
நாம் அன்றாடம் சமையலறையில் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச் டாய்லெட்டை விட அதிகமான பாக்டீரியாக்களை தன்னுள் அனுமதித்திருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு ஸ்பாஞ்ச் ஆனது ஒரு கன சென்டிமீட்டருக்கு 54 பில்லியன் பாக்டீரியாக்களை வைக்கக் கூடும் என ஆய்வில் சொல்லப்படுகிறது. பாத்திரம் துலக்க பயன்படுத்தும் ஸ்பாஞ்ச்சின் மேற்புறம் அழுக்காகும்போது எளிதில் நீங்காது.
இந்த அழுக்குகளில் சேகரமாகும் பாக்டீரியாக்கள் நாம் உணவில் நோய்க்கிருமிகளை பரவ வைக்கக் கூடியவை. நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் ஸ்பாஞ்ச் வைத்து தேய்த்து கழுவும்போது சுத்தமாவதற்கு பதிலாக அழுக்காகிறது. இது உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தக் கூடும். அண்மையில் டியூக் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவப் பொறியாளர்கள் செய்த ஆய்வில், ஸ்பாஞ்ச் ஈரமானதாகவும், நுண்துளைகள் அதிகம் கொண்டதாகவும் இருப்பது கிருமிகளுக்கு ஏற்றதாக உள்ளதென தெரிவிக்கிறது. உதாரணமாக ஒரு ஆய்வகத்தில் பாக்டீரியாவை வளரச் செய்ய உபயோகிக்கும் அகார் தட்டுகளை காட்டிலும் ஸ்பாஞ்சில் நிறைய பாக்டீரியாக்களை வளரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஸ்பாஞ்சுகளில் இருக்கும் பாக்டீரியா முதலில் சாதாரண வயிற்றுப் பிரச்சினைகளில் தொடங்கி நிமோனியா, மூளைக்காய்ச்சல் ஆகிய மோசமான நோய்த்தொற்றை உண்டாக்கும் வாய்ப்புள்ளது. இங்கு ஸ்பாஞ்சில் இருக்கக் கூடிய சில பாக்டீரியாவை குறித்து காணலாம்.
இதையும் படிங்க: குக்கரில் தண்ணீர் கசியுதா? இதைத் தடுக்க 5 சூப்பர் டிப்ஸ்
பாத்திரம் துலக்கியதும் அலர்ஜி வருதா?
உங்களுடைய ஸ்பாஞ்சில் ஸ்டேஃபிளோகோகஸ் பாக்டீரியா இருந்தால் அவை தோல் நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இதனால் கைகளில் ஒவ்வாமை கூட வரலாம். மொராக்செல்லா ஆஸ்லோயென்சிஸ் என்ற பாக்டீரியா கெட்ட வாடையை வரவழைக்கும். இதனால் தோல் தொற்று, கீல்வாதம் கூட வரலாம்.
என்னென்ன பாக்டீரியாக்கள் நோய் உண்டாக்கும்?
ஸ்பாஞ்சில் உள்ள கேம்பிலோபாக்டர் என்ற பாக்டீரியா உங்களுக்கு வயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவை வரவழைக்கலாம். இந்த பாக்டீரியா பொதுவாக கோழி இறைச்சியில் இருப்பவை. நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களிடத்தில் எண்டரோபாக்டர் க்லோகே (Enterobacter cloacae) என்ற பாக்டீரியா நிமோனியா போன்ற நோயை உண்டாக்கும்.
ஈ.கோலை என்ற பாக்டீரியா மோசமான வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை உண்டாக்கும். சிலருக்கு சிறுநீரக பாதிப்பைக் கூட வரவழைக்கலாம். கோழி முட்டையில் காணப்படும் சால்மோனெல்லா பாக்டீரியா அசுத்தமான உணவு, நீருடன் தொடர்பு கொண்டது. இது ஸ்பாஞ்சில் காணப்பட்டால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் வரும். கெலேப்சிலா (Klebsiella) என்ற நுண்ணுயிரி நிமோனியா, சிறுநீர் பாதை நோய்த்தொற்றை ஏற்படுத்தக் கூடும்.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
- பாத்திரம் துலக்க ஒரே ஸ்க்ரப்பரை பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு வகை பாத்திரத்திற்கும் தகுந்த ஸ்க்ரப்பர் பயன்படுத்த வேண்டும். இறைச்சி சமைத்த பாத்திரம், இறைச்சியை அலசிய பாத்திரங்களை கழுவ ஸ்பாஞ்ச் பயன்படுத்தாமல் மற்றொரு ஸ்க்ரப்பர் பயன்படுத்த வேண்டும்.
- ஸ்பாஞ்ச் எப்போதும் ஈரமாக இல்லாமல் உலர்ந்த நிலையில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். ஈரமாக இருந்தால் பாக்டீரியாக்கள் நன்கு வளரும். ஸ்பாஞ்ச் பயன்படுத்திய பின் வெயிலில் உலரவிடுங்கள்.
- பாத்திரம் விலக்கும்போது கையுறைகளை அணிந்து கொள்ளுங்கள். இதனால் அசுத்த ஸ்பாஞ்சில் நேரடித் தொடர்பை தவிர்க்கலாம்.
- அடிக்கடி ஸ்பாஞ்சுகளை மாற்ற வேண்டும். பழைய ஸ்பாஞ்சு அதிக நாட்கள் பயன்படுத்த வேண்டாம்.
- ஸ்பாஞ்சை விட ஸ்க்ரப் பிரஷ், சிலிகான் பிரஷ், மெட்டல் ஸ்க்ரப்களை பயன்படுத்துவது நல்லது. இவற்றை சோப்பு கலந்த வெந்நீரில் ஊறவைத்து சுத்தம் செய்லாம்.
இதையும் படிங்க: சில்வர் வாட்டர் பாட்டிலை நொடியில் க்ளீன் பண்ண இந்த 1 பொருள் போதும்!!