
குளியல் சோப்புகளை தேர்ந்தெடுப்பதற்கு முதலில் உங்கள் சரும வகையை அறிய வேண்டும். சருமம் வறண்டு அரிப்புடன் இருந்தால் (Dry Skin) கிளிசரின், மாய்சரைசர், இயற்கை எண்ணைகளான ஷியா பட்டர் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆட்டுப்பால் கலந்த சோப்புகளும் வறண்ட சருமத்திற்கு ஏற்றது. சருமம் அதிக எண்ணெய் பசையுடன் இருந்தால் (Oily Skin) சாலிசிலிக் அமிலம், டீ ட்ரீ ஆயில், ஆன்டி பாக்டீரியல் சோப்புகளை பயன்படுத்தலாம். இந்த வகை சோப்புகள் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். சருமம் எளிதில் சிவந்து அரிப்பு ஏற்படும் வகையில் அதிக உணர்திறன் வாய்ந்ததாக இருந்தால் (Sensitive Skin) வாசனை மற்றும் வண்ணங்கள் இல்லாத குறைவான ரசாயனங்கள் கொண்ட சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாத சாதாரண சருமம் கொண்டவர்கள் (Normal Skin) மாய்ஸ்ரைசர் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம்.
சோப்பு வாங்குவதற்கு முன்னர் சோப்பின் தரத்தை அளவிடும் TFM (Total Fatty Matter) கணக்கில் கொள்ள வேண்டும். இது சோப்பில் உள்ள கொழுப்பு அமிலங்களின் சதவீதத்தை குறிக்கிறது. கிரேடு 1: 76% அல்லது அதற்கு மேல் கொண்ட TFM கொண்ட சோப்புகள் ஆகும். இவை சருமத்தை மென்மையாக்கும். குறைந்த ரசாயனங்கள் கொண்டிருக்கும். இவை தரமான சோப்புகள் ஆகும். கிரேட் 2 என்பது 70% முதல் 75% TFM கொண்டவை. கிரேட் 3 என்பது 69% அல்லது அதற்கு குறைவான TFM கொண்டவை. இந்த வகை சோப்புகளில் ரசாயனங்கள் அதிகமாகவும், கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும் இருக்கும். இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே சோப்பு வாங்குவதற்கு முன்னர் அதன் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள TFM அளவைப் பார்த்து வாங்க வேண்டும்.
சோப்புகளை வாங்குவதற்கு முன்னர் pH (அமிலத் தன்மை) அளவை கண்டறிய வேண்டியது அவசியம். 4.5 முதல் 5.5 வரை உள்ள சோப்புகள் லேசான அமிலத்தன்மை இருக்கும். இது சருமத்தை சேதப்படுத்தாமல் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. சாதாரண சோப்புகளின் pH அளவு 7 முதல் 9 வரை (காரத்தன்மை) இருக்கும். இது சருமத்தின் இயற்கையான pH சமநிலையைக் சீர்குலைத்து, சருமத்தை வறண்டு போகச் செய்யலாம். எனவே pH அளவு 5.5 குறிப்பிடப்பட்டிருக்கும் சோப்புகள் அல்லது pH Balanced சோப்புகளை தேர்ந்தெடுப்பது நல்லது. இவை சருமத்தின் இயற்கையான அமிலத்தன்மையை பாதுகாக்க உதவும். மேலும் சோப்பில் கலந்துள்ள இரசாயனங்களின் பட்டியலையும் கவனத்துடன் படிக்க வேண்டியது அவசியம். சில ரசாயனங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
சோப்புகளில் கலக்கப்படும் சல்பேட்டுகள் அதிக நுரை வருவதற்காக கலக்கப்படுகின்றன. ஆனால் இவை சருமத்தை வறண்டு போகச் செய்து எரிச்சலை ஏற்படுத்தலாம். அதிக உணர்திறன் வாய்ந்தவர்கள் சல்பேட் அதிகம் கலக்கப்பட்டுள்ள சோப்புகளை தவிர்க்க வேண்டும். மேலும் சோப்புகளில் கலக்கப்படும் பாராபென்கள், செயற்கையான வாசனை திரவியங்கள், மற்றும் நிறமூட்டிகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே வாசனை அல்லாத, நிறங்கள் சேர்க்கப்படாத சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆன்டி பாக்டீரியல் சோப்புகளில் உள்ள டிரைக்ளோசன் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதுடன், ஒவ்வாமைகளையும் ஏற்படுத்தலாம். நல்ல சோப்பை தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் கிளிசரின் மற்றும் இயற்கை எண்ணைகள் கலந்த சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
சோப்பு வாங்குவதற்கு முன்னர் அதை தயாரிக்கும் நிறுவனங்களை பார்க்க வேண்டும். நம்பகமான பிராண்டுகளின் சோப்புகளை தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானது. முடிந்தால் சரும மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அல்லது ஒவ்வாமை பரிசோதனை செய்யப்பட்ட சோப்புகளை தேர்ந்தெடுக்கலாம். ஒரே வாரத்தில் வெள்ளையாகலாம், ஒரே நாளில் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு போன்ற சாத்தியம் இல்லாத விளம்பரங்களை நம்ப வேண்டாம். சருமத்தை பராமரிப்பது என்பது நீண்ட கால செயல்முறையாகும். விளம்பரங்களில் காட்டப்படுவது போன்ற உடனடி முடிவுகள் பெரும்பாலும் பொய்யானது. இந்த விஷயங்களை மனதில் கொண்டு குளியல் சோப்புகளை வாங்கினால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.