கல்லூரி காலத்தில் ராமானுஜன் தன் கணித தாகத்தை தீர்த்து கொண்டார். அப்போது ஏழ்மையின் காரணமாக காகிதங்கள் வாங்க அவருக்கு பணமில்லை. அதனால் சிலேட்டில் தேற்றங்களையும், கணக்குகளையும் எழுதி பார்த்து கொள்வார். முடிவுகள் கிடைத்ததும் அதை நோட்டில் குறித்து கொள்வாராம். என்னதான் கணக்கில் புலியாக இருந்தாலும், அவருக்கு ஆங்கிலம் கொஞ்சம் தகராறு செய்துள்ளது. கும்பகோணம் அரசு கல்லூரியில் 1903 ஆம் ஆண்டு படித்தார். அப்போது 3 முறை ஆங்கில பாடத்தில் மட்டும் மதிப்பெண்கள் கைவிடவே, பட்டம் வாங்க முடியாமல் திணறியுள்ளார். பின்னர் பச்சையப்பா கல்லூரிக்கு மாறிவிட்டார். இங்கு தான் ஒரு திருப்புமுனை கிடைத்தது. இங்கு சிங்கார முதலியாரை சந்தித்த பின்னர், ஏராளமான கணித சூத்திரங்கள், நூல்களை கற்று தேர்ந்தார். இவருடைய கணக்குகள் பிரபலமாகின. கிண்டி பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் அறிமுகம் கிடைத்தது. அப்போது தான் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு கடிதம் எழுத ராமானுஜத்திற்கு எல்லோரும் பரிந்துரைத்தார்கள்.