளை உண்ணவோ முடியாதவர்களுக்கு புரோட்டீன் பவுடர் ஒரு வரப்பிரசாதம். செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட புரத சப்ளிமெண்ட் தான் புரோட்டீன் பவுடர். இதனை எடுப்பவர்களுக்கு உடலின் அன்றாடம் தேவையான புரதம் கிடைக்கும். தசைகள் வலுவாகும்; புரதக் குறைபாடு வராது. எலும்புகள் உறுதியாகும். தசைகளும் வலுவாகும்.
அன்றாடம் ஒரு ஸ்கூப் அளவில் புரோட்டீன் பவுடரை உங்கள் உணவில் (பால் உள்ளிட்ட பானங்கள்) எடுப்பது புரதச்சத்துக்களை ஈடு செய்வதில் பலனளிக்கும். ஒரு ஸ்கூப் என்பது 25 கிராம் வரை இருக்கும். இன்றைய காலகட்டத்தில் பலர் புரோட்டீன் பவுடர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது உடலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என பலரும் அறிவதில்லை. அதை இங்கு காணலாம்.
இதையும் படிங்க: புரோட்டீன் பவுடர் வாங்குறவங்க கவனிக்க வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள்!!
புரோட்டீன் பவுடர் வகைகள்:
புரோட்டீன் பவுடரில் மோர் புரதம், கேசின் புரதம், அரிசி புரதம், சோயா பீன்ஸ் புரதம், பட்டானி புரதம், சணல் புரதம் போன்ற சைவ வகைகள் உள்ளன. முட்டை புரதம் உள்ளிட்ட விலங்கு வகையை சேர்ந்த அசைவ புரதங்களும் உள்ளன.
இதையும் படிங்க: இனி ஹார்லிக்ஸ், பூஸ்ட்க்கு நோ சொல்லுங்க.. குறைந்த செலவில் வீட்டிலேயே தயாரிக்கலாம் புரோட்டின் பவுடர்!!
தினமும் புரோட்டீன் பவுடர் உண்ணலாமா?
நீங்கள் ஏன் புரோட்டீன் பவுடர் எடுக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பதை பொறுத்து அதன் தேவை வேறுபடும். தசையின் வளர்ச்சி மேம்படுத்த வேண்டும் என்றால் புரோட்டீன் பவுடர் நிச்சயம் உதவும். அதற்கு கேசின் புரோட்டீன் பவுடர், விலங்குகளை அடிப்படையாக கொண்டு தயார் செய்யப்படும் புரோட்டீன் பவுடர் ஏற்றதாக இருக்கும். எடை குறைக்க புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்டால் குறைந்த கலோரிகள் கொண்ட, குறைந்த கார்போ ஹைட்ரேட் காணப்படும் புரோட்டீன் பவுடரை தேர்வு செய்ய வேண்டும்.
கடந்தாண்டு செய்த ஒரு மதிப்பாய்வின் முடிவுகளில் மோர் புரோட்டீன் பவுடரை உண்பவர்களுக்கு சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் குறைவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது அளவாக உண்பதால் எடையையும் அதிகரிக்காது. 2022இல் வெளியிடப்பட்ட ஆய்வுகளும் புரோட்டீன் பவுடர் நேர்மறையான விளைவுகளை உண்டாக்குவதாக வெளிப்படுத்தின. எடையை குறைப்பதில் இது பங்காற்றுகிறது. இது பல காரணிகளின் அடிப்படையான விஷயம். அதாவது எடையை குறைப்பதில் புரோட்டீன் பவுடர் மட்டும் பலன் தருவதில்லை. புரோட்டீன் பவுடர் உங்கள் தசையை மேம்படுத்தும். இதற்கு புரதச்சத்து தேவை.
தினமும் புரோட்டீன் பவுடர் எடுப்பது தனிப்பட்ட நபரின் விருப்பம் சார்ந்தது. இரத்த அழுத்தம் உங்களுக்கு நார்மலாக இருந்தால் புரோட்டீன் பவுடர் எடுப்பது பிரச்சனையே அல்ல. ஆனால் ஏற்கனவே ரத்த அழுத்தம், இதய கோளாறு, சர்க்கரை நோய் இருந்தால் உங்களுடைய மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால் அமெரிக்காவில் வயது வந்தவர்களில் 100இல் 50 பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. அவர்கள் புரோட்டீன் பவுடர் உண்ணும்போது ரத்த அழுத்தம் உயர்கிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு ஆகிய நோய்கள் வர வழிவகுக்கிறது.
2020ஆம் ஆண்டு வெளியான ஆய்வுகளில், சில புரோட்டீன் பவுடர்களில் ஆர்சனிக், காட்மியம், பாதரசம், ஈயம் போன்ற தனிமங்கள் இருக்கலாம் என கூறப்பட்டது. இதன் நீண்டகால பயன்பாட்டால் உங்களுடைய சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு கோளாறுகள், எலும்புகள் பலவீனம், நரம்பியல் செயலிழப்பு மோசமாக பாதிக்கலாம்.
புரோட்டீன் பவுடர் வாங்கும்போது என்ன கவனிக்க வேண்டும்?
புரோட்டீன் பவுடர் வாங்கும்போது மூன்றாம் தரப்பு வரை சோதனை செய்த தரமான புரோட்டீன் பவுடரை தெரிவு செய்து வாங்கவேண்டும். FDAஇன் அடிப்படையில் அதன் உற்பத்தி, பிராண்ட், தரம், தூய்மை போன்றவை குறித்து பார்ப்பது அவசியம். புரோட்டீன் பவுடரில் அதனை தயாரிக்க பயன்படுத்தியுள்ள பொருள்களின் பட்டியலை பாருங்கள். அதில் உள்ள பொருட்கள் உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றதா? என உறுதி செய்யுங்கள். சில புரோட்டீன் பவுடரில் அதிக செயற்கை சர்க்கரைகள், கலப்படங்கள், ஒவ்வாமைக்கான காரணிகள், மூலிகைகள் இருக்கலாம். அதை பார்த்து வாங்க வேண்டும்.
புரோட்டீன் பவுடர் எப்படி பயன்படுத்துவது?
பால், பாதாம் பால், தண்ணீர், காபி போன்றவற்றில் தேவையான அளவு புரோட்டீன் பவுடரைச் சேர்த்து சாப்பிடலாம். காலையில் அருந்தினால் அன்றைய நாளின் புரதத் தேவையை நிறைவு செய்ய முடியும். சூப் வகைகளில் கலந்து சாப்பிடாலும் நல்லது தான். காலை உணவாக உண்ணப்படும் தோசை அல்லது பான்கேக், சாலட் உள்ளிட்டவற்றில் 1 ஸ்கூப் புரோட்டீன் பவுடர் சேர்ப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் ஒவ்வொருவரின் உணவுப் பழக்கமும், உடல் அமைப்பும் வெவ்வேறானவை. மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள்.