
குழந்தைகளின் பற்களையும் எலும்புகளையும் உறுதியாக அவர்களுக்கு கால்சியம் சத்து தேவைப்படுகிறது. இதற்கு நாள்தோறும் அவர்களுக்கு பால் குடிக்க கொடுக்கலாம். ஆனால் வெறும் பாலை கொடுப்பதற்கு பதிலாக அதனுடன் ஆரோக்கியம் தருகின்ற சில பொருள்களை கலந்து கொடுக்கலாம். இதனால் குழந்தைகளின் பற்கள், எலும்புகள் மட்டுமின்றி உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
வளரிளம் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு சரிவிகித உணவை கொடுப்பது அவசியமானது. அதாவது எல்லா சத்துக்களும் இருக்கும் உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு செயற்கையான ஊட்டச்சத்து பானங்களை கொடுப்பதை விட எந்த வேதிப்பொருட்களும் கலக்காத பானங்கள் கொடுப்பதுதான் ஏற்றதாக இருக்கும். இதற்கு பால் சிறந்த உதாரணம்.
இப்படி கொடுப்பதால் குழந்தைகளும் ஆரோக்கியமாக வளர்வார்கள். நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். ஆனால் வெறும் பாலை குடிக்க கொடுப்பதற்கு பதிலாக அதனுடன் மஞ்சள், துளசி, பாதாம் தூள் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பொருளை கலந்து கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதனால் அவர்களுக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த பதிவில் காணலாம்.
இதையும் படிங்க: நாள்தோறும் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் 'இத்தனை' நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
குளிர் மற்றும் மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு தொற்றுநோய்கள் எளிதில் பரவும். இதிலிருந்து அவர்களை பாதுகாக்க நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். பாலில் சில சிறப்பு உணவுப் பொருட்களை கலந்து கொடுத்தால் அவர்களுடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மஞ்சள்:
பாலில் மஞ்சள்தூள் கலந்து குடிப்பது பல வீடுகளிலும் வழக்கமாக உள்ளது குழந்தைகளுக்கும் இது மாதிரி பாலில் மஞ்சள் கலந்து கொடுப்பது நல்ல பலன்களை தரும் பாலை குடிப்பதை விட அதனுடன் மஞ்சள் சேர்க்கும்போது சுவை மாறுபடும் வளரும் குழந்தைகளுக்கு இது சில ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது. மஞ்சள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் காணப்படும் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் குழந்தைகளுக்கு இன்றியமையாது. மஞ்சளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. சிறுவயதில் ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மஞ்சள் நல்ல பலனை தரும்.
இஞ்சி:
பாலில் மஞ்சள் கலப்பது போல இஞ்சியும் நல்ல பலனை தரும் என கூறப்படுகிறது. இஞ்சியில் பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. குழந்தைகளுடைய உடல், மன ஆரோக்கியத்தில் இஞ்சி நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். இஞ்சி போட்டு பால் காய்ப்பதை விட இஞ்சி தூள் சேர்ப்பது நல்ல சுவையை தரும். இது குழந்தைகளை வாயு தொல்லையில் இருந்து பாதுகாக்கும்.
குழந்தைகளுடைய நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இஞ்சியில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சளி, இருமலை குணப்படுத்த பெருமளவில் உதவுகிறது. சுக்கு காரம் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு கொடுத்தால் கவனமாக இருங்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் ஏன் வருது தெரியுமா? இப்பவே கவனிக்க வேண்டிய விஷயம்!!
துளசி:
பாலுடன் துளசி இலைகளை போட்டு குழந்தைகளுக்கு அருந்த கொடுக்கலாம். இதனால் பாலில் தரம் மேம்படும். துளசியில் காணப்படும் மருத்துவ குணங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. துளசி இலைகளை பாலில் போட்டு கொதிக்க வைத்து கொடுத்தால் இருமல், சளி, காய்ச்சல் பிரச்சனைகளை குறைக்கும். சுவாச பிரச்சனைகளை குறைக்கவும் தவிர்க்கவும் துளசி பால் உதவுகிறது.
பாதாம் தூள்:
பாதாமில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது பாலில் கலந்தால் அதன் சுவையையும் அதிகரிக்கும். குழந்தைகள் ஊட்டம் பெற பாதாம் கலந்த பால் நல்ல தேர்வாக இருக்கும். இதில் காணப்படும் வைட்டமின்கள் குழந்தைகளின் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பாதாம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு அவர்களின் அறிவுத்திறனையும் வளர்க்கிறது. வீட்டில் பாதாம் பொடியை தயார் செய்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.