How to Protect Lentils From Insects: பருவமழை காலம் தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய சவாலே சமையலறையில் இருக்கும் பருப்பு வகைகளில் வண்டு வருவது தான். அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.
பருவமழை காலம் தொடங்கி விட்டாலே சமையலறையில் இருக்கும் அரிசி, பருப்புகளில் பூச்சிகள் மற்றும் வண்டு வரும் வாய்ப்புகள் அதிகம். இல்லத்தரசிகள் பருவமழை தொடங்கிய பின்னர் வண்டுகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து தானியங்களை பாதுகாப்பதற்கு பெரும் சிரமப்பட வேண்டி இருக்கும். ஆனால் இந்த பதிவில் சில எளிய வழிமுறை மூலம் வண்டுகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பருப்புகளை நம்மால் பாதுகாக்க முடியும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
பருப்பு அல்லது தானியங்களில் வண்டு வருவதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள ஈரப்பதம் தான். அதிக அளவில் பருப்புகளை சேமித்து வைத்திருந்தால் அதில் இருக்கும் ஈரப்பதமே அதற்கு எதிரியாக மாறிவிடும். எனவே மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை நன்றாக சூரிய ஒளியில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெயிலில் வைத்து எடுத்த பிறகு அறை வெப்ப நிலையில் நன்கு காய வைத்து அதன் பின்னர் காற்று புகாத டப்பாவில் வைத்து அடைத்து விடுங்கள்.
பருப்புகளை சேமிப்பதற்கு டப்பாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரியான டப்பாக்களை தேர்ந்தெடுக்காவிட்டால் அதில் எளிதில் பூச்சிகள் பரவலாம். காற்றும், ஈரப்பதமும் புகாத அளவிற்கு கண்ணாடி, எவர் சில்வர் அல்லது தரமான பிளாஸ்டிக் கன்டைனரில் சேமிக்க வேண்டும். பருப்புகளை சேமிக்கும் டப்பாக்களை கழுவி, நன்கு உலர்ந்த பின்னரே அதில் சேமிக்க வேண்டும். டப்பாக்களில் இருக்கும் சிறு ஈரப்பதம் கூட பூச்சி அல்லது வண்டுகளை வரவழைக்கும். எனவே சரியான கண்ணாடி பாட்டில்கள் துரு பிடிக்காத எவர்சில்வர் பாட்டில்களில் காற்று புகாதவாறு சேமிப்பது அவசியம்.
பருப்பு இருக்கும் டப்பாக்களில் பூச்சி வராமல் இருப்பதற்கு பிரியாணி இலைகள் உதவுகிறது. பருப்பு டப்பாவில் மூன்று முதல் நான்கு பிரிஞ்சி இலைகளை போட்டு வைக்கலாம். இந்த இலைகள் பலமான வாசனை கொண்டது. மேலும் இதில் இருக்கும் காரத்தன்மை வண்டுகள் மற்றும் பூச்சிகளை விரட்டும். இதனால் பருப்புகள் நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பருப்புகளை பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற பூண்டுகளும் உதவும். பருப்பு டப்பாவில் நான்கு முதல் ஐந்து பூண்டு பற்களை சேர்த்தால் பருப்பு கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்கும்.
பருப்பு இருக்கும் டப்பாவில் மூன்று அல்லது நான்கு காம்பு உள்ள காய்ந்த மிளகாய்களை போட்டு வைக்கலாம். இதன் காரத்தன்மைக்கு வண்டுகள் வராது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பை ஒரு துணியில் முடிந்து, பருப்பு டப்பாவிற்குள் போட்டு வைக்கலாம். இதனால் எந்த பூச்சியும் அண்டாது. அல்லது நான்கு முதல் ஐந்து கிராம்புகளையும் போட்டு வைக்கலாம். உங்களிடம் அதிக அளவு பருப்பு இருந்தால் அதை பயன்படுத்த அளவிற்கு மட்டும் வெளியில் எடுத்துவிட்டு மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து விடலாம். இதனால் பல ஆண்டுகள் ஆனாலும் வண்டு வராது.
பருப்பை எடுக்கும் பொழுது எப்போதும் ஈரம் இல்லாத காய்ந்த கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும். கைகளில் எடுப்பதாக இருந்தால் கைகள் ஈரம் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஈரமான கைகளால் பருப்புகளை எடுத்தால் அதில் வண்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த நடைமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினாலே உங்கள் வீட்டு பருப்பு வகைகள் நீண்ட நாட்களுக்கு வண்டு பிடிக்காமல் சுத்தமாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.