சமைக்கும்போது கவனக்குறைவால் குக்கர் அடிபிடித்துவிடும். அந்த கறுப்புக் கறைகளை நீக்க மணிக்கணக்கில் தேய்க்க வேண்டாம். வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே குக்கரை புதுசு போல ஜொலிக்க வைக்கலாம்.
முதலில் குக்கரின் விசில், ரப்பரை தனியாக எடுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அரை ஸ்பூன் டீத்தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த நீரை வடிகட்டி, அதில் கொஞ்சம் டிஷ் வாஷ் லிக்விட் அல்லது ஷாம்பு, ஒரு பெரிய ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்குங்கள். குக்கரை லேசாக சூடு செய்து, அடுப்பை அணைத்துவிட்டு இந்த கலவையை உள்ளே ஊற்றி எல்லா இடங்களிலும் பரவ விடுங்கள். சிறிது நேரம் கழித்து ஸ்க்ரப்பர் வைத்து தேய்த்தால் கறைகள் சுலபமாக வந்துவிடும்.
பாதுகாப்புக்காக குக்கர் விசிலையும் சுத்தம் செய்வது முக்கியம். விசிலில் உணவுத் துகள்கள் சிக்கினால், பிரஷர் சரியாக வெளியேறாமல் ஆபத்து ஏற்படலாம். அதனால், சுடுதண்ணீரில் டிஷ் வாஷ் லிக்விட், பேக்கிங் சோடா கலந்து அதில் விசிலை ஊறவைத்து, பழைய டூத் பிரஷ்ஷால் சுத்தம் செய்யுங்கள். இதேபோல ரப்பரையும் சுத்தம் செய்தால், அதில் உள்ள பிசுக்கு, அழுக்கு நீங்கிவிடும்.
கறைகளை நீக்க ரொம்பவும் அழுத்தித் தேய்க்க வேண்டாம். சூடான கிளீனிங் கலவையில் ஊறவைத்தால், கறை மென்மையாகிவிடும். பிறகு ஸ்க்ரப்பர் வைத்து சுலபமாக நீக்கலாம். குக்கரை பயன்படுத்திய உடனே கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். கறை பட்டவுடன் இந்த டிப்ஸை பயன்படுத்தினால், குக்கர் நீண்ட நாள் புதுசு போல இருக்கும்.
துர்நாற்றம் மற்றும் வெளிப்புறக் கறைக்கு எலுமிச்சை சாறு
குக்கரில் அடிபிடித்த துர்நாற்றம் போகவும், வெளிப்புறத்தில் படிந்துள்ள கறைகளை நீக்கவும் அரை எலுமிச்சை பழத்தில் கல்உப்பு தொட்டு கறை உள்ள இடங்களில் தேய்த்தால் கறை மற்றும் துர்நாற்றம் உடனடியாக மறையும்.
உப்புக்கறைகளுக்கு வெள்ளை வினிகர்
நாம் பயன்படுத்தும் தண்ணீரின் தன்மையால் குக்கரின் உட்புறத்தில் வெள்ளை நிறத்தில் உப்புக்கறைகள் படியும். இதற்கு குக்கரில் சிறிதளவு தண்ணீர் மற்றும் 2 ஸ்பூன் வெள்ளை வினிகர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் வெள்ளைக்கறைகள் முற்றிலும் மறைந்துவிடும்.
ரப்பரைக் கழுவிச் சுத்தம் செய்த பிறகு, அதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஃபிரீசரில் 15-20 நிமிடங்கள் வைத்து எடுத்தால், அதன் நெகிழ்வுத்தன்மை தளர்ந்து போகாமல் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
அலுமினியம் vs ஸ்டீல் குக்கர் எச்சரிக்கை
உங்களுடையது அலுமினிய குக்கர் என்றால், எஃகு ஸ்க்ரப்பர்களை பயன்படுத்த வேண்டாம்; அது குக்கரில் கோடுகளை உண்டாக்கிவிடும். ஸ்டீல் குக்கராக இருந்தால் மட்டுமே கடினமான ஸ்க்ரப்பர்களைப் பயன்படுத்தலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.