அறுவடைத் திருநாளான பொங்கலில் சூரிய பகவானை வழிபடுவது பாரம்பரியமாக பின்பற்றப்படுவது போலவே, இன்றளவும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் விளையாடப்பட்டு வருகின்றன. வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு உச்ச நீதிமன்றத்தின் தடையால் சில ஆண்டு நடைபெறாமல் இருந்தது. அதன் பிறகு மேற்கொண்ட பல போராட்டத்தின் விளைவாக தற்போது நடந்துவருகிறது.
முந்தைய காலங்களில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதியிலும், சில கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த முறை சென்னையிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் மற்றும் சில சுவாரசியமான தகவல்களை இங்கு காணலாம்.
வரலாற்று சான்றுகள்!
ஏதோ சில நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் வீரவிளையாட்டு அல்ல ஜல்லிக்கட்டு. கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு இருந்ததற்கான சான்று நீலகிரியில் உள்ள கரிக்கியூர் கிராமத்தில் உள்ளது. அங்குள்ள பழமையான கல்லில் மாடுபிடி வீரர்கள் காளைகளை துரத்தும் காட்சி பதிவாகியுள்ளது. இதே போலவே காட்சி பொறித்த கல், மதுரை அருகேயுள்ள கல்லுட்டு மேட்டுப்பட்டியில் உள்ளதாம். இது 1500 ஆண்டுகள் பழமையானது.
சிந்துவெளி நாகரிகத்திற்கு முன்பே ஜல்லிக்கட்டு இருந்துள்ளதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. சிந்துவெளியில் காளை முத்திரை பொறித்த சின்னங்கள் கிடைப்பது அதற்கு சான்று என்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன்.
இதையும் படிங்க; திருமணம் கைகூட கன்னி பொங்கல்! காணும் பொங்கலும் அதன் வழிபாடுகளும் முழு விளக்கம்!
ஜல்லிக்கட்டு பெயர் வந்த காரணம்!
மைதானத்தில் காளைகளை ஓடவிட்டு அடக்குவதே ஜல்லிக்கட்டு ஆகும். இந்த போட்டியின் போது மாட்டு கொம்புகளில் சல்லிக் காசு என சொல்லப்படும் நாணயங்களை துணியில் பொட்டலமாக கட்டும் வழக்கம் இருந்தது. மாட்டை அடக்குபவன் வீரன் என்றும், அவனுக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும் என்றும் கூறப்பட்டது. இந்த மரபே பின்னாளில் சல்லிக்கட்டு என திரிந்தது என சொல்லப்படுகிறது.
காளையின் கொம்புகளில் தங்கம் பதிக்கப்படும், அந்த காளையை அடக்கி பட்டா எடுத்தால் வெற்றி வீரர்கள் என அறிவிக்கப்பட்டனர். இன்றைய காலத்தில் இந்த பழக்கங்கள் மாறி தங்க சங்கிலி, பைக், வீட்டு உபயோக பொருள்கள் என பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க; Bhogi pongal 2023: தீமைகள் விலக்கும் போகி பண்டிகை வரலாறு என்ன? இந்திரனை வணங்கும் பின்னணி இதோ!
ஜல்லிக்கட்டு வகைகள்!
ஏறு தழுவுதல், வாடிவாசல் ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு, வடம் ஜல்லிகட்டு போன்ற வகைகள் உள்ளன. சின்ன பகுதியில் மாட்டை அடக்குவதே வாடிவாசல் ஜல்லிக்கட்டு. விளையாட்டு மைதானம் போன்ற பரந்தவெளியில் மாட்டை அடக்குவதை மஞ்சுவிரட்டு என்கின்றனர். வடம் ஜல்லிக்கட்டு என்பது சுவாரசியமானது. சின்ன வட்டத்தில் கட்டப்பட்ட மாட்டை அடக்கி போட்டி முடியும் வரையிலும் அந்த வட்டத்தில் தில்லாக இருக்கும் வீரனே வெற்றியாளன். இதுவே வடம் ஜல்லிக்கட்டு ஆகும்.
இதையும் படிங்க; Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!
ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பு!
ஜல்லிக்கட்டு போட்டியில் எல்லா காளைகளையும் ஓட விடுவதில்லை. அதற்கெனவே பழக்கப்பட்ட புளிகுளம், காங்கேயம் ஆகிய ரக காளைகள் தான் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றிற்கு பிரத்யேக உணவு, உடற்பயிற்சியுடன் வழங்கப்படுகின்றன. காளைகளை வளர்க்கும் நபர்கள் அவற்றை தங்களின் வாரிசு போல வளர்க்கிறார்கள். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனிமவுசு உண்டு. அதனை விற்கும் போது கடும்போட்டி நிலவும்.
ஜல்லிக்கட்டு போராட்டம்
மாடுகள் காயம் அடைவதோடு தேவையற்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் ஆகியவை 2008இல் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வந்தது. கடந்த 2017இல் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள் பல நாள்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பலனாக உலகம் முழுக்க உள்ள தமிழர்களும் போராட்டத்தில் கை கோர்த்தனர். போராட்டங்கள் இந்தியா முழுக்க ஏற்படுத்திய அதிர்வலைகளில் ஜல்லிக்கட்டு நடக்க அனுமதியும் கிடைத்தது.
இதையும் படிங்க; Pongal rangoli designs 2023: பொங்கலுக்கு இந்த ரங்கோலி கோலங்களை போடுங்க! பாக்குறவங்க அசந்து போய்டுவாங்க!