Kaanum pongal 2023: காணும் பொங்கலில் போக வேண்டிய கோயில்கள்.. சுற்றுலா தலங்கள் முழுவிவரம்!

First Published Jan 12, 2023, 2:53 PM IST

Kaanum pongal 2023: காணும் பொங்கல் அன்று செல்லக்கூடிய கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களின் விவரங்களை இத்தொகுப்பில் காணலாம். 

காணும் பொங்கலில் வீட்டில் உள்ள எல்லோரும் இணைந்து வெளியில் சென்றால் தான் பொங்கல் கொண்டாட்டம் நிறைவுறும். வீட்டில் சமைத்து அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சிலர் சென்று வருவர். பொங்கல் அன்று சமைத்த சாதத்தை முன்னோர் நன்மைக்காகவும், உடன்பிறந்தோர் நலனுக்காகவும் காகம், குருவி போன்ற பறவைகளுக்கு அளிக்க வேண்டும் என்ற ஐதீகமும் உண்டு. திருமணம் கைகூட கன்னி பெண்கள் விரதம் இருப்பதும் காணும் பொங்கலில் வழக்கம். ஆனாலும், கோயிலுக்கு செல்வதும், சுற்றுலா செல்வதும் மனதிற்கு இதம் அளிக்கும் என்பதால் சில இடங்களை இங்கு காணலாம். 

கோயில்கள்! 

காணும் பொங்கலில் சுசீந்தரம் தானுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம். இது நாகர்கோவிலில் இருந்து குமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூன்று தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள். மூவருக்கும் தனித்தனி சந்நதிகள் அமைந்துள்ளன. காஞ்சியில் உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் பகவத் பாதான் ஆலயத்தை காணும் பொங்கலில் சென்று தரிசனம் செய்யலாம். 

சென்னை 

காணும் பொங்கல் அன்று சென்னை மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சென்று காணலாம். இந்த இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் காணும் பொங்கல் அன்று கூடுவர். மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல், கலங்கரை விளக்கம் ஆகியவை மனதிற்கு நிறைவையும் மகிழ்ச்சியை கொடுக்கும். 

மதுரை

பொங்கலில் சென்று காண கூடிய இடங்களில் மதுரை கோவில்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பொங்கல் பண்டிகை மதுரையில் விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், கூடல் அழகர் கோவில் என பாரம்பரியமான பல கோயில்கள் அமைந்துள்ளன. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளையும் கண்டு ரசிக்கலாம். 

இதையும் படிங்க; Facts about Jallikattu: சிந்து சமவெளி நாகரிகத்தை முந்திய ஜல்லிக்கட்டு! வியக்க வைக்கும் சுவாரசிய தகவல்கள்

திருநெல்வேலி 

திருநெல்வேலியில் உள்ள களக்காடு தலையணையில், காணும் பொங்கல் அன்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தலையணையில் ஏராளமான மூலிகை செடிகள் காணப்படுகின்றன. அவற்றை தழுவி வரும் தண்ணீரில் குளிப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என கூறப்படுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான சிறுவர் பூங்கா, மீன் கண்காட்சியகம், அருங்காட்சியகம் ஆகியவையும் அமைந்துள்ளன. 

இதையும் படிங்க; Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!

கோயம்புத்தூர் 

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை, மருதமலை, பரளிக்காடு, கோவை குற்றாலம், ஆனைகட்டி ஆகிய இடங்களை கோயம்புத்தூரில் சென்று ரசிக்கலாம். கோயம்புத்தூர் மாவட்டத்திலும், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகள் பொங்கலை முன்னிட்டு நடைபெறும். 

இதையும் படிங்க; Pongal wishes 2023: பொங்கல் போலவே இன்பம் பொங்கட்டும்... உங்களுக்கான பொங்கல், போகி பண்டிகை வாழ்த்துகள் இதோ...

click me!