
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட இந்த காலத்தில் பலரும் மருத்துவம் மற்றும் அழகியல் சார்ந்த குறிப்புகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இளம் வயதினரை கவரும் வகையில் பலரும் அழகு சாதனப் பொருட்களை விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளனர். வணிக ரீதியாக இது அவர்களுக்கு பலன் அளிப்பதால், அதன் பின் விளைவுகள் குறித்து யோசிக்காமல் இந்த பொருட்களை அவர்கள் விளம்பரப்படுத்துகின்றனர். குறிப்பாக ரெட்டினாய்டு என்று சொல்லப்படும் ஒருவகை கிரீமை விளம்பரப்படுத்த துவங்கி உள்ளனர். ஆனால் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த கிரீமை பயன்படுத்தினால் சருமத்திற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படலாம் என தோல் நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வைட்டமின் ஏ இன் வழித்தோன்றல்களாக ரெட்டினால் மற்றும் ரெட்டினாய்டு கருதப்படுகின்றன. சருமப் பராமரிப்பு துறையில் இவை மிகவும் சக்தி வாய்ந்த பொருட்களாகும். இவை இரண்டும் வேறுபட்டவை. ஆனால் இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிடும் பலரும் இதை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ற என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ரெட்டினாய்டு என்பது சருமத்தின் செல்களை புதுப்பிக்கும் விளைவை ஊக்குவிக்கின்றன. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றன. சருமத்தின் துளைகள் அடைவது தடுக்கப்படுகின்றன. முகப்பரு சிகிச்சை, சுருக்கங்கள், மெல்லிய கோடுகளை குறைத்தல், பிக்மென்டேஷன், சருமத்தின் அமைப்பை மாற்றுதல் ஆகியவற்றிற்கு இது உதவுகின்றன.
ரெட்டினாய்டு என்பது அதிக வீரியம் கொண்ட மருந்தாகும். இதை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாங்கி பயன்படுத்தக் கூடாது. மருந்தகங்களிலும் இது மருத்துவ சீட்டு இல்லாமல் விற்கக் கூடாது. இது நேரடியாக சரும செல்களுடன் வினை புரியலாம். இதன் வீரியம் காரணமாக அதிக பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சருமம் வறண்டு போதல், சருமம் செதில் செதிலாக உதிர்ந்து வருதல், சிவந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவது, சருமம் மிகவும் மெலிந்து தொடுவதற்கு உணர்திறன் மிக்கதாக மாறுவது, சிறிய கொப்பளங்கள் அல்லது தடிப்புகள் ஏற்படுவது, சருமத்துளைகள் ஆழமாக சுத்தம் செய்யப்படுவதால் முகப்பருக்கள் அதிகரிப்பது என பிரச்சனைகள் அதிகரிக்கலாம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ரெட்டினாய்டு பயன்படுத்துவது கூடாது.
அதேசமயம் ரெட்டினால் என்பது வீரியம் குறைந்த வைட்டமின் ஏ வகையாகும். இதே ரெட்டினாய்டு குடும்பத்தைச் சேர்ந்தது என்ற போதிலும் இதன் வீரியம் மிகக் குறைவாகும். இது மருந்து சீட்டு இல்லாமல் சந்தைகளில் விற்கப்படும் ஒரு அழகு சாதனப் பொருளாகும். இது சருமத்தில் உள்ள செல்களுக்கு நுழைந்து ரெட்டினால்டிஹைடாக மாறி, ரெட்டினோயிக் அமிலமாக மாற்றப்பட வேண்டும். இந்த ரெட்டினோயிக் அமிலம் தான் சரும செல்களுடன் வினைபுரிந்து விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நீண்ட செயல்முறை காரணமாக ரெட்டினால் உடனடியாக செயல்படாது. அதன் விளைவுகள் மெதுவாகவும் வீரியம் குறைவாகவும் இருக்கும் முகத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், சருமத்தின் நிறம் மற்றும் அமைப்பு மேம்பாட்டிற்காக இது பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் அழற்சி, எரிச்சல், சிவத்தல், தோல் உரிதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.
ரெட்டினாய்டு என்பது ஒரு பரந்த வகையாகும். அதில் ஒரு குறிப்பிட்ட வகை தான் ரெட்டினால். அதிக வீரியம் கொண்ட ரெட்டினாய்டுகள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உபயோகப்படுத்தப்பட வேண்டும். இது பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு தரும் போதிலும் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதே சமயம் ரெட்டினால் என்பது குறைந்த பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அதன் விளைவுகளை காண நீண்ட காலம் பயன்படுத்த வேண்டும். உங்கள் சரும வகை மற்றும் தேவையை பொறுத்து ரெட்டினாய்டு அல்லது ரெட்டினால் தயாரிப்பை தேர்ந்தெடுப்பதற்கு தோல் மருத்துவரை அணுகி கலந்தாலோசித்து அதன் பின்னரே தேர்ந்தெடுக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ரெட்டினாய்டு பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.