
குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதை எல்லா பெற்றோரும் விரும்புவார்கள். பள்ளிவிட்டு வீட்டிற்கு வரும் குழந்தைகள் வீட்டு பாடங்களை செய்வது, படிப்பது போன்றவற்றை செய்வது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் செல்போனையே தேடுகிறார்கள். வீடியோ கேம் விளையாடுவது, வீடியோக்கள் பார்ப்பது என தங்கள் நேரத்தை செல்போனுடன் செலவிடுவதை விரும்புகின்றனர்.
குழந்தைகளுடைய நேரத்தை படிப்பில் அதிகமாகவும், மற்ற பொழுதுபோக்கு விஷயங்களில் குறைவாகவும் வைத்திருக்கவே பெற்றோர் விரும்புவார்கள். அதனால் தான் பள்ளிக்கு பின் குழந்தைகளை டியூஷன் அனுப்புகிறார்கள். ஆனாலும் வீட்டில் குழந்தைகள் கொஞ்ச நேரம் கூட சும்மா இருப்பதில்லை. எந்நேரமும் போனை எடுத்து அதில் கவனம் செலுத்துகிறார்கள். இந்தப் பதிவில் குழந்தைகளை எப்படி செல்போன் இல்லாமல் மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவர்களை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது என்பது குறித்து காணலாம்.
செல்போன் பித்து பிடித்த குழந்தைகள் அதிலிருந்து மீள்வது பெற்றோர் கையில்தான் இருக்கிறது. பெற்றோர் அதிகம் செல்போனை பயன்படுத்திக் கொண்டு குழந்தைகளை கண்டித்தால் அவர்கள் திருந்தமாட்டார்கள். குழந்தைகளுக்கு பெற்றோரே முன்மாதிரியாக இருக்க வேண்டும். உதாரணமாக குழந்தைகளை படிக்க சொல்லும்போது பெற்றோரும் ஏதேனும் புத்தகம் படிக்கலாம். இது அவர்களை படிப்பை நோக்கி உந்தித் தள்ளும்.
குழந்தைகளுடன் அவர்களுடைய எதிர்காலத்தை குறித்து பெற்றோர் உரையாட வேண்டும். வெறும் செல்போனை மட்டும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் அவர்களின் நிலை என்னவாக இருக்கும்? என்பதை குறித்து அன்பாகவும், கனிவுடனும் சொல்ல வேண்டும். செல்போனை எப்படி பயனுள்ள முறையில் பயன்படுத்துவது, அதற்கென குறிப்பிட நேரத்தை ஒதுக்குவது குறித்து குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே விழிப்புணர்வு வழங்க வேண்டும். அவர்கள் அழும்போதும், அடம் பிடிக்கும் போதும் செல்போன் கொடுத்து பழக்கவே கூடாது.
குழந்தைகள் தங்களுடைய வீட்டு பாடங்களை சரியாக செய்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு அவ்வப்போது சிறு சிறு பரிசுகளை வழங்கலாம். பள்ளி விட்டு வந்ததும் செல்போனை எடுக்காமல் மற்ற விஷயங்களில் அவர்கள் ஈடுபடும் போது அதை பாராட்டலாம். இது அவர்களை உற்சாகப்படுத்தும்.
குழந்தைகளுடன் இரவில் விளையாடுவதை பெற்றோர் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக்குள் உறவு மேம்படும். இரவில் கேரம் போர்டு மாதிரியான கேம்கள், பிளாஷ் கார்டுகள் வைத்து விளையாடுவது போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். இதனால் அவர்கள் செல்போன் பயன்படுத்துவதை விடுத்து உங்களுடன் நேரத்தை செலவிடுவார்கள். எல்லா குழந்தைகளும் பெற்றோருடன் நேரம் செலவிடுவதைதான் அதிகம் விரும்புவார்கள்.
குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர் ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபடலாம். மாலை நேரங்களில் குழந்தைகளை விளையாட அனுப்புவது, அவர்களுடன் சைக்கிளிங் செல்வது போன்றவை அவர்களை உடல்ரீதியாக வலுப்படுத்தும். அவர்கள் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருப்பதால் இரவு சீக்கிரமே தூங்கிவிடுவார்கள்.
குழந்தைகள் செல்போன் எடுப்பதற்கென்று நேரத்தை நெறிப்படுத்துவது பெற்றோரின் கடமையாகும். வீட்டுப் பாடங்களை செய்து முடித்தால் மட்டுமே செல்போன் பார்க்க அனுமதிக்கப்படும் என பெற்றோர் கண்டிப்பாகக் கூறி விட வேண்டும். அவர்கள் வீட்டு பாடங்களை முடிக்காவிட்டால் செல்போனை எக்காரணம் கொண்டு கொடுக்கக் கூடாது. இது அவர்களை விரும்பியோ விரும்பாமலோ படிப்பை நோக்கி கவனத்தை செலுத்த உத்வேகப்படுத்தும்.
குழந்தைகள் தங்கள் நேரத்தை பயனுள்ள வழியில் செலவழிக்க பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும். கைவினைப் பொருள்கள் செய்வது குறித்து அவர்களுக்கு அறிவை வளர்க்கலாம். வரைதல், எழுதுதல், விளையாட்டு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் நேரத்தை செலவிடும்போது அவர்கள் செல்போன் பயன்படுத்துவதில் இருந்து விலக்கி வைக்க முடியும்.