ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகளை வளர்க்கும் விதம் வேறுபடும். சில பெற்றோர் கண்டிப்பான விதிமுறைகளுடன் குழந்தைகளை வளர்ப்பார்கள். சிலர் சற்று தளர்வான விதிகளுடன் செல்லமாக வளர்ப்பார்கள். வளர்ப்பு முறை குழந்தைகளின் ஆளுமையிலும், நடத்தையிலும் பிரதிபலிக்கும். எல்லா பெற்றோரும் தன்னுடைய குழந்தைகளை அன்பாகவும் ஆதரவாகவும் வளர்க்கவே விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என சில பெற்றோர் குறைவான நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்கின்றனர். அது மற்றவர்கள் பார்வையில் கண்டிப்பாக தெரியலாம். மென்மையான பெற்றோர் அல்லது கண்டிப்பான பெற்றோர் என்பது சில விஷயங்களை வைத்து நாம் மதிப்பிட முடியும். அப்படியான ஐந்து விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.
நீங்கள் விதிகளை எவ்வாறு கையாளுகிறீர்கள்?
கண்டிப்பான பெற்றோர் குழந்தைகளுக்கு என சில விதிமுறைகளை விதிக்கிறார்கள். அதை குழந்தைகள் எந்த கேள்விகளும் என்று பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். குழந்தைகள் அதை எதிர்த்து கேள்வி கேட்கும் போது அவர்களை கண்டிக்கிறார்கள். விதிகளை மீறும் போது அவர்களுக்கு தண்டனை கொடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. மென்மையான பெற்றோர் தேவையான விஷயங்களுக்கு ஏற்ப விதிகளை சொல்லிக் கொடுக்கிறார்கள் குழந்தைகளுடைய போக்கில் அவர்களின் விருப்பத்தை அறிந்து கொண்டு வளர்க்கிறார்கள்.
தவறு செய்தால் என்ன செய்வீர்கள்?
உங்களுடைய குழந்தை தவறு செய்தால் அதை எப்படி கையாளுகிறீர்கள் என்பது நீங்கள் எப்படிப்பட்ட பெற்றோர் என்பதை வெளிப்படுத்தும். கண்டிப்பான பெற்றோர் குழந்தைகள் செய்த தவறு எப்படிப்பட்டது அதன் விளைவுகள் என்ன என்பதை குறித்து அதிகம் சிந்திக்கிறார்கள். ஆனால் மென்மையான பெற்றோர் அந்த தவறு ஏன் நிகழ்ந்தது என்பதற்கு பின்னால் உள்ள உணர்வுகளை குறித்தும் அதை எப்படி கடந்து வருவது என குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது குறித்தும் சிந்திக்கிறார்கள்.
மரியாதை vs அதிகாரம்:
குழந்தைகளிடம் அதிகாரத்தை காட்டுவதால் அவர்களுக்கு மரியாதையை கற்றுக் கொடுக்க முடியும் என கண்டிப்பாக பெற்றோர் நினைப்பார்கள். அதனால் குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கும். பாசப்பிணைப்புக்கு பதிலாக பயம் உருவாகும். மென்மையான பெற்றோர் இதற்கு மாறாக உணர்வுரீதியாக குழந்தைகளுடன் நெருங்கி பழகுகிறார்கள். குழந்தைகள் அவர்களிடம் எதையும் சொல்லுமளவுக்கு பாதுகாப்பு உணர்வை உணர முடியும்.
இதையும் படிங்க: குழந்தைகள் பார்க்குறப்ப பெற்றோர் செய்யக் கூடாத '4' மோசமான விஷயங்கள்!!
கோபம் வந்தால் எப்படி கையாள்வார்கள்?
குழந்தைகள் கோபப்படுவதையும் சண்டையிடுவதையோ கண்டிப்பான பெற்றோர் கீழ்ப்படியாமல் நடந்து கொள்வதாக நினைப்பார்கள். அதனால் குழந்தைகளை அடக்கவும், திட்டவும் முற்படுவார்கள். மென்மையான பெற்றோர் இது மாதிரியான சூழல்களில் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்து அவர்களை சமாதானப்படுத்தவும் அதற்கான தீர்வுகளை சொல்லவும் தயாராக இருப்பார்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவம் கொடுத்தால் முழுச்சத்து கிடைக்கும் தெரியுமா?
குழந்தைகள் சுதந்திரமாக வளர்கிறார்களா?
குழந்தையை நல்வழியில் வழிநடத்தி செல்ல கண்டிப்பான பெற்றோர் அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் முடிவுகளை எடுப்பார்கள். இதனால் அவர்கள் குழந்தையின் சுதந்திரத்தில் தலையிடுவதை கூட பொருட்படுத்தமாட்டார்கள். மென்மையான பெற்றோராக இருந்தால் குழந்தைகளை சின்ன தவறுகளை செய்ய அனுமதிப்பார்கள். குழந்தைகளின் போக்கிலே அவர்களை வளர்ப்பார்கள்.