
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் ஒருவருடைய அழகு அவரின் கண்களில் தான் இருக்கிறது. நம்முடைய கண்கள் தான் நம் உடலுக்கு விளக்கு. சந்தோஷமாக உள்ள ஒருவரின் கண்களை நீங்கள் பார்த்தால் அதன் பொலிவு தெளிவாக தெரியும். அதுவே ஒருவர் சோகமாக இருந்தால் அவர் கண்கள் பொலிவிழந்து காணப்படும். ஒருவருடைய வாழ்க்கைமுறை அவரின் கண்களில் வெளிப்படும்.
நன்றாக தூங்கி, நல்ல உணவை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கும் நபரின் கண்கள் காண்போரை கவரும். தனித்துவமாக இருக்கும். நமது உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்துவது கண்கள் தான். இன்றைய காலகட்டத்தில் ஓயாத வேலை, தீராத மன அழுத்தம் என மக்களின் கண்கள் பிரகாசம் இன்றி காணப்படுகின்றன. சரியாக தூங்காமல் பலருக்கும் கண்களின் கீழே கருவளையம் காணப்படும். சிலருக்கு கண்ணின் கீழ் பகுதியில் உள்ள இமையின் பைகளில் வீக்கம் கூட வரும். கண்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்காததும் இதற்கு காரணம்.
கண்களின் ஆரோக்கியம் ஒவ்வொரு வயதினருக்கும் வேறுபடும். ஆனால் கண் பாதிப்புகள் அனைத்து வயதினருக்கும் பாரபட்சமின்றி வரும். கண்களின் பாதுகாப்பு அரணாக இருப்பது இமைகள். இதில் கீழ் இமைக்கு கீழே காணப்படும் பை மென்மையான திசுக்களை கொண்டுள்ளது. இந்த திசுகளில் உண்டாகும் வீக்கமே வீங்கிய கண்களுக்கு காரணம். இந்த மென்மையான பைகள் பாதிப்படைந்தால் கண்களில் வீக்கம், வறட்சி, கண்களில் நீர் சூழ்ந்திருப்பது மாதிரி இருக்கும். இது ஆரோக்கியமான மாற்றமல்ல.
வயது காரணமா?
நம் உடலை போர்த்தியுள்ள தோலில் வயது காரணமாக ஏற்படும் தோல் சுருக்கம் மாதிரியான விஷயங்களை மாதிரியே கண்களில் ஏற்படும் வீக்கத்திற்கு வயது முக்கிய காரணியாக உள்ளது. ஆனால் ஒரு நபர் சரியாக தூங்காமல், சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் கண் பிரச்சனைகள் வர தொடங்குகிறது. சூரிய ஒளியை அதிகமாக பார்ப்பது, தோலில் ஏற்படும் அலர்ஜி, கண்களில் வெண்படலம் ஆகிய பிரச்சனைகளும் கண்களில் வீக்கத்துக்கு காரணமாகும்.
கண் வீக்கம் குறைய..
கண்களில் வீக்கம் ஏற்படாமல் தடுக்க தினமும் நன்றாக தூங்க வேண்டும். 7 முதல் 8 மணி நேர உறக்கம் கட்டாயம். ஆரோக்கியமான உணவுகள் உடலுக்கு மட்டுமல்ல கண்களுக்கும் நல்லது. இது தவிர தோல் பராமரிப்பு பயன்படுத்தும் சீரம், கிரீம்கள், கூலிங் கிளாஸ் ஆகியவற்றை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். கண்கள் அதிக வெப்பத்தை உணரக் கூடாது. நீங்கள் சரியாக தூங்காவிட்டாலும், உடலில் நிரீழப்பு ஏற்பட்டாலும் உடலின் வெப்பம் அதிகரிக்கும். இதனால் கண்களில் எரிச்சல், வீக்கம் வரலாம். இதனை வீட்டில் உள்ள பொருள்களால்
இயற்கை முறையில் எப்படி தவிர்க்கலாம் என இங்கு காணலாம்.
இதையும் படிங்க: இனி ஆபரேஷன் வேண்டாம்.. மருந்து வேண்டாம்.. கண் ஆரோக்கியமாக இருக்க 3 அற்புத வழிகள் இதோ..!!
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மிகுந்தது. இது உடலில் உள்ள வெப்பத்தை தணிக்க உதவும். வெள்ளரிக்காயில் வைட்டமின் சி, போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனை உண்பதால் சருமம் பளபளப்பாகும். கண்களில் படிந்துள்ள தூசி, அழுக்கு ஆகிய நச்சுக்களை எதிர்க்க வெள்ளரிக்காய் உதவும். இதனை கண்கள் சிறிது நேரம் வைப்பதால் கண்கள் குளுமையை உணரும். இதில் உள்ள நீர்ச்சத்து சரும செல்களை நீரேற்றமாக வைக்கும்.
பாதாம் எண்ணெய்:
பாதாம் எண்ணெய் கொஞ்சம் விலை அதிகம் தான். ஆனால் இதில் காணப்படும் வைட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கண்களுக்கு கீழே உள்ள மென்மையான திசுக்களை பாதுகாக்க உதவுகிறது. இதனை அங்கு தடவி மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது. சருமம் வலுவாகும் ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன.
கற்றாழை:
கற்றாழை உடலில் பல நன்மைகளை ஏற்படுத்தக் கூடியது. சருமம் ஆரோக்கியமாக இருக்க, முடி நன்கு வளர என கற்றாழை பல விதமாக பயன்படுத்தலாம். இதில் காணப்படும் என்சைம்கள், வைட்டமின் ஏ போன்றவை கண்களுக்கு நல்லது. கற்றாழை ஜெல் ஈரப்பதம் மிகுந்தது. இதனை வீக்கமடைந்துள்ள கண்களின் கீழ் தடவி மசாஜ் செய்தால் வீக்கம் குறையும்.
கிரீன் டீ:
உடல் எடையை குறைக்க பலர் கிரீன் டீ குடிப்பார்கள். இதில் கண்களின் வீக்கத்தை குறைக்கும் ஆற்றலும் உண்டு. கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட், கேலேட்டின் ஆகியவை உள்ளது. இதனால் தோலில் பளபளப்பு ஏற்படும். வயது முதிர்வை தடுத்து இளமையான தோற்றம் தரும். கண்களின் வீக்கத்தையும் விரைவில் குறைக்கும்.
காபி தூள்
பொதுவாக காபி அருந்துவது தூக்கத்தை தடுக்கும். இதனால் மதியத்திற்கு பிறகு காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஆனால் சருமத்தில் உள்ள செல்களை புதுப்பிக்க காபி உதவுகிறது கண்களுக்கு கீழே உள்ள மென்மையான பகுதியை மேம்படுத்த காபி தூள் உதவுகிறது. இதனை ஒரு ஸ்க்ரப் போல செய்து கண்ணைச் சுற்றி அப்ளை செய்யுங்கள். பின்னர் வட்டவடிவில் மெதுவாக 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்வதால் கண்கள் வீக்கம் குறைந்து நன்றாக இருக்கும்.
இதையும் படிங்க: உங்கள் கண்கள் அடிக்கடி துடிக்குதா? ஏன் என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க...!!