இந்தியாவில் 140 பணக்காரர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உலக பணக்காரர்கள் பட்டியலை குறித்து பேசினால், அதில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் பெயர் அதில் தவறாமல் இடம்பெறும். அவருக்கு ஒன்றல்ல இரண்டல்ல.. பல 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளன.
இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய கண்டத்திலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது தான். அவருக்கு சொந்தமான மும்பையில் உள்ள அன்டீலியா வீடு கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையது. அம்பானியின் அன்டீலியா வீடு 27 அடுக்குகள் கொண்டது. இங்கு முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் உள்ள 27 தளங்களில், 6 தளங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக ஜே.கே ஹவுஸ் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கவுதம் சிங்கானியாவின் ஜே.கே ஹவுஸ் விலை உயர்ந்த வீடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பையில் அமைந்துள்ள இந்த 30 மாடி கட்டிடத்தில் ரேமண்ட் குழுமத்தின் உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதன் விலை 6 ஆயிரம் கோடி ரூபாய். இவர்களது வீட்டில் நீச்சல் குளம், ஸ்பா, ஹெலிபேட் போன்ற எல்லா வசதிகளும் உள்ளன.