ஐபிஎல் 13வது சீசனில் அபுதாபியில் இன்று நடந்துவரும் போட்டியில் கேகேஆர் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்கின.
இந்த சீசன் தொடங்கியதிலிருந்து, இந்த போட்டிக்கு முன்பு வரை நடந்து முடிந்த 7 போட்டிகளிலும், டாஸ் வென்ற கேப்டன் பவுலிங்கைத்தான் தேர்வு செய்தார். இந்த போட்டியில் தான், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இருவருமே அதிரடி பேட்ஸ்மேன்கள் என்பதால், அவர்களை பவர்பிளேயில் கட்டுப்படுத்தும் விதமாக பவர்ப்ளேயிலேயே கம்மின்ஸுக்கு 3 ஓவர்களை கொடுத்தார் கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக்கின் அந்த வியூகத்திற்கு பலன் கிடைத்தது. பேர்ஸ்டோவை 5 ரன்களில் க்ளீன் போல்டாக்கினார் கம்மின்ஸ்.
பேர்ஸ்டோ ஆட்டமிழந்தாலும், வார்னர் களத்தில் இருந்ததால் அந்த அணி நம்பிக்கையில் இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கையை சிதைத்து, களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருந்த வார்னரை 36 ரன்களில் வீழ்த்தினார் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி.
அதன்பின்னர் மனீஷ் பாண்டேவும் ரிதிமான் சஹாவும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்தனர். ஆனால் பெரியளவில் அடித்து ஆடவில்லை. களத்தில் செட்டில் ஆகி அரைசதம் அடித்த மனீஷ் பாண்டே, வழக்கம்போலவே கடைசி வரை களத்தில் நின்று பெரிய இன்னிங்ஸை ஆடாமல், அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிதிமான் சஹா 30 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 20 ஓவரில் 142 ரன்கள் மட்டுமே அடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 143 ரன்களை கேகேஆருக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.