Jallikattu Places 2023: உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்!

First Published Jan 12, 2023, 12:50 PM IST

தமிழ் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெறும் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எங்கெங்கெல்லாம் நடைபெறுகிறது, அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்று விவரிக்கும் செய்தித் தொகுப்பு இது.

மதுரையின் அடையாளம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் தமிழரின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. பொங்கரல் திருநாளை முன்னிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டு எங்கே நடக்கும்?

மதுரையில் முதலில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் அவனியாபுரம். அதற்குப் பின் பாலமேட்டு ஜல்லிக்கட்டு நடக்கும். அடுத்து நடைபெறுவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. மதுரையில் இந்த மூன்று ஜல்லிக்கட்டுகளிலுமே பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

ஆண்டுதோறும் முதலில் ஜல்லிக்கட்டை நடத்துவது அவனியாபுரம்தான். அந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க பெரும் பெயர் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு காளைகளுடன் திருமங்கலம், சோளங்குருணி, பெருங்குடி, வாடிப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்தும் சுமார் 500 காளைகள் வருகின்றன.

பாலமேடு ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டும் மாடுபிடி வீரர்களையும் பார்வையாளர்களையும் கவரும் முக்கியமான ஜல்லிக்கட்டு போட்டி ஆகும். இதில் பங்கேற்க மதுரை மட்டுமின்றி, திருச்சி, புதுக்கோட்டை, தேனி ஆகிய அண்டை மாவட்ட ஊர்களில் உள்ள காளைகளும் வருவது வழக்கம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்றவுடன் நினைவுக்கு வருவது இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிதான். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கி வெற்றி பெற வேண்டும் என்பது மாடுபிடி வீரர்கள் பலருக்கு்ம விருப்பமானதாக இருக்கும். மாடுபிடி வீரர்களை அசரவைக்கும் காளைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இதனால்தான் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு உலக அளவில் புகழ் சேர்ந்திருக்கிறது. இதில் வெற்றி பெறுவது தனி கௌரவமாகப் பார்க்கப்படுகிறது. அதுமட்டுல்ல பரிசு மழையும் அதிகமாக இருக்கும்.

மதுரையில் மட்டுமல்ல...

மதுரையைத் தவிர தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. சிவகங்கையில் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு களைகட்டும். புதுக்கோட்டையை எடுத்துக்கொண்டால், வேந்தன்பட்டி, திருவப்பூர், நார்த்தாமலை ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரபலமானவை. சேலத்தில் தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு, திருச்சியில் சூரியூர் ஜல்லிக்கட்டு, தேனீயில் பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு. இவை மட்டுமல்ல, தென் மாவட்டங்களிலும் கூட ஜல்லிக்கட்டு போட்டு நடத்தப்படுகிறது.

click me!