Plastic Water Bottle Side Effects: நாம் அனைவரும் ஃப்ரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வைத்து குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் இதன் பின்னால் இருக்கும் ஆபத்துகள் குறித்து தெரியுமா? அதுபற்றி இங்கு பார்க்கலாம் வாருங்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த சீசனாக இருந்தாலும் சரி பகல் வேளையில் வெப்பம் அதிகரித்தே காணப்படுகிறது. இதன் காரணமாக பலரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி, அதை ஃபிரிட்ஜுக்குள் வைத்து பருகுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்படி செய்வதால் பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஃபிரிட்ஜில் வைப்பதற்கு சந்தையில் கிடைக்கும் வண்ணமயமான பிளாஸ்டிக் பாட்டிலையே பலரும் விரும்புகின்றனர் அல்லது குளிர்பானங்கள் அருந்திய பிறகு அந்த காலி பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி ஃபிரிட்ஜில் வைக்கின்றனர். இது தவறான முறையாகும். பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் பிஸ்பனால் ஏ மற்றும் பித்தலேட்டுகள் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் உடலுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கின்றன. குளிர்சாதன பெட்டியில் குறைந்த வெப்ப நிலையில் இருக்கும் பொழுது இந்த ரசாயனங்கள் தண்ணீரில் மெதுவாக கலைகின்றன. பழைய பிளாஸ்டிக் பொருள்களை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு இந்த அபாயம் அதிகரிக்கிறது.
பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் மீண்டும் கழுவி பயன்படுத்தும் பொழுது அதன் உட்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் பிரியத் தொடங்கும். நாம் குடிக்கும் தண்ணீரோடு சேர்ந்து இந்த துகள்களும் நம் உடலுக்குள் சென்று ரத்த ஓட்டத்திலும், கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் படிந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் பிஸ்பெனால் மற்றும் பித்தலேட்டுகள் போன்ற நச்சுப் வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று ஹார்மோன் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும். இதனால் தைராய்டு கோளாறுகள், ஹார்மோன் சமநிலையின்மை, குழந்தையின்மை, உடல்பருமன், பிசிஓடி போன்ற தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பிளாஸ்டிக் ஒரு நுண் துளைகள் கொண்ட ஒரு பொருளாகும். பாட்டில்களை கழுவும் போது அதில் ஏற்படும் சிறிய கீறல்களில் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் எளிதாக குடியேறி விடும். ஃபிரிட்ஜின் குளிர்ந்த வெப்ப நிலையில் சிலவகையான பாக்டீரியாக்கள் அழியாமல் பெருகத் தொடங்கும். இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, வாந்தி, செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம். தொடர்ந்து பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரில் அருந்துவது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நச்சுக்கள் உடலில் தேங்குவதால் உடல் எளிதில் நோய் தொற்றுகளுக்கு ஆளாகிறது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் படி, பிளாஸ்டிக் பாட்டிலை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு மில்லியன் கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உடலில் நுழைந்து புற்றுநோயை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆபத்துகளில் இருந்து தப்பிக்க பிரிட்ஜில் தண்ணீர் வைக்க பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக பின்வரும் பாதுகாப்பான மாற்றுக்களை பயன்படுத்தலாம். கண்ணாடி பாட்டில்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை. இவை எந்த வேதிப்பொருட்களையும் தண்ணீரில் கலக்காது. தண்ணீரின் சுவையும் மாறாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைக்க ஏதுவான தடிமனான கண்ணாடி பாட்டில்களை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
செம்பு அல்லது பித்தளை பாட்டில்களில் தண்ணீர் வைப்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரும். ஆனால் இதை ஃபிரிட்ஜில் வைக்காமல் சாதாரண அறை வெப்பநிலையில் வைத்து குடிப்பது நல்லது. நீண்ட காலம் உழைக்கக்கூடிய, நச்சுத்தன்மையற்ற எவர்சில்வர் பாட்டில்களை பயன்படுத்தலாம். இதை சுத்தம் செய்வதும் மிக எளிது. ஃபிரிட்ஜ் தண்ணீரே வேண்டாம் என்று நினைப்பவர்கள் இயற்கையான குளிர்ச்சிக்கு மண் பானைகள் அல்லது மண்ணால் செய்யப்பட்ட பாட்டில்களை பயன்படுத்தலாம். இது உடலுக்கு குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரும்.
முக்கிய குறிப்பு: கடைகளில் விற்கப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பாட்டில்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் கழுவி ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.