
வயதான காலத்தில் எலும்புகள் பலவீனமடைந்து, மூட்டு வலி வருவது சகஜம். ஆனால் இன்றைய காலகட்டத்தில், வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையை சந்திக்கின்றனர். அதுவும் குறிப்பாக, குளிர்காலங்களில் இந்த பிரச்சனை இன்னும் மோசமாகும்.
இத்தகைய சூழ்நிலையில் உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான ஆரோக்கியமான உணவுகளை சிறுவயதில் இருந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அவற்றை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும்.
பொதுவாக எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க போதுமான அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் டி அவசியம். எலும்புகள் மிகவும் பலவீனமாக இருந்தால் ஆஸ்டியோபோராசிஸ் போன்ற கடுமையான பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, காயம் ஏற்பட்டால் எலும்புகள் உடையும் அபாயமும் ஏற்படும். அந்த வகையில், ஆரோக்கியமான எலும்புகளைப் பெற நல்ல உணவு முறை அவசியம். அதாவது கால்சியம், துத்தநாகம், வைட்டமின் டி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். எனவே குளிர்காலத்தில் எலும்புகள் வலுவாக இருக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் எலும்பு வலிமையாக இருக்க இந்த 'ஆரோக்கியமான லட்டு' சாப்பிடுங்க..!
பச்சை காய்கறிகள்:
பச்சை காய்கறிகளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன அவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பல ஆய்வுகளில், வைட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை காய்கறிகளில் நல்ல அளவு வைட்டமின் கே மற்றும் கால்சியம் உள்ளதால் அவை எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும்.
இதையும் படிங்க: அய்யோ வயசாகி விட்டது! எலும்புகள் வலுவாக இருக்க 'இந்த' முன்னெச்சரிக்கைகள் அவசியம்!
பூசணி விதைகள்:
பூசணி விதைகளில் மெக்னீசியம் மற்றும் துத்தநாகத்தின் சிறந்த மூலம் என்பதால் அவை எலும்புகளை அடர்த்தியாக்கும் மற்றும் அதிகளவு மெக்னீசியம் எடுத்துக்கொண்டால் எலும்புகள் வலுவாகும். அதுமட்டுமின்றி உங்களது உணவில் துத்தநாகத்தை அதிகளவு சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் காயங்கள் குணமாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஆரோக்கியமான உணவின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் சுமார் கால் கப் பூசணி விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொழுப்பு மீன்கள்:
சால்மன், டூனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் வைட்டமின் டி நிறைந்துள்ளதால், அவை எலும்பு வளர்ச்சி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே எலும்பு பலவீனமான உள்ளவர்கள் கொழுப்பு நிறைந்த மீன்களை தினமும் உணவில் சேர்த்து வந்தால் எலும்புகள் வலுவாகும்.
எள்:
தாமிரம், மெக்னீசியம், கால்சியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் ஆகியவை எள்ளில் நிறைந்துள்ளன. இவை எலும்பு தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக எலும்பு தேய்மானத்தை தடுக்க எள் பெரிதும் உதவுகிறது. எனவே எலும்பின் ஆரோக்கியத்திற்கு எள்ளை பல வகைகளில் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு:
மேலே சொன்னதையும் தவிர ஆளி விதைகள், சோயாபீன், வால்நட் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக உங்களது எலும்புகள் ஆரோக்கியத்திற்கு புகைபிடிப்பது, மது அருந்துவது, சிவப்பு இறைச்சி அதிக எடுத்துக்கொள்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். வலுவான எலும்புகளுக்கு மேலே சொன்னவற்றை சாப்பிட மறக்காதீர்கள். அதுமட்டுமின்றி அவற்றை குளிர்காலத்தில் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் கூட சாப்பிடலாம்.